முத்தங்களின் கலித்தொகை
___________________________________
அந்திச்சிவப்பில்
மூழ்கும் சூரியன்
முத்தம் கொடுக்கிறது
என்று எழுதுகிறேன்.
விரியும் சிறகுகள்
குவியும் போதெல்லாம்
அவை
முத்தங்கள் என்று எழுதி
பறவைகளுக்கு
சூடேற்றுகிறேன்.
மின்னல் நெளியும்
வானத்து வரிகள் எல்லாம்
அதற்கு
இனிமை அதிர்ச்சியின்
காக்காய் வலிப்புத் தருணங்கள்
தந்த தரமான முத்தங்கள் என்று
கவிதை எழுதினேன்.
அதோ அதோ
சிவப்புக்குமிழ் துருத்திய
அந்த அழகிய குப்பியை
அவள் கையில் எடுத்துவிட்டாள்.
உதட்டுச்சாயம் பூசப்படும்
அந்த செர்ரிப்பழக் கீற்றுகளுக்கு
இனி
முத்தங்களின் கலித்தொகை தான்.
அதோ தெருவில்
ஒரு வீட்டின் முன்
தென்னை ஓலையை வெட்டி
படுக்கை
தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்
சேகண்டி சங்குகள்
ஒலிக்கத்தொடங்கி விட்டன.
காலன் தன் இறுக்கிய உதடுகளைக்
குவித்து
அங்கே ஒருவருக்கு
முத்தம் தந்து விட்டான் என்று
புரிகிறது.
ஜனனம் மதுரம்
மரணம் மதுரம்
என்று இனித்து இனித்து
ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறாரே
அந்த "காலடிக்காரர்."
அப்படியென்றால் அந்த
சமன்பாடு அதோ
இன்னொரு வீட்டில்
ஒரு பெண்ணின் இன்பமான துன்பம்
கன்னிக்குடம் உடைத்து
இதழ் பிரிந்த முத்தம் ஒன்றை
இந்த மண்ணுக்கு தரப்போகிறது.
வாயெல்லாம் தேன்வழியும்
மழலைகளின் மழை முத்தங்கள்
கோடி கோடி செல்வங்கள்!
ஆக....முத்தம் என்பது
சட். நிறுத்து
உன் முத்தங்களின் சத்தத்தை.
தாங்க முடியவில்லை.
முடியாது..
இந்த உலகம் எனும் ஆரஞ்சுப்பழம்
சுளை சுளையாக
சுவைக்கிறது அந்த முத்தங்களை.
____________________________________________
மின்னற்பீலியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக