செவ்வாய், 1 நவம்பர், 2016

காக்காமுட்டை ஆம்லெட்


காக்காமுட்டை ஆம்லெட்
===============================================ருத்ரா இ பரமசிவன்
(ஆண்டவன் கட்டளை)


இயக்குநர் மணிகண்டன்
இயல்பாக சம்பவங்களை கோர்ப்பதில்
கெட்டிக்காரர்.
சின்னப்பையன்கள்
திருட்டு மாங்காய் அடிப்பது தான்
காலம் காலமாய் காட்டப்படும் சித்திரம்.
அவர்கள் "பீட்ஸா" சாப்பிட ஆசைப்பட்டதில்
உலகமயப்பொருளாதாரத்தின்
துடுக்குத்தனமே தான்
காரமும் நெடியுமாய் தூக்கலாய் நின்றது
என்பதை காட்டுவதன் மூலம்
சிறப்புத்தன்மை பெற்று விட்டார்.
அந்த சிறுவ நடிகர்களின் எளிய ஆசை
எப்படி பீட்ஸாவுக்குள் புகுந்தது என்பதை
அவர்களின் காக்கா முட்டை வேட்டையில்
விவரிக்கப்படுகிறது.
இந்த "ஆண்டவன் கட்டளையில்"வேகின்ற‌
புதுமை பீட்சா "விஸா" பெறுவதன் இடியாப்பசிக்கல்கள் தான்.
காக்காமுட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தூவல்கள் தான் இயலும்.
ஆனால் இந்த "விஸா" பீட்ஸாவில்
டாப்பிங்க்ஸ் ஆக ஆலிவ் மஷ்ரூஉம் பெல்பெப்பர்
மற்றும் தக்காளியும் ஆலப்பினோ வெல்லாம்
போட வேண்டுமே ..
அதற்குத்தான் விஜயசேதுபதி யோகிபாபு அந்த இலங்கை அகதிக்காரர்
எல்லாம் அருமையாக செதுக்கப்பட்டு
படம் முழுதும் தூவப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கைக்காரர் நம் இதயம் ஊடுருவுகிறார்.
யோகி பாபுவோ எல்லா ட்ராக்கிலும் அநாயசமாக ஓடுகிறார்.
லண்டனிலிருந்து அவரது அந்த ஃபோன் லூட்டியில் தியேட்டரே
அதிர அதிர சிரிக்கிறது.
சில இடங்களில் அவர் நம்மை உருக வைக்கிறார்.
மந்திர வாதிக்கு உயிர் ஏதோ ஒரு கிளிக்குள் இருக்குமாமே.
இவர் காமெடியின் உயிர் "சாம்ஸன் அன்ட டிலைலா மாதிரி
அந்த பம்பைத்தலையே.
அதை அசையாமல் அசைத்து
வார்த்தைகளை கடிக்காமல் கடித்து
ஒரு தனியான ஓசையில் துப்புவது போல் பாவலா காட்டி
நகைச்சுவை செய்வது அவர் பாணி. 
விஜயசேதுபதி வழக்கம்போல் பாத்திரத்துள் அவருக்கே உரியதாய்
ஒட்டிப்போகிறார்.
விஜயசேதுபதியை இத்தகைய அசத்தலான நடிப்பின் மூலாம்
லேமினேட் செய்து அசுரத்தனமாய் காப்பிகள் எடுப்பது போல‌
தினத்துக்கு ஒன்றாய்
புதுப்படங்கள் எடுத்துத்தள்ளலாம்.
ஆனால் படத்துக்கு படம் அவர்காட்டும் வித்தியாசங்கள் அருமை.
ஊமை ஜாடையில் கையையும் வாயையும் அசைத்து
ஒரு வினோத ஒலி எழுப்புவதாகட்டும்
நாசரின் முன் ராஜநடையை படு யதார்த்தமாய் ஆனால்
கம்பீரமும் மிடுக்கும் அதில் இழையச்செய்வதாகட்டும்
அவ்வளவும் அருமை.
காதல் காட்சியில் முரட்டுத்தனத்தை மென்மையாய் குழைத்து
அந்த கதாநாயகியின்கண்களோடு கலந்து விடுகிறார்,
மணிகண்டன் இதை வணிகப்படம் போல காட்ட முயன்றும்
விஜயசேதுபதியும் யோகி பாபுவும் அந்த காக்காமுட்டை பசங்கள் போல்
மகா அக்குறும்பு பண்ணுவதால்
படத்தில் கமர்சியல் நெடி இல்லை.
இந்த காக்காமுட்டை ஆம்லெட்டில்
சரியான மசாலாக்கள் விஜயசேதுபதியும் யோகி பாபுவும் தான்

============================================================

3 கருத்துகள்: