வியாழன், 30 நவம்பர், 2017

டூ லெட்


டு லெட் 
====================================ருத்ரா

புதிய இயக்குனர் செழியன்
புலிப்பாய்ச்சல் பாய்ந்து
கொல்கட்டா சர்வதேச திரைப்பட விருது
"தங்கப்புலியை" பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமிதம் இது.

கதை
குடித்தனத்துக்கு
வீடு தேடும் வேட்டையும்
அந்த வீட்டின்
குறுக்கு நெடுக்கு அநாடமியைப்பற்றியதும் தான்
என்று புரிகிறது.
யதார்த்தம்
எனும் வடசொல்
உள்ளது உள்ளபடி எனும்
நம் உணர்ச்சிப்பிழியலின்
உள்ளத்தை உரித்துக்காட்டுவது தான்.
ஆனால்
நடிகர்களுக்குப்பதில்
அந்த ஓட்டை உடைசல் வீடுகளின்
காரை பெயர்ந்த அல்லது
செங்கல் எலும்பு தெரிந்த
சுவர்களோ
அல்லது உடைந்த ஜன்னல்களோ தான்
பாத்திரங்களாகி
நடித்திருக்கின்றன.
அந்த குறுக்குவெட்டு சித்திரத்தில்
நடிகர்களின் நடிப்பின்
வியர்வை வாசனையும்
விரவியிருக்க வேண்டும்.
சந்தோஷ் ஸ்ரீ ராம்
ஷீலா
குட்டிப்பையன் தருண்
ஆகிய புதுமுகங்கள்
இந்தப்படத்தின் உயிர்நரம்புகள்.
கணினிப்புயலும்
அந்தப் புயல் சார்ந்த தொழிலும்
மனிதனின் பொருளாதாரத்தை
வேறு ஒரு பரிமாணத்துள்
கொண்டுபோய் வைத்து விட்டது.
அதனால்
மண்ணும்
மண்வாசனையுள்ள மனிதர்களும்
எங்கோ
பரணில் தூக்கிஎறியப்பட்டு விட்டார்கள்.
கட்டு கட்டான‌ கரன்சியைத் தான்
வீடு தீனி கேட்கிறது.
"வாடகைக்கு விடப்படும்"
என்று அட்டை மாட்டுவதை விட‌
டு லெட் என்று
ஆங்கிலத்தில் அறிவித்தால் தான்
வீடுகளின்கதவுகள்
ஒரு மோகத்தில் அதன் ரத்த சதையில்
"கிறீச்சு"கள் இல்லாமல்
திறந்து காட்டுகின்றன.
வீடே
நம் பழைய கலாச்சாரங்கள் வற்றிப்பொன‌
எலும்புக்கூடு
என்று ஆகிவிட்டபோது
வேறு "பேய்வீட்டு"த்திகில்கள் தேவையில்லை.
இசை இரைச்சல்கள்
குத்தாட்ட கும்பமேளாக்கள் எல்லாம்
இல்லாமல் ஒரு படமா?
இந்த வியப்புக்கே
விருது கொடுத்துதான் ஆகவேண்டும்.
வீட்டுச்சுவர்க்கோழிகளின்
அந்த மெல்லிய மௌனக்கீறல்கள்
போதுமே.
ஆனந்தவிகடனில்
இது ஒரு கொரில்லா முயற்சி
என்று செழியன் கூறியிருக்கிறார்.
சிந்தனைப்பொறி
சினிமாக்கதையிலும்
கொரில்லாத்தனங்கள் செய்யும்போது தான்
திரை இலக்கியம் நசுங்கிப்போகமால்
அதன் "லாவா"கொப்பளிப்புகளுடன்
பாதுகாக்கப்பட‌ முடியும்.
சமுதாய வலிகளும் வலிப்புகளும்
பற்றிய படம்
கமர்சியல் ரசம் பூசப்பட இயலாது தான்.
மக்களின் வாழ்க்கை நிர்வாணமாய்
உரித்தகோழியாய்
தொங்கவிடப்படுவது
இந்த "டூ லெட்டில்" நன்றாய்
தொங்குகிறது.
சினிமாவில் ஒரு ஞானபீட குறுநாவலை
காமிரா கொண்டு எழுதிக்காட்டிய‌
செழியன் டீமுக்கு
இது நிச்சயம் ஒரு இமய சாதனை.

===========================================================


புதன், 29 நவம்பர், 2017

ரஜனி முகம்மது படையெடுப்பாரா? மாட்டாரா?


ரஜனி முகம்மது படையெடுப்பாரா? மாட்டாரா?
=============================================================ருத்ரா

அந்த டிவி ஊடகம்
கருத்துக்கணிப்பு மூலம்
சொல்லியிருக்கிறது..
பெரும்பாலும்
ரஜனி
வாளேந்தப்போவதில்லை
என்று.
"போர்
வரும் ஆனால் வராது"
என்று
பஞ்ச் டயலாக் ஏதும் கூறவில்லை.
அதன் சொந்தக்காரர்
"என்னத்தெ கன்னையா"
தான்
"என்னத்தெ..கட்சி ஆரம்பித்து..."
என்று வசனம் பேசுவது போல் இருக்கிறது.
ரஜனியின் தோட்டத்தில்
இன்னும் காலம் "கனியவில்லை"
ஜிகினா மகுடம் சூட்டிக்கொண்டு
தமிழ் நாட்டில் வேண்டுமானால்
சேர சோழ பாண்டிய வேஷங்கள்
கட்டிக்கொண்டவர்கள் கூத்து நடத்தலாம்.
ஆத்மீகத்தை வைத்துக்கொண்டு
அருள்வாக்குகள் டூப்பு விடலாம்
என்பதை விட‌
மதமே இல்லாத ஒரு மதத்தை
ஏன் உருவாக்கக்கூடாது
என்பதையும் அவர் யோசிக்கலாம்.
தியானம் செய்பவர்கள்
மலையில் போய் தியானம் செய்யலாம்.
இவர் மட்டுமே
தன் மேல் ஒரு இமயத்தை நிறுத்திக்கொண்டு
தியானம் செய்பவர்.
அந்த இமயத்தின் நாடி நரம்புகள் தானே
நம் நதிகள்.
அந்த தோப்பூள் கொடியை எல்லாம்
ஒன்றாய் இணைத்து
மக்களின்
இதயங்களில் மனிதம் மட்டுமே
மலரப்போகும் நாள் வரும்போது
கட்டாயம்
மண்ணின் சமநீதியை வெல்ல‌
அந்த வாக்குச்சீட்டுகள் எல்லாம்
அவர் கையில்
வாள் சுழற்றும்.

=============================================================

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்
=============================================ருத்ரா

நான் என்பது என்ன?
நீ என்பது என்ன?
இன்னும்
அது அவன் அவள்
என்பதெல்லாம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
என்கிறது இலக்கணம்.
இவை வெறும் மேலாடைகள்
கழற்றியெறி என்கிறது
ஆன்மீகம்
இது என்ன?
இதற்குள் என்னதான் இருக்கிறது
என்ற ஞான உந்தலில்
எல்லாவற்றையும்
துறக்க "முனைந்தவர்களே"
முனிவர்கள்.
இப்படி மகாநிர்வாணத்துடன்
மனம் அதன் "உள்குத்துகள்"
ஆகியவற்றையும்
ஏன்
இப்படி ஞானத்தேடலுக்கு
உந்து விசையான‌
சிந்தனையையும் கூட‌
கழற்றி வைத்து விட்டு
தியானம் என்ற பெயரில்
உட்கார்ந்திருக்கிறார்கள்
சிலர்.
அவர்கள் பெரியோர்கள்
என கருதப்படுகிறார்கள்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌
இப்படித்தான்
கீழை நாடுகள்
கல்லாகி மரத்துக்கிடக்கிறது.
"அது நீயாக இருக்கிறாய்"
என்ற பொருளில்
"தத்வம் அஸி"
என்பதே
இப்படி ஒரு ஞானத்தேடலின்
"தத்துவம்" ஆக இருக்கிறது.
அது நீ
என்று தெரிந்த பின்னும்
உன்னை "நான்"கருவறுக்கத்துடிக்கும்
அந்த "சைத்தானுக்கு"
குடமுழுக்கும்
தேர் ஓட்டங்களும் நடத்தி
போக்கு காட்டுகிறேன்.
அதை புனிதம் என்று சொல்லி
அதற்கு மேல்
உன் ஞானவிளிம்பை
சிரச்சேதம் செய்ய‌
சாஸ்திர சம்ப்ரதாயங்களின்
முள்வேலிக்குள்
உன்னை அடைத்து
ரணமாக்கி ரத்தம் கசியச்செய்கிறேன்.
இதுவே
மதம் எனும்
நோய் ஆகி
எல்லோரையும்
படுக்கையில் கிடத்தி இருக்கிறது.
அதனால் தான்
எனக்கு
எம்மதமும் சம்மதமில்லை.
மகாநிர்வாணத்தை
எப்படி இப்படி
ஒரு அசிங்க நிர்வாணம்
ஆக்கியிருக்கிறான் இந்த மனிதன்
என்பதை புரிந்து கொள்ளவேண்டியதே
காலத்தின் கட்டாயம்.

======================================================

நகைச்சுவை (5)

நகைச்சுவை (5)
===================================ருத்ரா

ஆர்.கே நகரில் ஒரு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் செல்பவரை
போலீஸ்காரர் நிறுத்துகிறார்.

"ஏய்...நிறுத்து..நிறுத்து"

அவர் நிறுத்துகிறார்.அவர் சூட்கேஸை இவர் சோதனை போடுகிறார்.

"இவ்வளவு கேஷ்..எல்லாம் புது நோட்டுகள்..
எல்லாம் யாரிடம் வாங்கினீர்கள்? எங்கே
கொண்டு போகிறீர்கள்?ம்ம்ம் சொல்லுங்க"

"ஏ ஏ பேங்கிலிருந்து ட்ராப் பண்ணிட்டு போறேங்க."

"அது என்ன பேங்கு?"

"அதாங்க ஏ ஏ பேங்கு"

அப்படின்னா?

"அதாங்க "அம்மாவின் ஆன்மா" பேங்கு."

(அந்த மோட்டார் சைக்கிளுக்கு திடீரென்று சக்கரங்களும் இல்லை.
ஓட்டி வந்தவருக்கு கால்களும் இல்லை)

"என்னது? அம்மாவின்....சரி போ போ"

(போலீஸ்காரர் வெல வெலத்து மயங்கி விழுந்து  விட்டார்)

==============================================================
(இது ஒரு கற்பனை உரையாடல் நகைச்சுவைக்காக)செவ்வாய், 28 நவம்பர், 2017

கமலின் சாசனம் (2)

கமலின் சாசனம் (2)
=====================================ருத்ரா

ஊடகங்கள் நடத்திய‌
கருத்துக்கணிப்பு எனும்
செப்பு விளையாட்டில்
உயர்ந்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறார்
கமல்!
எப்படியெல்லாமோ அவர்கள்
சோழி குலுக்கிப்போட்டிருக்கிறார்கள்.
எல்லா சோழிகளும்
கமல் பக்கமே.
இதென்ன சின்னப்புள்ள‌
விளையாட்டாவுல்ல இருக்கு
என்று
வடிவேலு பாணியில்
மற்றவர்கள் வாய்பிளக்கலாம்.
சூப்பர் ஸ்டாரோ
கமல் மாதிரி
காரம் நிறைந்த கேள்விகளை
வைத்துக்கொண்டு
"வேட்டையாடு விளையாடு"
நிகழ்த்துவதில்லை.
அன்று உயிர்ப்பு காட்டிய‌
"ராகவேந்திரா"வை
இன்று மெய்சிலிர்த்து
புளகாங்கிதம்
அடைந்துகொண்டிருக்கிறார்!
விஜய்
தளபதி என்ற பட்டம்
சூட்டிக்கொண்ட போதும்
தன் "படம்" ரிலீஸ்ல்
உள்ள "மெர்ஸலை"யே
தன் வெற்றிகரமான "மெர்ஸல்"
ஆக்கிக்கொண்டதில்
வேர்த்து விறுவிறுத்து
சினிமா வேலிக்குள்ளேயே
பிரம்மாண்ட ரோஜாவாய்
சிரித்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல்
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்
என்பதே அவரது தற்போதைய அரசியல்.
விஜய்காந்த் வியூகம் இன்னும்
புரியவில்லை.
சீமான் சீற்றத்தை மட்டுமே
ஜிகினாவாய் ஆக்கி
தோரணம் கட்டுகிறார்.
கமல் தான் ஆதிக்க "பல்லக்கு"களுக்கு
சுளுக்கு எடுக்கும் அறிக்கைகள் இடுகிறார்.
அவருக்கு இயன்ற‌
"110"ன் கீழ் விதிகளை
அல்லது திகில்களை
ட்விட்டர் எனும் சிறுகுருவியின்
அலகுகளிலேயே
ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆக்குகிறார்.
ரஜனி இன்னும் கடை விரிக்கவில்லை.
விஜய்
"என்னங்ணா"வில்
ஏதோ ஒரு வில்லை வளைக்கிறார்.
தேர்தல் எனும் "கணிப்பு"
எப்போதும்
கழுவிய நீரில்
நழுவிய மீன்கள் தான்.
"ஓட்டு" போட தயாராய் இருக்கும்
"வசூல் ராஜா"க்களிடம்
கமலின் வசூல் ராஜா வெற்றி பெறுவாரா?

=======================================================திங்கள், 27 நவம்பர், 2017

ஆர்.கே நகர் (2)

ஆர்.கே நகர் (2)
======================================ருத்ரா

"எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே.."
என்று "மலைக்கள்ளன்" எம்.ஜி.ஆர்
தன் குதிரையுடன்
இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறார்.
ஆளாளுக்கு
அடித்துத்துவைத்து
உரிமை கொண்டாடி
கந்தலாய் கசங்கிப்போன‌
அந்த இரட்டை இலை
காற்றில் அசைந்து கொண்டிருப்பதைக்
கண்டு அதிர்கிறார்.
அடையாளம் தான் கட்சியா?
அதற்குள் துடிக்கும்
ஜனநாயகத்தின் இதய நரம்புகள்
ஏன் இப்படி அறுந்து தொங்குகிறது
என கலங்கித்தவிக்கிறார்.
சின்னம் போதும்
என்று பட்டாசுகள் படபடத்து வெடிக்கின்றன.
லட்டுகள்
வாய்களுக்குள் திணிக்கப்படுகின்றன.
அவையெல்லாம்
அவருக்கு கசக்கின்ற இனிப்புகள்!

.............
"என் நூற்றாண்டுக்கு
இத்தனை தாரை தப்பட்டையா?
ரோடுகள் மறிக்கப்பட்டு
இத்தனை தட்டிகளா?
விபத்துகள் ஏற்பட்டு
அந்த மனிதப்பூச்சியின்
ரத்தச்சகதியால்
அங்கே ரங்கோலி போட்டா
கொண்டாட்டம்?

ஒருவருக்கு கல்வெட்டு.
இன்னொருவருக்கு கல்பூட்டு.
கோட்டை தூசி படிந்து கிடந்தாலும்
கோட்டைக்குள் குத்துவெட்டு
வெளியே தான்.
ஜனநாயகத்தை
மக்களின் கண்ணாடியில்
பிம்பம் ஆக்க வந்தவர்கள்
தங்களைத்தாங்களே
அழகு பார்த்துக்கொண்டார்கள்.
ஹிட்லரிஸம்  எனும்
சரித்திரத்தின் அவலமான‌
அந்த "நறுக்கு மீசையும்"
கொடுஞ்சிறைகளும் அல்லவா
பயம் காட்டுகின்றன.
நான் வாரிசு என்று
வைத்துவிட்டுப்போனவருக்கும்
"நான் ஆணையிட்டால் "
என்று சவுக்கடிகள் சொடுக்கியதன்
லட்சியக்குறிப்புகள்
மறந்தா போனது?
எப்போதும் வால் பிடிப்பார்
என்றேனே
இப்போதும் எங்கோ யாருக்கோ
வால் பிடிக்கிறார்கள் போலும்."
.....................
அவர் கனவெல்லாம்
அங்கே பரப்பன அக்கிரஹாரத்தில்
சுக்குநூறாய் நொறுங்கிக்கிடப்பதைக்
கண்டு நொந்து
மெரீனாவுக்குள்
மீண்டும்
உறங்கப்போய்விடுகிறார்.

========================================


ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஓலைத்துடிப்புகள் (21)

ஓலைத்துடிப்புகள் (21)

தூங்காமரத்தின் தூங்கிய பழம்போல்..
=====================================================ருத்ரா

பாசடை அடர்கரை கான்யாற்றுப்பிழியல்
நீர்படுத்தன்ன தொடி நெகிழ்ப்பாவை
எல்லுடன் மதியும் முல்லையும் மறந்து
பெரும்பேய் ஊழி ஊர்ந்தனள் மன்னே.
கூர்நடுங் கோல்போன்ம் கரியநெடுங்கங்குல்
துயில் மடிந்தன்ன இருள்சூர்க் கானம்
செலவு உய்த்தனன் என் கொல்?
நெடுமூச்சின் கண்ணி விடு மூச்சில்
இறந்தாள் பிறந்தாள் பிறந்திறந்திருந்தாள்
மண்ணும் வானும் மரனும் பரபும்
உண்ணல் உடுத்தல் ஆயகலை மறந்தாள்
தூங்கா மரத்தின் தூங்கிய பழம்போல்
கனவின் கொடுஞ்சிறைப்பட்டனள் என்னே!
தண்ணிய படப்பை அவன் ஆர்  அகலம்
தோயக்கிடந்து நெஞ்சில் அழிந்தாள்
அளியவள் ஆங்கே அழல்வாய்ப்பட்டே.

===============================================25.11.2017

புதன், 22 நவம்பர், 2017

நகைச்சுவை (4)

நகைச்சுவை (4)
======================================ருத்ரா


ஆசிரியர்

பூமத்திய ரேகை என்றால் என்ன?

மாணவன்

யாரோ ரகசியமாய் பூமிக்கு மத்தியில் போய்
கைரேகையை உருட்டி வைத்திருக்கிறார்கள்.

===========================================


செவ்வாய், 21 நவம்பர், 2017

நகைச்சுவை (3)

நகைச்சுவை (3)
==================================ருத்ரா

என்ன ஸார்? பையன் பெயில் ஆயிட்டான்
டூட்டோரியல் காலேஜ் அனுப்பப்போறேன்னு
சொன்னீங்களே.என்ன ஆச்சு?

மாட்டேன்ன்னு சொல்லிட்டான்.

அப்புறம்

ட்விட்டரியல் காலேஜ்ல தான் படிப்பானாம்.

என்னது?

"ட்விட்டர்"லேயே ட்யூஷன் எடுத்துக்குவானாம்.

==================================================

திங்கள், 20 நவம்பர், 2017

உறுத்தல் இல்லாமல்...

Image may contain: 4 people, people sitting and people eating

உறுத்தல் இல்லாமல்...
==========================================ருத்ரா

அந்த முகத்தேக்கங்களில்
முன்னூறு தேக்கங்களின்
ஏக்கங்கள் அணைகட்ட‌
கண்களின் காட்சிப்பிழம்பில்
கனவுகளின் காட்டுத்தீ
கொளுந்து விட‌
அந்த காலித்தட்டுகள்
கால சரித்திரங்களின்
பக்கங்களை புரட்டி புரட்டி
சமுதாய பிரக்ஞையின்
கூர்  நகங்களால்
நம்மை நார் நாராய்
கிழித்தெறிகின்றன.
காமிராக்களில்
இந்த லாவாக்களை
அடைத்துவைத்து
"போன்சாய்" மரம் போல்
நம் மேஜையில்
வைத்திருக்கிறோம்
கூச்சமில்லாமல்..
உறுத்தல் இல்லாமல்...
மானம் இல்லாமல்..
நம் மனங்கள்
கசாப்பு செய்யப்பட்டு
கூழாகிப்போயின.

========================================ருத்ரா

("தமிழ்ச்சோலை"யில் 21.11.17 அன்று திரு மாதவன் பதிவிட்ட‌
புகைப்படத்துக்கு எழுதிய கவிதை இது.
புகைப்படத்திற்கு நன்றி.)

மரம்

2014-07-02_19-01-23_972.jpg


மரம்
===============================ருத்ரா

என்னை வெட்டியெறியும் முன்
யோசித்திருக்கவேண்டும்.
இப்போது
வெப்பம் பூமியை
விழுங்க வந்து விட்டது.
நீ பெட்ரோலால் மலம் கழித்து
உன்னையே
கரிப்புகைக்குள் தள்ளி
காணாமல் போய்க்கொண்டிருக்கிறாய்.
தலைநகரங்கள் எல்லாம்
முகமூடி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன.
உன் நுரையீரல் பூங்கொத்துகள்
உனக்கே அங்கு
உன் கல்லறையின் கடைசிக்கல்லை
மூடக்காத்திருக்கின்றன.
வியாபாரம் செய்தால் போதும்
லாபம் குவித்தால் போதும் என்று
கம்பெனிகள்
ஆயிரம் ஆயிரம் ரூபாய்களுக்கு
மோட்டார் சைக்கிள்களை
இரும்புகளின் எலும்புக்குவியல்களாய்
விற்பதற்கு குவித்து வைத்திருக்கின்றன.
அவை அத்தனையும்
புகைப்படிமானங்களில்
ம‌ரணங்களின் சல்லாத்துணியாய்
இந்த பூமியைப் போர்த்தி
உயிர்கள் எனும்
அழகின்
அறிவின்
ஆற்றலின் ஊற்றுக்கண்ணை
தூர்த்துவிடக்காத்திருக்கின்றன.
ஆம்
இந்த பூதங்களின்
தாராளமய பொருளாதாரத்தில்
இனி
இந்த பூமியில் வெட்டவெளியே மிச்சம்.
ஒற்றை ஆள் கூட‌
ஒற்றை உயிர்ப்பிஞ்சு கூட‌
மேலே நட்சத்திரங்களை பார்ப்பதற்கும்
கடலில் நழுவி எழும்
செர்ரிப்பழம் போன்ற அந்த‌
இளஞ்சூரியனைப்பார்ப்பதற்கும்
யாரும்
எதுவும் இங்கே
மிஞ்சப்போவதில்லை.

============================================
அண்ணே ..அண்ணே !

அண்ணே ..அண்ணே !
==================================ருத்ரா

ஏண்ணே. ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ணே

என்னடா? உண்மை.

க‌வர்னருக்குத் தான் தாடியெல்லாம் இல்லையே
அப்புறம் ஏண்ணே அவரைப்பத்தி பேசும்போது
ஆட்டுக்குத் தாடி ..ஆட்டுக்குத் தாடிண்ணு சொல்றாங்க?

?????!!!!!

============================================

ஞாயிறு, 19 நவம்பர், 2017

வி.சாந்தாராம்

வி. சாந்தாராம்
V. Shantaram (1901-1990).jpg


(நன்றி ..தமிழ் விக்கிபீடியா )

வி.சாந்தாராம்
=========================================ருத்ரா

ஜனக் ஜனக் பாயல் பாஜே
நவரங்க்
தோ ஆங்கே(ன்) பாரா ஹாத்
கீத் காயா பத்தரோன் நே
ஸ்த்ரீ

இவையெல்லாம்
அற்புதமான "செல்லுலோஸ்"
கல்வெட்டுகள்.
இந்திய திரைப்படங்கள்
இலக்கியவடிவங்கள் பெற‌
காரணமாயிருந்த‌
காமிராச்சிற்பி
சாந்தாராம்அவர்களின்
படைப்புகள்.

எத்தனை எத்தனை படங்கள்!
இன்று
இந்தி ஏன்  இப்படி
பல்லைத்துருத்திக்கொண்டு
அரசியல் நாகரிகம் இழந்து
நம்மீது திணிக்க வருகிறது
என்ற நம் கேள்விகளையெல்லாம்
தாண்டியவராய்
சாந்தாராம் எனும் இயக்குநர்  மேதை
நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார்.
அத்துணை கலை உணர்வு சுரக்கும்
அரங்க அமைப்புகள்
அந்த "ஐம்பது அறுபது "களில்
அரிய கலைப்பெட்டகத்தின்
கால சாட்சிகள்!

சமுதாயத்தின் உள்வலியையும்
வண்ணக்குழம்பில் தோய்த்து
அதில் அடியில் எரியும்
நெருப்பின் வண்ணத்தை
நெகிழ்ச்சியாக்கி காட்டிடுவார்.

இவரது கருப்புவெள்ளைப்படங்கள் கூட‌
சீறும் சிந்தனை முத்திரைகள் தான்.
இவர் படங்களில்
காட்சியில் எங்கோ ஒரு ஓரத்தில்
கிடக்கும்
ஓட்டை உடைசல் பாத்திரங்கள் கூட‌
நடிக்கும்.
தோ ஆங்கே பாரா ஹாத்தில்
ஒரு காட்சி.
ஜெயிலராக நடிக்கும் சாந்தாரம்
கொடிய கொலைகாரர்களைக் கூட‌
மனிதாபிமானம் மிக்க கண்ணோட்டத்தோடு
திருத்த முயல்வார்.
அவர் ஒரு மேஜையில் உட்கார்ந்து
வேலையில் ஆழ்ந்திருப்பார்.
அந்த மேஜையில் ஒரு கத்தி இருக்கும்.
ஒரு கொலைக்குற்ற கைதி
அந்த அறையை துடைத்து சுத்தம்
செய்து கொண்டிருப்பான்.
ஜெயிலர் அவன் மீதுள்ள நம்பிக்கையில்
அந்த கத்தி அங்கு இருப்பதாகவே
பொருட்படுத்திக்கொள்ள மாட்டார்.
அவன் இவரை குத்திக்கொல்ல‌
தருணம் பார்த்து துடைப்பது போல்
அந்தக் கத்தியைப்பார்த்துக்கொண்டிருப்பான்.
அவனது மனத்தளும்பல்களை
படம் பிடிப்பது போல்
அந்த கத்தி ஆடி ஆடி அசைந்து நிற்கும்.
அந்த பளிச் பளிச் ஒளிநிழல்களை
மிக மிக மெல்லியதாக
காட்டியிருப்பார்
சாந்தாராம் அந்த படத்தில்.
ஒரு முத்திரை பதித்த டைரக் ஷன்  அது.

இது போன்று
இருட்டையும் வெளிச்சத்தையும்
கலந்து தருவதில் கூட‌
ஏழு வர்ணங்களும் உள்ளே
மறைந்து நடிக்கும்.
"ஜனக் ஜனக் பாயல் பாஜே "யில்
கோபிகிருஷ்ணாவின்
அந்த கால் சலங்கை சிலிர்ப்புகளில்
எத்தனை சுநாமிகள் உதிர்ந்து கிடந்தன!
நடிப்பின் வர்ணப்பிரளயம்
ஒலித்த காட்சிகள் அவை.

"ஸ்த்ரீ"யில்
அந்த பிஞ்சுக்குழந்தைக்கு
வர்ண வர்ணமாய்
தோகைவிரித்துக்கொண்டு
மயில்
திராட்சைக்கனியை
ஊட்டியதில்
காளிதாசனின் "சாகுந்தலம்"
வெகு நுட்பமாய் அரங்கேறியது!
காமிராவை
எப்படி அவர் தூரிகையாக்கினார்?
அதில் பிக்காஸோவும் ரவிவர்மாவும்
தங்கள் தூரிகை மயிர்த்துடிப்புகளை
நடிப்புகள் ஆக்கினர் !
அந்த திரையுலக மேதைக்கு
நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

==================================================

சனி, 18 நவம்பர், 2017

கமலின் சாசனங்கள்

கமலின் சாசனங்கள்
=====================================ருத்ரா

இந்த "மேக்ன கார்ட்டா"
ஆனந்த விகடனில்
அற்புதமானதொரு
அரசியல் சிந்தனையின்
அன்றாட வாசலை
திறந்து வைக்கிறது.
இன்று அரசியல் தூண்டிலில்
மிதக்கும் தக்கைகள்
அட்டைகத்திகளை வீசி
அந்த எல்லா அசுரன்களையும்
அழித்து விடுவதாக‌
தேர்தல் தோறும் "பிலிம்" காட்டுகின்றன.
ஆனால்
இந்த பிலிம் காட்டின் அடர்த்திக்காட்டுக்குள்
அட்டைக்கத்திகளையும்
நுரைக்கோட்டைகளயும் கடந்து
அதிரடியாய் பயணம் செய்தவர்
இந்த உலக நாயகர்.
தொழில் தொடங்குபவன் தானே
மூலதனம் திரட்டவேண்டும்.
அது போல்
இந்த அரசியல் வேள்வி
நடத்துபவர்கள்  தானே
சுள்ளிகளையும் கட்டைகளையும்
எரிக்கும் நெய்க்குடங்களையும்
அதற்கான "அக்கினிக்குஞ்சுகளை"யும்
தூக்கி வரவேண்டும்.
அதனால் தொண்டர்களே
அந்த பங்கு மூலதனத்தை
இருமுடி சுமந்து தூக்கிவரவேண்டும்.
அடிப்படையில் நல்ல கருத்து தானே!
பொதுமைவாதக்கட்சியினரின்
அடிப்படையும் இது தானே.
பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது
துண்டுகள் அல்லது தகரக்குவளைகள்
ஏந்தி
நாளைய வெள்ளிவிடியலின்
பிஞ்சு நம்பிக்கைகளை
சில்லறை சில்லறையாக‌
இந்த மக்களின்
வியர்வைச்செதில்களிலிருந்து
திரட்டுகிறார்கள்.
ஒரு புதுயுகவெள்ளத்தின்
ஊற்றுக்கண் அங்கிருந்து தானே
ஆரம்பிக்கிறது!
சிறு சிறு இலவசங்களையும்
அன்ப‌ளிப்புகளயும்
தூண்டில் முள்ளில் செருகி
நம் மொத்த நாட்டையே
விழுங்கி ஏப்பமிடுபவர்களுக்கு
வேண்டுமானால்
இது வேடிக்கையாக இருக்கலாம்.
கீரி பாம்பு சண்டையின்
விளையாட்டுகளில்
மக்களை திசைதிருப்பவே
அந்த வாடிக்கை அரசியல் வாதிகளின்
தந்திரமாக இருக்கலாம்.
இந்த தந்திர முலாம் பூசப்பட்டது அல்ல‌
சுதந்திரம்.
கமல் அவர்களே!
புதிய வெளிச்சத்தின் சுடரேந்தி நீங்கள்!
உங்கள் பயணம் தொடரட்டும்.

=============================================நகைச்சுவை (2)

நகைச்சுவை (2)
=========================================ருத்ரா

ஆசிரியர்

"லாஸ்ட் சப்பர்" ..இந்த புகழ்பெற்ற ஓவியத்தை
வரைந்தவர் யார்?

மாணவன்

(யோசனை செய்து கொண்டிருக்கிறான்.)

இன்னொரு மாணவன்

என்ன ஸார் இது கூடவா தெரியாது?
நம்ம "ஓவியா"தான்.

ஆசிரியர்

!!!!! ???????

===============================================


வெள்ளி, 17 நவம்பர், 2017

கலைடோஸ்கோப்


கலைடோஸ்கோப்
====================================ருத்ரா

வருமானவரித்துறை


கண்ணும் லென்சும்
கலந்த கலவையில்
கொசு கூட‌
"டி‍‍ ரெக்ஸ்" டினோசார்.

______________________________________


பினாமி

ஓட்டுகள் எண்ணி
அம்பத்தொன்று விழுக்காடு வந்ததும்
சர்வாதிகாரமே
ஜனநாயத்தின் பினாமி.

________________________________________


ரெய்டு

அரசியல் ஷரத்துகளின்
வைக்கோல் போரில்
போட்டு போட்டு
தேடிக்கொண்டிருக்கும்
"ஊசி" விளையாட்டு.

__________________________________________


பொருளாதாரவளர்ச்சி


ஏழு சதவீதம் என்றால்
அரை வயிற்றுச் சாப்பாடு.
எட்டு சதவீதம் என்றால்
கால் வயிற்று சாப்பாடு.

____________________________________________


கருப்புப்பணம்

பணம் எனும் கருவி
என்ன செய்யும்?
பொருளாதாரம்
கொள்ளைக்கருப்பாக‌
இருக்கும்போது!

__________________________________________‍‍‍‍‍____


கருப்பு தினம்

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்!
தினம் தினம் இரவுக்கனவில்
கருப்பாய்த்தான் தெரிகிறது.

______________________________________________

நகைச்சுவை

நகைச்சுவை
=====================================ருத்ரா

டாக்டர்

நானும் அஞ்சு ரூபா டாக்டர் தான்.

நோயாளி

சந்தோஷமுங்க.

டாக்டர்

அஞ்சு அஞ்சு ரூபாயா என் ஃபீஸ் முன்னூறு ரூபாயை
சில்லறை மாத்திக்கொடுத்துட்டுப் போங்க .

==============================================

மராமரங்கள்

SDC12305.JPG

மராமரங்கள்
===================================ருத்ரா இ.பரமசிவன்

மறைந்து கொள்ளத்தானே வேண்டும்
உனக்கு.
இதையே மராமரங்களாக்கிக்கொள்.

தெய்வம்
காதல்
சத்தியம்
தர்மம்
அதர்மம்
ஜனநாயம்
ஆத்மீகம்
நாத்திகம்
சாதி மதங்கள்.

எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள் மனிதனே!
இவற்றிலிருந்து
கள்ளிப்பால் சொட்டுவது போல்
ரத்தம் கொட்டுகிறது
தினமும் உன் சொற்களில்.
மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்
கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.
உன் பிம்பங்களுக்கு
நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.
மனிதனுக்கு மனிதன்
உறவாடுவதாய் நடத்தும்
உன் நாடகத்தில்
அன்பு எனும்
இதயங்கள் உரசிக்கொள்வதில்
உனக்கு பொறி தட்டுவதல்லையே
ஏன்?

உன் வீட்டுக்குப்பையை
இரவோடு இரவாக‌
அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.
மறுநாள் காலையில்
உன் வீட்டுவாசலில்
சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்
மீன் எலும்பு மிச்சங்களும்
மற்றும் மற்றும்
உன் கால் இடறுகிறது.
மாம்பழம் நீ சாப்பிடவில்லை.
மீன் சாப்பிடவில்லை.
எப்படி இது?
உன்னைப்போல்
அடுத்த வீட்டுக்காரன்
விட்ட அம்புகள் இவை.
உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.
அதனால்
உன் வீட்டுத்திண்ணைக்கு
இந்த கனமான இரும்புக்கிராதிகள்.
என் நிழலைக்கூட இன்னோருவன்
எச்சில் படுத்தல் ஆகுமா?
என்று
தனிமை வட்டம் ஒன்றை
உன் கழுத்தை இறுக்கும்
கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.

பார்
இந்த மரங்களை.
பட்டாம்பூச்சிகள் கூட
இங்கே வந்து
படுக்கை விரிப்பதுண்டு.
சிறு குருவிகளும்
தங்கள் சுகமான குகைகளை
குடைந்து கொள்வதுண்டு.
அவைகளின்
அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்
அவற்றின் பூக்குஞ்சுகளே.
பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்
அவற்றின் பசியாற்ற‌
இந்த நீலவானம் முழுதும்
உழுது விட்டு
இப்போது தான் வந்திருக்கின்றன.

நல்ல உள்ளமும் தீய உள்ளமும்
அம்பு போட்டு
விளயாடும் இடங்களே
மனங்கள் எனும் மராமரங்கள்.
மரத்தில் மறைந்த மரமும்
மரத்தை மறைத்த மரமும்
இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.
அவற்றின்
முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.
இயற்கையின் உள்ளுயிர்
கூடு விட்டு கூடு பாயும்
வித்தையில் தான்
எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே
கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.
இங்கே
வரிசையாய் நின்று கொண்டிருப்பது
திருவள்ளுவரா? திரு மூலரா?
ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?
ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?
நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?

===================================================
மே 11 2014ல் எழுதியது.


வியாழன், 16 நவம்பர், 2017

"அறம் " நயன் தாரா

"அறம் "  நயன் தாரா.
=======================================ருத்ரா

இந்த‌
"அறம்" வளர்த்த நாயகிக்கு
நூற்றுக்கு அறுபது
போட்டுவிட்டது ஆனந்தவிகடன்.
என்றாலும்
உள்ளே
நூற்றுக்கு நூறு என்றே
அர்த்தப்படுத்தி காட்டியிருக்கிறது.
சினிமாத்திரையில்
புஷ்டி காட்டுவது ஆண்கதாநாயகர்களே
என்ற
கல்லாப்பெட்டி இலக்கணத்துக்கும்
கல்லறை கட்ட வந்திருக்கிறது
இந்தப்படம்.
நயன் தாரா அவர்களின்
நடிப்பில்
துடிக்கும் ஒரு விடியல் இருக்கிறது.
முகமா? கண்களா?
ஒரு நெருப்பு லாவாவின்
ரோஜாப்பூக்களை
அவர் தோட்டமாக்கியிருக்கிறார்.
ரொம்ப காலமாகவே
ஊர்வசி விருதுகள் துருப்பிடித்து தானே
கிடக்கின்றன.
அந்த "ஊர்வசிகளின்"
ஒளி ஊர்வலம் நயன் தாரா!
ஆட்சி எந்திரத்தின்
ஆணிகளும் அமைப்புகளும்
மனிதத்தை  கூழாக்கி
தன் கடகடத்த
அசிங்கமான சத்தங்களுக்கு
"கிரீஸ்" போட்டுக்கொள்கிற‌
அவலங்களை தோலுரித்த‌
கோபி நயினார் அவர்களின்
இயக்கத்தில் சமுதாய இதயத்தின்
இயக்கம் இருக்கிறது.
அது உண்மையில் ஆழ் துளை கிணறு அல்ல.
அந்த இரண்டரை மணிநேர
பிரசவ வலிக்குள் இருந்தது
இன்னும் கர்ப்பமே ஆகாத
நம் மக்கள் ஜனநாயகத்தின்
பிஞ்சுத்துடிப்புகள் தான்.
அந்த தருணங்களை
ஒரு ஊசிமுனையாக்கி
நம் குற்றங்களுக்கு
நம்மையே அதில் கழுவேற்றி
நம்மை ஒரு வலிக்கடலில் தள்ளி
பாடம் சொன்ன
அந்த காமிராவும் காட்சி அமைப்பும்
ஒரு படைப்பின் சிகரத்தை
எட்டி விட்டது.
இதன் பிரம்மாக்கள் ஆன
ஓம்பிரகாஷும்  பீட்டர் ஹெய்னும்
நம் மனமார்ந்த போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஜிப்ரானின் மென்மை இசைக்குள்ளும்
புயலின் சிறகுகள் ஒரு புளகாங்கிதத்தை
பதிவு செய்கின்றன.

