பழைய கனவு
மூட்டை எதற்குப் பிரிக்கிறாய்?
மூட்டைக்குள்
யார் முகத்தைப் பார்த்துப்பார்த்துச்
சிரிக்கிறாய்?
உறக்கம் உடைந்து
குருதிஊற்றுப்பெருகும்வேளை
பகலின் சடலம்
நகருமோ?
தூங்கா நேரம் மவுனமாக
தலைகவிழ்ந்து நிற்குமோ?
கனவுதொடாப்
பழைய தூக்கம் தேவை என்று
கோரிக்கை எழுதிக் கொடுத்தால்
இரவுக்கிடங்கு கதவுதிறந்து
எடுத்துத் தருமோ?
அழுக்குப்போகக்
கனவைச் சலவைசெய்யப்
பட்டப்பகலைக் கெஞ்சிக்கேட்டால்
ஒப்புக்கொண்டு வருமோ?
எனினும்
யாரின் யாரின் யாரின்
பழைய கனவுமூட்டையில்
வேர் மடிந்தும் பேர்மடிந்தும்நீ கிடப்பாய்என்று தெரியுமா?உனது
பேரைச்சொல்லி வரமறுத்த தூக்கம்
நூறுநூறு இருக்குமா?
........................................................................தலைப்பு
உறக்கக் கூரை உடையும் ஓசை
11-17-2024 காலை 5-40
கவிச்செம்மல்
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
இது எப்படி
தங்களுக்கு முடிகிறது?
அந்த கனவின் மெல்லிய
இமை மயிர்களில்
மரணக் கிணறு வெட்டி
மோட்டார் சைக்கிள் விடுகிறீர்கள்?
திகில்
தக்கிளி நூற்கிறது
மின்னல் இழைகளில்.
காதலின் முகம் இன்னும்
இலக்கியத்தில்
முகம் தெரியாத
ஒரு முகவரிக்குள் தான்
புதைந்து கிடக்கிறது.
காதலனோ காதலியோ
இருக்கவேண்டும் என்ற தேவையே
இல்லாமல்
ஒரு புழுக்கூட்டு மண்டல
கனவின் பிழம்புக்குள்
ஒரு புழுக்குடைச்சலை அனுபவிப்பது தானே
காதல்!
இறக்கையில் பறக்கும்போதோ
"இறக்கையில்" கரையும்போதோ
பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த மரண சமுத்திரங்களில்
"விரால்"பாய்வது தானே காதல்.
கனவின்
காஸ்மாலஜியிலும் ஒரு
கணிதம் உண்டு.
உங்களுக்கும்
காதல் வருமா? வராதா?
"வரும் ஆனா வராது" என்று
சொல்லும்
குவாண்டம் தானே காதல்.
உங்கள் கவிதையில் பிரிக்கப்படுவது
மூட்டை அல்ல.
தேன்கூடுகளின் குவியல்.
எத்தனை கொட்டினாலும்
அது
இனிமை இனிமை இனிமையின்
அடமழை தான்.
______________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக