திங்கள், 29 ஜூன், 2020

மரம்



மரம் 
------------------------------------------------------------------ ருத்ரா 



கலிஃபோர்னியாவில் 
நான் நடைபயிற்சிக்கு செல்லும்போது
இது வரை வந்து
முட்டி விட்டுத்தான் திரும்புவேன்.
இது என்னத்தை
எனக்குச்சொன்னது?
இதனிடம் நான்
என்னத்தைச்சொன்னேன்?
அந்த அம்புக்கூடு போன்ற‌
இலைக்கூட்டத்தில்
எத்தனை குருட்சேத்திரங்களோ?
காற்றில் அவை
சிணுங்கும்போது
அந்த ரத்தம் சிந்திய போரை
சொட்டு சொட்டாக‌
என் மீது ஊற்றுகிறதோ?
மனிதனுக்கு
ஆசை ஆசை  அத்தனை ஆசை!
அவன் மயிர்க்கண் தோறும்
அவனைக்
கழுவில் ஏற்றி
உயிர் உள்ளம் எல்லாவற்றையும்
கோத்துக்கொண்டு
அந்தப்பேய்
இன்னும் இன்னும் உச்சிக்குப்போகிறது.
எனக்கு அந்த 
தாமிரபரணிக்கரை
மருத மரங்கள் நினைவுக்கு
வருகின்றன.
முண்டு முண்டாய் அடி மரம்.
கிளைகளும் இலைகளும்
குளிர் காற்றை என் மீது
சாமரம் போல் வீசுகிறது.
அதனுள்ளும் கொப்பளிக்குமா லாவா?
தெரியவில்லை.
இருந்தாலும் இலை இடுக்குகள் எல்லாம்
ஈடன் தோட்டத்து
இச்சை முத்தங்கள்
அந்த பச்சை இலைக்கொளுந்துகளில்!

=======================================================

சனி, 27 ஜூன், 2020

அதை விசாரித்தேன்





அதை விசாரித்தேன்
_________________________________________ருத்ரா

அதை விசாரித்தேன்
எங்கே என்று.
அங்கே கை காட்டினார்கள்.
ஆம்.
அந்த மார்ச்சுவரியில் தான்
எல்லாம் கிடந்தது.
நம் நியாயங்கள் மனித நீதிகள்
எல்லாமே.
என் இனிய நண்பனே!
குப்பைத்தொட்டிக்கும்
தேர்தல் பெட்டிக்கும்
உள்ள வித்யாசத்தை
என்றைக்கு நீ
புரிந்து கொள்ளப்போகிறாய்?

____________________________________

அது





அது
___________________________________________ருத்ரா

எதையும் 
பாசிடிவாக நினை.
நம்பிக்கை மருந்தை
உன் சிந்த‌னை ஊசியில் ஏற்று.
விளைவுகள்
உடனே தெரியாது.
சொட்டு சொட்டய் உன்
உள்ளத்து சமுத்திரத்தில்
திவலைகள் சேர்த்து
அலைகள் ஆகும் வரை
உருண்டு திரண்டு கொண்டிருக்கும்.
உன் வாழ்க்கையில்
இடறிக்கொண்டே இருப்பது
உன் மரண பயம்.
அந்தப் பயணத்தில்
அது
எங்கோ ஒரு தூரத்தில்
மைல் கல்லாய் நடப்பட்டிருக்கிறது.
அதற்கு நீயேவா
நடுகல் நட்டி
நடுங்கிக்கொண்டிருப்பது?
வாழ்க்கையின் இனிய தீவுகள் 
உனக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
அதற்கு நீயே
கட்டுமரமாவது கட்டி
கடக்க முயலலாம் என‌
நினை.
அதுவே 
உன் தினச்சூரியனில்
சிதறும் விடியல் பிசிறுகள்.
அதற்குத்தான் சொல்கிறேன்.
பாசிடிவாக நினை..
நினை..
ஆம் நினை..
.........
எதோ கல் தடுக்கி விழுந்தேன்.
கால் கட்டைவிரலில்
ரத்தம் கொட கொடவென கொட்டியது.
அருகில் உள்ள‌
அந்த அரசினர் ஆஸ்பத்திரியில
கட்டு போட்டுக்கொண்டேன்.
சரி வருகிறேன்..
என்று கிளம்பினேன்.
"சற்றுப்பொறுங்கள்.."
ஏன் சார்?
ரேபிட் டெஸ்டில் 
உங்களுக்கு "பாசிடிவ்"வந்திருக்கிறது.
அந்த டெஸ்டிலும் 
பாசிடிவா 
என்று பரிசோதனை செய்யவேண்டும்.
அது வரை நீங்கள்
தனிமைப்படுத்தப்பட வேண்டும்..
பாசிடிவ் ஆக சிந்திக்க வேண்டும் என்று
நான் சிந்திப்பதற்குள்ளேயே
"அது"
"பாசிடிவை"
லட்சக்கணக்காய் பிரிண்டு போட்டு
சுடச் சுட விற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த மருத்துவ மனையில் 
மண்டைநிறைய முள்ளுகளோடு 
அது "இளித்துக்கொண்டிருந்த"
போஸ்டர்கள் 
இங்கும் அங்குமாய்....
இப்போது 
நான் இன்னும் இறுகிப்போனேன்.
ஆம் ..
பாசிட்டிவ்வ்வ்வ்வ்வாக...நினை..
அது 
நெகட்டிவ் ஆகி விடும் என்று.

================================================


வெள்ளி, 26 ஜூன், 2020

anachronym



once upon a time
war was meant
blood shed.
but today
war is meant
a heap of dollars.
man got tired of wars.
war now is
anachronym
to man
and to his own beauty of
peace and love.

_________________________ruthraa

வியாழன், 25 ஜூன், 2020

இருட்டுக்கடை

இருட்டுக்கடை
=========================================ருத்ரா

இருட்டுக்கடை என்றாலும்
ஆயிரம் வாடிக்கையாளர்களின்
முக வெளிச்சம் அது.
இனிப்பு என்றாலே
அல்வா தான்.
அதற்கு ஏது மரணம்?
தொழில் அக்கறையில்
அன்போடு பிசைந்து தரும்
அந்த இனிப்பின் செழிப்பில்
லயித்துப்போன‌
நெல்லைச்சீமையே 
அங்கு சுருண்டு கிடக்கும்.
அந்த இனிப்பு 
திருநெல்வேலி தாமிரபரணியிலும் 
குமிழி விட்டுக்கொண்டிருக்கும்.
வரிசையில் நின்று
அல்வா வாங்கித்தின்ற
எமனுக்கு பயம் வந்து விட்டது.
இந்த அல்வாவை வைத்து
எமன்களுக்கே 
அல்வா கொடுத்துவிடுவானோ?
அவன் பயந்து போய்
தன் எருமைக்குப்பதில்
கொரோனாவை ஏவி விட்டான்.
அன்னார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.


_____________________________________








புதன், 24 ஜூன், 2020

விசாரணை





விசாரணை
_____________________________________ருத்ரா

கேள்விகளுக்கு
பதிலைத்தானே வாங்கவேண்டும்.
"உயிரை"வாங்குவது
என்ன முறை?
என்ன அறம்?
சிறைக்கம்பியின் பின்னே
கேள்விகள் கேட்பதே
கேள்விக்குரியதாக ஆகி விட்டனவே.
ஜனநாயகத்தை
போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பினார்கள்.
ரிபோர்ட் வந்தது.
லத்திகளே செங்கோல்கள் என்று.


______________________________________________


செவ்வாய், 23 ஜூன், 2020

"புரி ஜகன்னாதர் ரதம்"

https://www.ndtv.com/india-news/rath-yatra-in-puri-today-but-without-devotees-in-a-historic-first-2250585

என் டி டிவிக்கு மிக்க நன்றி.

"புரி ஜகன்னாதர் ரதம்"
________________________________________
ருத்ரா


அரசாங்கமே வரைந்த‌
அற்புதக்கார்ட்டூன் இது.
அதோ வருவது
பிரம்மாண்டமான "கோரோனா"
அதில் நசுங்கக்காத்திருக்கும்
உயிர்கள் அவை.
"சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்."
உபநிஷதங்களும் சொல்லிவிட்டன.
ஆயிரம் கழுத்து ஆயிரம் கண்கள்
உடைய அது
அசைந்து அசைந்து வருவதே
ஒரு அழகு.
"காலடியார்"பஜ கோவிந்தமே
பாடி பாடி விட்டார்.
"ஜனனம் மதுரம்.
மரணம் மதுரம்."
அதோடு 
கோரோனாவும் மதுரம்.

-----------------------------------------------------------




ஞாயிறு, 21 ஜூன், 2020

அப்பா

அப்பா
===============================================ருத்ரா



தந்தையை நினைவு கூர்வது
வைரத்தை எப்போதும்
பட்டைத்தீட்டிக்கொண்டிருப்பதை போல் தான்.
ஒவ்வொரு ஆண்டும்
ஒரு கதிர் துடிப்பு.
இன்று நான் தந்தையாக இருப்பது
மிக்க மகிழ்ச்சி
எனக்கு இப்போது 
தந்தை இல்லாத போதும்.
கால வகுத்தல் வாய்ப்பாட்டில்
மிச்சம் விழாத எண் அல்லவா அவர்.
வகுக்க முடியாத "ப்ரைம் நம்பர்"அவர்.
ஒரு கோணத்தில் நாத்திகராய் நிற்பார்.
இன்னொரு கோணத்தில்
புராணங்களை
ஒரு கீற்று விடாமல்
இழை பிரித்துக்காட்டுவார்.
எங்களுக்கு படிப்பு வழங்கினால் போதும்
வேறு சொத்து எதற்கு என்று
பொருளாதாரக்கடலில்
நீந்த விட்டு 
ஆனால்
நம்பிக்கையின் கட்டுமரமாய்
கூடவே மிதப்பார்.
என் தந்தை பட்டங்கள் வாங்கியதில்லை.
பத்திரிகைகளின் பத்திகளில்
புரண்டு கிடந்ததில்
அவர் எங்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.
தத்துவங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும்
என்பது ஒரு சித்தாந்தம்.
என் தந்தைப் பேச்சைக்கேட்ட போது
தத்துவங்கள் கடவுளைச்சுரண்டும்
வெறும் சொற்கள் தான்.
சுரண்டி சுரண்டி
சிந்தனைச்செதில்கள் உதிர்ந்ததே மிச்சம்.
சிந்தனை மட்டுமே அங்கு மிஞ்சும்.
கடவுள் இல்லை என்பதே
அங்கு ஒரு புன்சிரிப்பாய் காட்டிநிற்கும்.
என் தந்தை சொன்னார்.
விபூதி என்பது
மனிதனை வெறும் வெட்டியானாய் ஆக்க‌
தரப்படுவதில்லை.
பயப்படாதே கடவுளைக்கண்டு கூட‌
என்பதே அதன் உட்கிடக்கை.
கடவுளே
வா உன்னைக்கண்டு பயப்படவும்
நான் தயார்.
அதற்காக சுனாமியையும் கொரோனாவையும்
வைத்து பூச்சாண்டி காட்டாதே.
நீ
என்ன அறிவின் ஒளிப்பிழம்பா?
இல்லை
அறியாமையின் முரட்டுத்திரையா?
எப்படி இருந்தாலும்
நீ எங்கள் எதிரில் வா.
வந்து 
உள்ளேன் ஐயா சொல்லு.
இல்லை நான் இல்லை என்று சொல்லு.
என் அப்பா 
இப்படியெல்லாம்
பாஷ்யம் சொல்லவில்லை.
ஆனாலும்
இல்லை என்று 
சொற்களில்
தூவிவிட்டுப் போய்விட்டார்.
எதை நான் இல்லை
என்று சொல்வது
என் அப்பாவையா?
கடவுளையா?
அப்பா இல்லை என்றால் கூட‌
அப்பா இருக்கிறார் என்று சொல்லும்
ஆத்திகன் நான்.
அப்பாவுக்கே கடவுள் இல்லை
என்று நான் தெரிந்து கொண்டபோது
நான் ஒரு நாத்திகன்.

======================================================









"ஊக்கு அருங் கவலை நீந்தி"

"ஊக்கு அருங் கவலை நீந்தி"
===========================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..34)


ஒரு சொல்லும் உதிரா கடுவாய் இறுப்ப‌

குவளை உண்கண் இமை அவிழ் மறுக்க‌
குளிர்மதி குறைந்து மதிப்பின்னீர‌
தேய்ந்த புன்னகை பாம்புரி அன்ன‌
முகம் மறைத்து பூஞ்சினம் காட்டினள் என்?
என்ன கணு அமை ஒத்த கவின் தோள் மல்லன்
வினாஅய் வெருவி நின்றக்கால் அணியிழைத்தோழி
ஆர்த்த கலியில் சொல்லின் அருவி தண்ணிய‌
பாசிடை வீழ் ஒலி தடாரி முழக்கின் 
தளிர் இடை முரலும் இன்னொலி மிழற்ற‌
பறையும் அரிகுரல் கேட்டனன் ஆங்கே.
ஆறு அலை வன் தொழில் கொள்ளையில்
முளி படு பொரிபடு முள்ளின் ஓமை
சாய்க்கும் வரிமா எதிர்ப்படும் போழ்தும்
புற்றம் நுழைத்த  நீள்வாய்க்கொடு எயிற்று
குரூஉ மயிர் யாக்கைய எண்கின் 
வள்ளுகிர் கூர்படு பேழ்க்கையின் போழ்தும் 
பசுங்குடுமிய மரம்செறி மன்று 
கடற்ற சுரத்து வறள் நெடு பரந்தலை 
பாழிடம் சேர்ந்து நோன்ற போழ்தும் 
கடை கோல் தளிர்த்த சிறு தீ அன்ன 
செம்பிஞ்சின் அடர்தந்த பசலை நோயின் 
இடர்ப்பட்டாள் உடலுடன் உடன்றாள் 
நின்னை உள்ளியும் பெருந்தீ ஆங்கே 
பற்றிக்கிடந்து  அழல் தழீஇய போழ்தும் 
ஊக்கு அருங்கவலை நீந்தி 
ஊர்தரும் தமியன் நின்பால் 
உருக்கிடை நெய்யென துடிப்பது 
நினை உலுக்கியது எவன் நீ 
உணராபோல் நீள்சுரம் கடாஅய் இறந்தாய்?

===============================











சனி, 20 ஜூன், 2020

நிழல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

நிழல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
_________________________________ருத்ரா

அப்பா சூரியகிரகணத்துல சூரியனுக்குள் தெரிகிற நிழல்
வட்டமா இல்லையே..ஒரே முள்ளுகளாத்தெரியுது..

ஆமாண்டா அது சந்திரன் இல்லை.

ஏன் அப்படி?

அது கொரோனாடா..

________________________________________

வெள்ளி, 19 ஜூன், 2020

வாழ்க இந்தியா!

வாழ்க இந்தியா!
==========================================ருத்ரா

பன்றிக்கொழுப்பு
தடவிய தோட்டாக்களும்
பசுக்கொழுப்பு
தடவிய தோட்டாக்களும்
அன்று
ஒரே தோட்டாவாய் சீறியதில்
பூத்தது தான்
நம் மூவர்ண ரோஜா!
இன்று நாம்
தோட்டாக்களில்
நான்கு வர்ணம் பூசாமல்
கூர்மையோடு பாய்ச்சுவோம்.
நம் தேசத்தை 
எந்த கோணத்தில் இருந்து
பார்த்தாலும் அது
கோவிலாக‌
மசூதியாக‌
தேவாலயமாகத் தான் 
தெரியும்.
ஆனால் உள்ளிருக்கும்
தெய்வமோ
ஜனநாயகம் ஜனநாயகம்
ஜனநாயகம் மட்டுமே!
மனித நேயத்தின்
சமநீதித் தராசுகோல்
செங்குத்தாகவே இருக்கும் வரை
நம் தேசத்து ராணுவம் தான்
உலகத்திலேயே 
பலம் வாய்ந்தது.
வெள்ளிப்பனிமலை
மீது உலாவுவோம்
ஆனால்
அங்கே வானத்தில்
அங்கே வீசும் காற்றில்
எல்லாம்
நம் கண்முளைத்து
காவல் செய்குவோம்.
ந‌ம் வீரர்களே
நம் இதயத்துடிப்புகள்.
வாழ்க இந்தியா!
வெல்க இந்தியா!

=============================================

புதிதாய் ஒரு நோபல் பரிசு





புதிதாய் ஒரு நோபல் பரிசு
__________________________________________ருத்ரா

இந்த உலகையே
குலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை 
நிறுத்துகிறது.
கிரிக்கெட் மைதானங்களை
காலியாகவே வைத்திருக்கிறது.
கோவில்களுக்கு
வழிபாட்டுக்கூடங்களுக்கு
பூட்டு போடுகிறது.
விழாக்கள் இல்லை.
பண்டிகைக்கூட்டங்கள் இல்லை.
பிரம்மாண்ட தேர்களும் நகர இயலவில்லை.
இது பற்றி
கடவுளுக்கும் பிராது போயிற்று.
கடவுளுக்கும் கூட சனிதோஷம் பிடிக்கும்
என்று 
சனி பகவான்களை கும்பிடுகிறீர்கள்.
அப்புறம் என்ன?
என்று குறும்பாய் சிரிக்கிறார் கடவுள்.

ஆகாசத்திலிருந்து அசரீரி ஒலிக்கிறது.
"கடவுள்கள் நாங்கள் எல்லோரும்
ஊரடங்கில் இருக்கிறோம்.
முகக்கவசங்களில் தான் இருக்கிறோம்.
இனி உங்கள் கடவுள் கொரோனா மட்டுமே"

பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூடங்களையே
கிலியில் ஆழ்த்தி
குழப்பம் செய்து கொண்டிருக்கிறது.
ஆற்றல் மிகுந்த ஹைட்ரஜன் குண்டுகள் கூட
இதன் முன்னே வெறும்
பூச்செண்டுகள்.
எனவே இந்த ஆண்டு
இதற்கு மட்டுமே "நோபல் பரிசு"
என்று நோபல் கமிட்டி
ஒரு மனதாய் தேர்ந்தெடுத்துவிட்டது.

ஆம்
அதோ பாருங்கள்
புன்னகையுடன்
அதுவே தான்
"கொரோனா" தான்
அந்த பரிசுக்கு நன்றி தெரிவித்து 
இன்னும் அதிகமாய்
தெறிக்க விடுகிறது!

==============================================

செவ்வாய், 16 ஜூன், 2020

ஒரு சொற்பொழிவு

ஒரு சொற்பொழிவு

==========================================ருத்ரா

கம்பராமாயணம்

சொற்பொழிவு மழைகளின்

ஊற்று.

ஒரு வேடன் கிரவுஞ்சபட்சிகளில்

ஒன்றை அம்பெய்ய அது வீழ்ந்தது.

இணையான மற்ற பறவையும்

பிரிவின் துயரம் தாங்காமல்

வீழ்ந்து இறந்தது.

வேடனுக்கு பறவையின் மாமிசம்

அவன் வயிற்றுப்பசிக்கு உணவு

அவ்வளவு தான்.

ஆனாலும் அந்த பறவையின்

பிரிவுத்துயரம்

கண்ணுக்குத்தெரியாத ஒரு அம்பாய்

வேடனைக்குத்தி துளைத்தது.

ராமனும்

தசரதனும்

பாத்திரங்கள் ஏந்தி வந்தார்கள்

அந்த வேடன் எழுதிய ஏடுகளில்

அரங்கேறினார்கள்.

ஆடு மேய்த்தவன் காளிதாசன் ஆகி

சமஸ்கிருத இலக்கியங்கள் படைத்த‌

தேசம் அல்லவா.

காளிதாசனுக்கு முந்தியே

இந்த வேடனும்

ஒரு "இதிகாசம்"படைக்கும் புலவன்

ஆகிவிட்டான்.

இடையே

நாரதர் தூண்டுதல் மற்றும் ஊக்கங்கள்

கொடுத்தார்.

இதில் இன்னுமொரு

முக்கியமான "பாத்திரம்" இருக்கிறது.

அது தான் "மரா மரம்"

இது தான் வேடனை ராமன் பெயரை

ஒலிக்க உதவியது.

ஆனால்

இதில் ஒரு பேருண்மை ஒளிந்து கிடக்கிறது.

அந்தக்காடு

அந்த மராமரம்

எல்லாம் நம் தமிழின் சங்ககால இலக்கியத்தில்

இருக்கிறது.

மரவமும் குரவமும் மிகுந்த

காடு பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

மரவ மரம் தான் அங்கே மரா மரமாய்

ராமன் பெயரை ஒலிக்கிறது.

இன்னும் மரா மரம் ராமனைத்தொடர்ந்தே

பயணிக்கிறது.

வாலியை நேரடியாக வதம் செய்யுக்கூசி

அம்பை ஏழுமராமரங்களை துளைத்து

எய்தியதாக வருகிறது.


வான்மீகியார் என்ற‌

சங்ககாலப்புலவர் ஒரு பாடல்

எழுதியிருக்கிறார்.

புறநானூறு 358 ஆம் பாடல்.

இவர் ஏன் அவராயிருக்கக்கூடாது

என்று 

நாம் கேட்டால்

அவர் ஏன் இவராயிருக்கக்கூடாது

என்று அவர்கள் கேட்கமாட்டார்கள்.

ஏனெனில்

அவர்கள் உடம்பெல்லாம் மூளை

மூளையெல்லாம் சிந்தனை.

சிந்தனை எல்லாம் வஞ்சனை

என்று

பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்.

அவர்கள் 

இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் இவரை அவர் தான்

என்று 

சொல்லிவிட்டால் 

இராமாயணப்பழமை என்ன வாகும்?

ராமன் லட்சக்கணக்கான வருடங்களுக்கு

முன் பிறந்தவன் அல்லவா

அவர்கள் "கதைப்பு"படி?

ஆனால்

வடநாட்டு வால்மீகி என்ற பெயர்

சங்கத்தமிழ்ப் புலவர்களுக்கும்

இருந்திருக்கலாம்.

நம் வால்மீகியும்

புற்றுக்களிடையே தவம் இருந்தவர்

என்று 

ஆசிரியர் குறிப்பு சொல்கிறது.

இவர் எழுதிய பாடலும் 

துறவறத்தை வற்புறுத்துகிறது.

ஏன்

சங்கப்புலவர்களும்

வாழ்வின் நிலையாமையைப் பற்றி

வலியுறுத்தி பாடியிருக்கிறார்களே.

ஆனால் வால்மீகி என்ற வடசொல்

நம் மடியில் உட்கார்ந்து

பல காலமாய் விளையாடிக்கொண்டிருந்தது.

வடசொல்லும் தென்சொல்லும்

தமிழ் தான் என்பதும் 

நமக்கு தெளிவாய் தெரிகிறது.

ஆனால் 

இந்த பகைமை

கிரேக்க மொழியின் 

அத்தீனிய ஸ்பார்ட்டா போன்ற‌

உட்பிரிவுப்பகை போன்றதாக 

இருக்கலாம்.

நிறை மொழி எனும் தமிழும்

மறைமொழி எனும் 

மறைந்து போகும் நிலையில்

உள்ள வட தமிழும் 

தொல்காப்பியர் எழுத்துக்குள்ளும்

கலந்து நிரவி இருக்கின்றன.

வால்மீகித் தமிழ் என்ன பாடுகிறது

என்று பார்ப்போம்.(புறம் 358)



"பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

ஒரு பகல் எழுவர் எய்தி யற்றே!

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆதலின்

கை விட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடாஅள் திருவே;

விடாஅ தோர் இவள் விடப்பட்டோரே."


ஒரு பகல் எழுவர் எய்தியற்றே 

என்ற வரியில் 

ஒரே நாளில் அரசர்கள் மாறிவிடுவர்.

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் பகையால்.

எனக் கூறுகிறார்.

தவம் செய்பவன் முன் அரசன் தூசி

என்பது அவர் கருத்து.

ஆனால்

கைவிட்டனரே காதல் 

என்று காதலை இங்கு

ஏன் சொல்லுகிறார்?

"தவத்துக்கு"இல்லறம் உதவாது.

இல்லறம் 

காதலின் மேல் கட்டப்பட்டது

அதனால் 

அப்படி எழுதுகிறார்.

அது சரி 

வால்மீகி என்ற துறவி இப்படி 

காதல் பற்றி எல்லாம் 

எழுதுகிறாரே 

என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் 

வால்மீகியின் கம்பராமாயணத்தில் 

"அகமும் புறமும்" நிரவியே 

எழுதப்பட்டிருக்கிறது.

இதை வைத்தே அவர் தமிழ் வால்மீகி 

என்று சொல்லிவிடலாம்.

அண்ணா அவர்கள் 

அந்த "அகப்பாடல்களையெல்லாம்" 

கம்பரசமாய் நமக்கு காட்டினார்.

இதில் உள்ள 

உண்மை ஆராய்சசிக்குட்பட்டது.

================================================

(சொற்பொழிவு தொடரும்)

கீற்றுகள்





கீற்றுகள்
_______________________________________________ருத்ரா

வானத்துணியில்
தைத்து தைத்துப்பார்க்கின்ற‌
கீற்றுகளே!
ஏதாவது ஒரு ஓவியம்
தைப்பதற்கு வருகிறதா?
காற்றின் அசைவில் 
பொங்கி வரும் 
ஊற்றில் அல்லவா
அந்த தூரிகைக்கீற்றுகள்
இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்றன.
அந்த ரவிவர்மா 
அப்படித்தான்
ஒரு தாய் தன் குழந்தைக்கு
பால் ஊட்டுவதாக‌
உயிர்ப்போடு
வரைந்திருந்தான்.
இன்று வரை 
அவள் அன்பின் திரைச்சீலைக்குள்
அந்த பிஞ்சுக்குழந்தை
இந்த பிரபஞ்சத்தையே
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.
பிக்காசோ எனும் நுண்ணியல் கலைஞன்
தூரிகையின் தலைமயிரைப்பிய்த்து
இப்படியும் அப்படியுமாய்
அசைத்து
வண்ணங்களை
உடைத்துக்காட்டியிருந்தான்
ஒரு பிரசவத்தின் 
கன்னிக்குடம் உடைந்து
அங்கு ஒரு சமுத்திரம்
சிரித்துக்கொண்டு 
அலைகளை சிலுப்பியது.
அந்தப்பெண்ணைத்
தேடிப்பார்த்தால்
பெண் தெரிவாள்.
தேடல் தான் அங்கே ஓவியம்.
மொண்ணைக்கண்களுக்கு
வெறும் திரை மட்டுமே தெரியும்.
கீற்றுகளே!
உங்களது ஓவியமும் 
நன்றாகத்தெரிகிறது.
இந்த வானத்தை சிறைக்கம்பிகள்
மறைக்க இயலுமா?
மானிட எழுச்சியை
மறைக்கும் ஆதிக்க மேகங்கள்
நிலைக்குமா இங்கு?
இந்தக்கேள்வியைத்தானே
கூர்மையாக‌
தைத்துக்கொண்டிருக்கிறாய்.
வெளிச்சப்பிசிறுகளில்
பிதுங்கி வரும் 
விடியல் சித்திரங்களும்
அதோ
உன் கீற்றுகளிடையே
கண் சிமிட்டுகின்றன.

=============================================


திங்கள், 15 ஜூன், 2020

ஒரு புதிய உதயம்







ஒரு புதிய உதயம்
========================================ருத்ரா

இன்னும் கொஞ்சம்
சம்பாதிக்கலாமே
என்பது தான்
ஒவ்வொருவனுக்கும் ராஜகிரீடம்.
நசுங்கிய டால்டா டப்பாவில்
கிடக்கும்
அந்த சில்லறைச்சத்தங்கள் தான்
இப்போது அவன் கேட்கும்
ராஜ சங்கீதம்.
இது அவனுக்கு
வயிறு புடைக்கும்
விருந்தை
கனவுகளாக்கி கொடுக்கிறது.
இமயத்தின் விளிம்பில் நின்று கொண்டு
இன்னும் ஒரு
கூழாங்கல் உயரம்
ஏறிவிட வேண்டும்
என்று நினைப்பதே
வெற்றிகளின் விஞ்ஞானம்
ஆம்
அந்த வானம் முழுவதையும்
என் பாக்கெட்டில் நிரப்புவதே
இந்த மாத டார்கெட்.
அடுத்த மாதம்
இந்த கோள்களையெல்லாம்
சூயிங் கம் ஆக்கி
சவைப்பதே என் டார்கெட்.
அதன் புல்ஸ் ஐ
என்னைத்தான் எனக்கு மட்டும் தான்
நோக்குகிறது
அல்லது
நோக்கப்படுகிறது.
இந்த மனிதர்களின்
டார்கெட் வெறியில்
மக்களையெல்லாம்
ஒரே குட்கா சுவைப்பின்
போதை வெளிச்சத்தில்
பார்க்க வைக்கிறது..
ஆம்
இப்போது
ஹிட்லர் அல்லது முசோலினி.
இவர்கள் காலடியில்
மற்றவர்களின் ஆசைகள் கனவுகள்
உடல்கள் உயிர்கள் எல்லாம்
பிணங்கள் பிணங்கள் தான்.
பொருள் முதல் வாதத்தின்
ரத்தக்களரிகளில் கூட‌
முண்டியெழுந்து
குடைக்காளான்கள்
தலை நீட்டுகின்றன.
செங்குடைக்காளான்கள்.
ரத்த துடிப்புகளில்
இந்த மனித சமுதாயம்
புரிந்து கொள்ளுகிறது
இந்த கட்டுக்கரன்சிகளும்
கட்டிடங்களும்
ஒரு பிரம்மாண்ட கல்லறையாய்
பயமுறுத்துகிறது என்று.
பிக் பேங்க் வெடித்து தான்
இந்த பிரபஞ்சம் இலை போட்டு
பந்தி விரித்தது என்றாலும்
அறிவு எனும் ஒரு
உட்கதிர் அந்த ஹிக்ஸ்போசானின்
பொருள் திணிவில்
கரு உயிர்த்து கதிர் விரிக்கிறது.
அறிவு சமுதாயத்தை
அன்புடன் தழுவிக்கொள்ளும்போது
துப்பாக்கிகள் கண்டுபிடித்து
மகிழும் மூலதனம்
அந்த பொன் குவியலை பாதுகாக்க‌
வெறி கொள்கிறது.
வெறி ஏதாவது ஒரு புள்ளியில்
தீர்ந்து போகும்.
மானிடம் இழையும் ஆற்றலே
எப்போதும்
ஒரு புதிய உதயமாய்
சுடர்ந்து நிற்கும்.


============================================

தரிசனம்.


photo of coronavirus
நன்றி .."கூகிள் இமேஜஸ்"
https://www.google.com/search?sxsrf=ALeKk03uZERwHh41blWXn-KV0294rpF4OQ:1592285351419&source=univ&tbm=isch&q=picture+of+corona&sa=X&ved=2ahUKEwiPjoKWzYXqAhWv_XMBHRaUB30Q7Al6BAgJEBk&biw=1042&bih=619&dpr=2.5#imgrc=K_lwiK_83zAqvM



தரிசனம்.
==================================ருத்ரா

ஒரு வழியாய்
கர்ப்பகிருகம் வந்தாயிற்று.
திவ்ய அலங்காரம்..
வைர மகுடம் கதிர் வீசியது.
......
.......
ஜருகண்டி..ஜருகண்டி

கொஞ்சம்
அரை நிமிடம்
அந்த முக தரிசனம்..
குழறினேன்.

ஜருகண்டி ..ஜருகண்டி..
இது டவாலியின்
சுப்ரபாதம்.

வரிசை வெளியே என்னைத்
தள்ளிக்கொண்டு வந்து விட்டது.
எனக்கு முன்னே
மிகவும் முதியவர் ஒருவர்.
முகம் தெரியாமல்
தாடி மீசையுடன் நின்றிருந்தார்.
அந்த நீண்ட தாடி
வால்மீகியை ஞாபகப்படுத்தியது.
என்னப்பா..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயே.
அப்படியுமா தரிசனம் செய்யவில்லை.
ஆமாம் ஸ்வாமிகளே
பகவானின் அந்த வைரக்கிரீடத்தை
மட்டுமே தான்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
திடீரென்று
நான் அதுவரை நினைத்துக்கொண்டே
வந்த கொரோனாவின்
அந்த முள்ளுக்கிரிடம் தான் தெரிந்தது.
அப்புறம் தான்
சுய நினைவுக்குத்திரும்பி
பெருமாளின் அந்த திவ்ய நாமமும்
முகமும்
ஒன்றுக்கொன்று இழைந்திருந்து
தரிசனம் தருமே
அதைப்பார்க்க முடியாமல்
இந்த ஜருகண்டி என்னைத்
தள்ளிக்கொண்டு வந்து விட்டது.
அது தான் இத்தனை ஆதங்கம்.

தம்பி கவலைப்படாதே
அவர்
தூணிலும் இருந்து
துரும்பிலும் இருந்து
சலிப்பு அடைந்து விட்டார்.
அதனால் தான்
இப்போ
இந்த கொரோனாவில் இருக்கிறார்.
அவதாரம் இன்னும்
பாக்கி இருக்கிறது அல்லவா..
பெரியவர்
சிரித்துக்கொண்டே
போய்விட்டார்.

================================================

வெள்ளி, 12 ஜூன், 2020

மதுக்கடைகள்.

மதுக்கடைகள்.
___________________________________

விடுங்கள்.
ஏன் 
அந்த செத்த பாம்பை
அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?
மூடுங்கள் மூடுங்கள் என்று 
மூலை தோறும் போராட்டம்.
அந்த கண்ணாடி சொர்க்கங்களை
நொறுக்கி விடமுடியாது.
கந்தலாய்க்கிடக்கும் 
பாம்பின் பல் மட்டும் இங்கே.
விஷம் எல்லாம்
அந்த முதலாளிகள் கையில்!

_______________________________ருத்ரா

ஞாபகம் வருகிறதா கண்ணே!



ஞாபகம் வருகிறதா கண்ணே!
உன் பெயர் "டையானா" என்று
இருந்ததை
நான் தான் மாற்றினேன் "கொரோனா" என்று.
நீயே என் மணிமகுடம்
என்று அன்போடு அந்தப்பெயரில்
அழைத்தேன் உன்னை.

ஆனால் இன்று
கொரோனா என்று
இந்த உலகமெல்லாம்
மூச்சு விட்டு  மூச்சு விட்டு
உன்னைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
செவிலியர் பணிக்குப்போகிறேன்

என்றாய் ஒருநாள்.
நானும் அன்போடு
இதயம்  குழைய "பை" சொன்னேனே .

திடீரென்று ஒரு நாள்
உன்னை
அந்த
பூ வேலைப்பாடு நிறைந்த
பெட்டியில்  அடைத்து அனுப்பிவிட்டார்களே.
தினமும்
லட்சம் லட்சம் என்று
இந்த ஊடகங்கள்
புள்ளிவிவரங்கள்
என்ற பெயரில்
உன் பெயர் மீது என்னை
ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள்.
என்னால் முடியவில்லை.
விதிமீறல்களின் வழியாய்
நீ என்னைத்தொற்றிக்கொள்
என்று
இந்த ஈசல் கூட்டங்களுக்குள்
கலந்து கொண்டு விட்டேன்
கையோடு
எனக்கும் ஒரு பெட்டியை
ஆர்டர் கொடுத்துவிட்டு.

=======================================ருத்ரா





"பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப"

"பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப"
_____________________________________________ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் 33)




மடக்குரல் விளிதரும் அகல்பேரலகின்
கூர்த்த ஓதை கூஉய் வௌவ்வும் படர்வான்
அரிப்பறை அன்ன அறையும் விரிசிறை
பவளம் சமைத்த நெடுங்கால் நாரை
சினையுடன் சிமைக்கும் பருங்கயல் கொள்ளும்.
உடைமுள் இடையும் அவிழ் பூம்பிணியின்
தண்மைசெறி அரி இலஞ்சி காட்சியில் 
இடையிட்ட இடையிட்ட நீர் நிழல் அயல
குவளைகள் காட்டிய அவள் விழி வீழ்ந்தான்.
தீம்தொடை நரம்பின் பச்சைப் பேரியாழ்
பண் விடுத்த பாங்கில் அவள் கண்விடு அம்பின்
இரைப்பட்டான் கழை அடுக்க வெற்பன் ஆங்கு.
பிளந்த வாய் பெரும்பேய் அத்தம் வெள்ளிய
பறந்தலை நோக்கி உகுக்கும் இகுக்கும் அவன்
தீப்படர் மூச்சு அற்றை நாளில் அவள் இதழ் உதிர்
நகையின் நுண்மாண் மணியென இரைப்பத் 
தந்த வள்ளுறைக் கவின் நனி நீளிடை
பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப
சுரன் வழங்கு ஆற்றிடை விண்மீன் குழாஅம்   என 
பொறி அறை படுத்து மயங்கினன் என் கொல்?

-------------------------------------------------------------------------------------

இது அகநானூற்றுப்பாடல் 291ல் "பாலை பாடிய பெருங்கடுங்கோ "
எழுதிய "பரூஉப்பரல் சிறுபல் மின்மினி கடுப்ப" என்னும் வரியின் 
நுட்பமான அழகை எடுத்துக்கொண்டு என்னால் எழுதப்பட்ட 
சங்கநடைச் செய்யுட் கவிதை ஆகும்.

புதன், 10 ஜூன், 2020

முதுமை நிழல்

முதுமை நிழல்
________________________________ருத்ரா


மனிதனின் மடியில் விழும்
நிழல்.
எங்கிருந்தோ ஒரு மரம்.
ஏதோ ஒரு கூன் விழுந்த அதன் கிளை.
அதன் நீண்ட நீண்ட இலைகள்
கோரைப்பற்களாய்
என் மீது கீறின 
ரத்தம் வராமல் நிழல்களாய்!
பழைய வயதுகளின்
பழுப்பு அடைந்த காகிதத்து
நினைவுகள்.
நேற்று நட்ட மைல்கல்லுக்கும்
நாளை நடப்போகும் மைல் கல்லுக்கும்
இடையே
இனி எந்த இடத்தில் 
குழி தோண்டுவது
இன்றைய மைல்கல்லை நட?
நெஞ்சில் அந்த பாறாங்கல்லை
அது தான் தினம் தினம் படிக்கும்
ராமாயணம்..
போட்டு கவிழ்த்துக்கொண்டு
திண்ணையின் கிரில் வழியாய் 
ஒழுகும் 
அந்த டிசைன் நிழலை
விரட்டிப்பிடித்துக்கொண்டு 
ஓடுகிறேன்
அந்த முகடுக்கு.
விழப்போகும் விளிம்புகளே 
என் வேதங்கள்.
அர்த்தமற்ற அர்த்தங்களின்
அந்த கனத்த புத்தகம்
டப் என்று மூடப்பட்டது.
புத்தகத்தின் இடையில்
மாட்டிக்கொண்ட அந்த
மீசை வைத்த 
சிறு வெள்ளி மீன் பூச்சியாய்
.....ஒரு ஃபாசில் ஆகிப்போனேன்.

================================================



செவ்வாய், 9 ஜூன், 2020

அன்புடன் ருத்ரா

அன்புடன் ருத்ரா
_____________________________________________



பைபிள் என்னும் நூல்
தூக்கிப்பிடித்துக்காட்டப்படுகிறது.
இங்கே
பகவத் கீதை உயர்த்திக்காட்டப்படுவது போல்.
இவை வரலாற்றுக்கண்ணாடிகள் தான்.
பழைய நிகழ்வுகளின்
பிம்பங்கள் நம்மீது 
பூச்சாண்டி காட்டப்படுகின்றன.
மனிதர்கள் வறுமையில்
கொத்து கொத்தாக மடிகிறார்கள்.
வலுத்த மனிதர்கள் 
இளைத்த மனிதர்களை
கொத்துக்கறி கைம்மா போடும் போதெல்லாம்
இந்த நூல்கள் தூசி படிந்து கிடக்கும்.
இதைக்கண்டு
சமுதாயச்சீற்றம் கொண்டு
மனிதநேயம் உள்ள குரல்கள்
கிளர்ந்து எழுகையில்
இந்த பூங்கொத்துகள் போன்ற‌
போதனைகளில் 
அம்புஷ் செய்யப்பட்ட 
கொலை ஆயுதங்கள் விஸ்வரூபம் எடுக்கும்.
ஓட்டுகள் தந்த கைகளே
இங்கு முறித்து வீசப்படும்.
சரித்திரத்தின் சக்கரங்கள் 
உருண்ட வழித்தடம் இது.
உலக மகா யுத்தங்கள்
கொள்ளை நோய்கள் 
இவையெல்லாம்
மனித உயிர்களை 
லட்சக்கணக்காய் தின்று தீர்த்துவிட்டன.
வெறியை ஆயுதமாக்கி கூடமாக்கி கோபுரமாக்கி
மக்கள் மீது கண்ணுக்குத்தெரியாத‌
இறைவம் எனும் சல்லாத்துணியை
வீசி 
மனிதனின் அறிவுக்கண்களை
மழுங்கடிக்கச்செய்யும் சம்பவங்களே
இந்த உலகை கொள்ளைகொள்ளும்
கொரோனா.
கொரோனாக்கள் பாவம்.
பொருளாதாரம் எனும் வாழ்க்கை நெறிகள்
மனித வாழ்க்கையையே 
கழுத்து நெரிக்கும் கோட்பாடுகளால்
கசக்கி கூழாக்க காரணமாய் இருப்பது
அந்த லாபநோக்கம் எனும் வைரஸ் தான்.
செல்களின் அதீத வளர்ச்சி தானே வைரஸ்
அது போன்ற இந்த "வளர்ச்சி"வெறி தான்
மனிதர்களை காவு வாங்குகிறது.
பகாசுர பளபளப்பான கட்டிடங்கள்
நல்ல பாம்பு படங்களைப்போன்ற‌
கவர்ச்சி காட்டி 
உலகின் நலிந்த மூலைகளை
இன்னும் தரைமட்டமாக்கிவிடும்
பொருளாதாரத்தின் மாயவலையை
விரித்துக்கொண்டிருக்கின்றன.
இதை "பரமண்டலம்" எனும் பால்கனியில்
உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருக்கும்
தெய்வங்களையே நமக்கு
பொம்மைகளாக்கி
"டாய்ஸ்டோரி" ஒன்று இரண்டு மூன்று..
என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மனித சிந்தனையில் இந்தக்குப்பைகளை
எரிக்கும் காட்டுத்தீ தான்
நமக்கு விடியல்.
தினம் தினம் விழிக்கும் இந்த‌
சூரியன்கள் அல்ல!

=======================================================


திங்கள், 8 ஜூன், 2020

கடவுள் என்றொரு நாத்திகன்





கடவுள் என்றொரு நாத்திகன்
===============================================ருத்ரா

கடவுள் எங்கே காட்டு
என்று
கடவுள் பக்தனைக்கேட்டார்.
"நீயே அது"(தத்வம் அஸி)என்று
நீயே சொல்லிவிட்டாயே
என்றான் பக்தன்.
ஏன் 
நானே பிரம்மம் (அஹம் பிரஹ்மாஸ்மி)
என்றும் 
நான் சொல்லியிருக்கிறேனே.

தன்மை
முன்னிலை
படர்க்கை
என்று இலக்கணம் சொன்னது.

தூணுக்குள் என்றார்கள்
துரும்புக்குள் என்றார்கள்
திரும்பவும் கேட்டால்
கோபம் கொண்டு
குடல் கிழித்தார்கள்.

கடவுள் எங்கே காட்டு
என்று 
கடவுள் கேட்டுக்கொண்டே தான்
இருக்கிறார்.

ஒருவன் அறிவுக்கணை வீசினான்.

எங்களுக்குத் தெரியவில்லை என்று தான்
உன்னிடம் 
தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இல்லை என்ற‌
பதில்கள் எல்லாதிசையிலிருந்து
எதிரொலிக்கின்றன.
ஆனால்
நான் உன் பக்தன் 
உன்னை இல்லை என்று சொன்னால்
நான் இல்லை 
நீ இல்லை
யாரும் இல்லை.

கடவுள் இடைமறித்தார்.
கடவுள் இல்லை என்று நீ நம்பினால்
எனக்கு ஒரு சேதமும் இல்லை.
கடவுள் இருக்கிறது என்று நீ நம்பினால்
எனக்கு எந்த மகுடமும் இல்லை.

நம்பிக்கை என்பது உள்ளம் சார்ந்தது.
உன் உள்ளம் உன்னைச்சார்ந்தது.
உன் உள்ளம் உன் அறிவை
நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.
அதனால் நீ கேள்வி கேட்கிறாய்.
கேள்வியே உன் உயிர்.
என்னைப்பார்த்து 
"நீ யார் அல்லது எது?"என்று
கேள்வி கேட்கவேண்டும்.
அறிவு ஒன்று சொல்லும்.
உணர்ச்சி ஒன்று சொல்லும்.
உனக்குள் அறிந்ததை 
நீ சொல்.

"ஏதோ ஒன்று 
ஏதும் அறியாமல் உன்னை
நம்பச்சொல்கிறது.
நான் நம்புகிறேன்."

அப்படி என்றால்
கடவுள் எங்கே காட்டு
என்ற என் கேள்விக்கு
என்னைக்காட்டுவது தானே...

கடவுள் தொடர்ந்தார்.
பக்தனின் சுட்டுவிரல் இன்னும் 
நீளவில்லை.
அவரைச் சுட்டிக்காட்டும்போது
அங்கே எல்லாம் 
வெறுமை ஆகி விட்டால்...

ஹ்ஹாஹ்ஹா...
கடவுள் தான் சிரித்தார்.
சந்தேகமே வேண்டாம்.
நான் நான் இல்லை.
நானே ஒரு நாத்திகன் தான்.
நான் தினந்தோறும்
என்னை இந்தக்கேள்விகளில் தான்
உன்னிடம் தேடுகிறேன்.
உன் 
"போற்றி போற்றி"களோ
இல்லை
"சுக்லாம்பரதங்களோ"
என் மீது வந்து விழுந்து
குப்பைகள் மலைகள் போல்
குவிகின்றன.
எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போ.
அந்தக்கேள்வியை மட்டும்
என்னிடம்
வீசி எறிந்து விட்டு.
....
நீ கடவுள் இல்லை.
கடவுள் நீ இல்லை.
கடவுள் எங்கே காட்டு?
.........
.........
எல்லாவற்றின் நியூகிளியசும்
இதுவே தான்.

==============================================



முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

"முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே"
=========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..32)




எரிபட்டன்ன நோன்றாள் அழுதாள்
இடைபட்ட கலிங்கம் நீள்நெடும்பாம்பாய்
முறுக்கிய வலியில் துடித்தாள் மன்னே.
நெருநல் ஞாழல கரையிடை அவன் தோள்
தோய் தழீஇய இன்பம் ஈண்டு யாங்கண்
தீக்கடல் திரைமலி அழல் நனந்தலை
தோற்றிய துன்பம் அமிழ்ந்தனள் என் கொல் ?
அமர்க்கண் நெடுந்தகை  மார்பின் எஃகம் 
மணிப்புண் பிளப்ப வென்றி எடுத்தாங்கு 
குருதிக்கண்ணே சிறை சிறை அடித்து 
கொடிய வெம்புள் ஊடு ஊடு கலித்து 
அலமரல் ஆர்த்தன்ன அவன் அமை நெடுந்தோள் 
சேர்தல் ஆற்றா இடும்பை படுத்தாள்.
ஒரு கண் முரசு பச்சை அதிர 
படு களம் பட்டானை இறை தொடி நெகிழ 
அணைத்த காலை செயிர்த்த அன்பில் 
அவள் "முயக்கிடை ஈயாது மொய்த்தன 
பருந்தே" போல் அவன்  "பொருள் வயின்"செலவு 
மாறு கொள்ளும் தழுவல் தடுக்கும் இவட்கு 
ஊழே இங்கு பருந்தின் கூர் நகம் 
பாழே பாழே வறட்டும் நீள் இரவு.


===============================================