அந்த ஆழ்துளையில்
துளைத்தெடுக்கும் கேள்விகள்
நம் அரசியலின்
பரிணாமத்தைப் பற்றியது தான்.
இந்த ஓட்டுப்பெட்டிக்குள்
விழுந்து கிடக்கிற
நம் ஜனநாயகக்குழந்தையை
மீட்க நம் கைகளின்
"அறம் சீறும் "
நரம்புகள் தான்
இனி முறுக்கேற்றிக்கொள்ள  வேண்டும்.

=====================================================


புதன், 15 நவம்பர், 2017

எம்.கே.டி

தியாகராஜ பாகவதர் க்கான பட முடிவு

(தமிழ் விக்கிப்பிடியா )


எம்.கே.டி
==========================================ருத்ரா

"அன்னையும் தந்தையும் தானே..."
"கிருஷ்ணா முகுந்தா..."
அசோக் குமாரில் அந்த‌
தாலாட்டுப்பாடல்..
இன்னும் எத்தனையோ பாடல்கள்..!
பிரபஞ்சமே இழைந்து குழைந்து
நம் உயிர்களில் ஊடுருவும்.

அந்த‌ பாடல்களில்
இன்னும் அந்த சிங்கத்தலையை
சிலிர்த்துக்கொண்டு வரும்
எம் கே டி யின் இசை
யுகங்கள் யுகங்கள் யுகங்கள்
என்று
தாண்டிக்கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு புதிய கடவுள் தோன்றி
இந்த இசைச்செல்வனை
தட்டி எழுப்பி
நமக்குத்தரமாட்டானா?
என்ற ஏக்கத்துக்கு மட்டும்
மரணங்களே இல்லை.
தங்கத்தட்டில் தான் சாப்பிடுவாராம்.
வைர மோதிரங்கள்
விரல்களில் விளையாடும்.
இசை என்பது நாதப்பிரம்மம் என்றால்
அந்த பாடல்கள் எனும்
பிரம்மோத்சவத்திற்கு
பொன்னும் வைரமும்
எவ்வளவு வேண்டுமானாலும்
குவிக்கலாம்.

=================================================

இமையோரத்தில்....

இமையோரத்தில்....
========================================ருத்ரா இ.பரமசிவன்.

"என்ன நடக்குது இங்கே?"
நாம் இந்த தூசிப்படலங்களில்
இமை விரிக்கிறோம்.
திடீரென்று கருட புராணம்
சிறகடித்துக்கொண்டு பறக்கிறது.
"கும்பி பாகம் கிருமி போஜனம்"
தூள் பறக்கிறது.
குற்றமும் தண்டனையும்
தராசுத்தட்டுகளில்
தட தடக்கிறது.
பாற்கடல் எனும் அரசியல் அமைப்பின்
ஷரத்துக்கள்
கடையப்படுகின்றன.
யார் அசுரர் ? யார் தேவர்?
எதுவும் தெரியவில்லை.
எதுவும் தேறவில்லை.
ஜனநாயகச்  சிவனின்
தொண்டைக்குள் நஞ்சு!
வெளியில் சில அசுரர்கள்
தேவர்களின் மடியில் சில அசுரர்கள்.
கொள்ளை உறிஞ்சலில்
கார்ப்பரேட்டுகளின் கோரைப்பற்கள்
இவர்களின்  எல்லா சந்நிதானங்களிலும்
தரிசனம் தருகின்றன.
அமுத குடம் எனும் ஓட்டுப்பெட்டிக்குள்
இன்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
பாற்கடல் எனும் போலியான
ஒரு நச்சுக்கடல்.
சிவன் என்ன? அரி என்ன?
ஊழல் சிந்தனையில்
உருண்டு திரண்டு
வரும்
அந்த பொருளாதாரப்பேயாசைகள்
எந்தக்குரல் வளையையும்
நெறிக்காமல் விடுவதில்லை.
சாதி மதங்களின்
சாக்காட்டு சாஸ்திரங்கள்
"ஓட்டு"  சாஸ்திரங்களை
ஓட ஓட விரட்டுகின்றன.
அரசியல் சாசனத்தில்
தனக்கு வேண்டியவாறு
பொந்துகள் ஏற்படுத்திக்கொண்டு
பொல்லாத சாஸ்திரங்கள்
மகுடம் சூட்டி வலம் வருகின்றன.
பணத்தை மட்டும் கருப்பு என்று சொல்லி
அதே கருப்புப்பொருளாதாரத்தை
வெள்ளையடித்து
வெறும் நகப்பூச்சு செய்தாலும்
அந்த கூர்நகங்களில்
சொட்டும் ரத்தம் எங்கும் தெரிகிறது.
தூங்கிக்கிடப்பவர்களே ..இந்த
தூசிக்கடல் தாண்டி
எதிர் நீச்சல் போடுங்கள்.
உங்கள் விடியலுக்கு
இன்னும் எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள்  வேண்டுமோ  தெரியவில்லை?
திடீரென்று சோம்பல் முறித்து
படுத்துக்கிடக்கும்
மூடத்தனத்தின் இந்த பழம்பாயை
சுருட்டியெறியுங்கள்!
அதோ இமையோரத்தில்
வருடும்
ஒரு புதுச் சூரியன்!

================================================