வியாழன், 25 ஜூலை, 2024

ஈரோடு தமிழன்பனின் "இடைவேளை" பற்றிய கவிதை




"இடைவேளை"பற்றிய‌

உங்கள் சொற்களின் பாய்ச்சலில்

அந்த மின்னல் இழையை

வருடிப்பார்த்து விடலாம்

என்று நாங்கள்

தோற்றுப்போனதில்

மகிழ்ச்சியே வெள்ளமாய்

கரை புரண்டு ஓடியது.

வரிக்கு வரி

கரை உடைத்து ஓடும்

அந்த காவேரியின் பூநுரைக்குள்

ஆயிரம் ஆயிரம் புயல்கள்.

தலை உடல் வால்

என்று கசாப்புத்துண்டுகள்

போடக்கூடியதா

காலம் எனும்

உங்கள் கவிதை காட்டும்

காட்டாற்றுப்பாம்பு?

அதிலும் 

அந்த மருத்துவர்களின்

மூச்சுக்காடுகளுக்குள்

முடங்கி கிடக்கும் நோய் உற்ற‌

உயிர்களை

மீட்டுத்தரும் அந்த கணங்களின்

வெற்றித்துடிப்புகள்

கோடி இமயங்களை

கொண்டுவந்து குவிக்கும் 

வரிகள் ஆகும்.

உங்களோடு ஓடிவரும்போது

அந்த சொற்களில் நட்டுத்தரும்

உங்கள் மைல்கற்களில்

பின்னோக்கி ஓடும்

ஒரு டைம் ட்ராவல் ஓர்மை

எங்களுக்குள் புகுந்து கொண்டு

அந்த குறுந்தொகைத்தமிழை

குழைத்துத்தரும் உங்கள்

மூச்சுக்களில்

நாங்களும் முத்துக்குளிக்கின்றோம்.

தமிழின் படிப்பறிவு மட்டும் அல்ல‌

அதன் பட்டறிவும்

உங்கள் கவிதையில் பட்டுத்தெறித்து

பட்டொளி வீசுகிறது.


அன்புடன்

சொற்கீரன்

(இ பரமசிவன்)








___________________________________________________________________


இடைவேளை நேரம்
ஓடும் படம்
தேநீர் குடிக்க வடைமுறுக்குக்
வகையறா முடிக்க
மக்களுக்காகத்தன்
ஓட்டத்தை நிறுத்துகிறது
வெண்சுருட்டுப் புகைமணத்தில்
வெளிவருகிறது
விமர்சனச்சாம்பல்.
ஓய்வறைமுன் காத்திருப்புக்குக்
கால்வலி கடுத்துவிடுகிறது
பகல்பொழுதும்
இரவுப்பொழுதும் இப்படியான
இடைவேளைகள்
ஏன்விடுவதில்லை?
பகலின் இடைவேளைகளில்
வெளிச்சம்
விவாகரத்து வாங்கப்போய்விடுமோ?
இரவோடு
வாழ்க்கைஒப்பந்தம்செய்துகொள்ளுமோ?
இரவின் இடைவேளைகளில்
நட்சத்திரங்கள்
பகலை உடுத்திக்கொண்டு
படிக்க எந்தப் பள்ளிக்குப் போகும்?
மூச்சின்
இடைவேளைகளில்தான்
மருத்துவர்கள்
வேலை பார்க்கிறார்கள்.
உயிர்விளக்கை எரியவைத்துவிட்டு
வெளியேறுகிறார்கள்.
இந்த
இடைவேளைகளில்
வாழ்க்கை
சிலருக்குத் தன்னம்பிகை தயாரிக்கிறது.
சிலருக்குக்
கையறுநிலைக் கவிதை புனைகிறது.
ஓடும் நதியை
நடுவில் துண்டித்தால் எந்தப்
பகுதி மிகுதியாய் வருந்தும்?
உலவும் காற்றின்
குறுக்கே
உறைவாளை வீசினால்
அடர்வனச் சரிவுகளில் குருதிபெருகுமே
யார் துடைப்பது?
இடைவேளைகளில்மட்டுமே
வாழும் மக்களுக்கு
எப்போதும்
வாழும் வாழ்க்கை
எப்போது கிடைக்கும்?
...................................................
தலைப்பு-இடைவேளை
25-07-2024.காலை9-55

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக