செவ்வாய், 8 நவம்பர், 2016

கறுப்புப்பணம்




கறுப்புப்பணம்
============================================ருத்ரா இ பரமசிவன்

ஸ்கெலிடன்ஸ் இன் தெ கப் போர்டு
எலும்புக்கூடுகளை அள்ளிக்கொணர்ந்து போட்டுவிட்டது
ஸ்விஸ் பேங்க்.
அவற்றின் முகம் எது?
கை எது? கால் எது?
பகவான் உண்டியல்களில்
பெய்யும் கருப்பு மழையிலாவது
பக்கத்தே கொஞ்சம் பலன் செழிக்கும்.
இந்தப்பட்டியலின் படிக்கட்டுகள்
வழியே இறங்கி
எந்த பாதாள பரவியை
குறி கேட்பது?
"பூனை பையை விட்டு வெளியே வந்து விட்டது"
அதன் கொடூர நகங்களில் எல்லாம்
ட்ரஸ்ட் எனும் நகப்பூச்சுகளின்
நகாசு வேலைகள் தான்
பிசாசுகளாய்
நம் பொருளாதாரத்தை
பிய்த்துத் தின்கிறது.
ஒரு ரூபாய்க்கு
நூறு மடங்கு
எம் ஆர் பி போட்டு
செதில் செதிலாய்
இந்த நுகர்வோர்களை
செதுக்கித்தின்னும்
தாராளமய பூதங்கள்
இன்னும் தங்கச்சங்கிலி கட்டிய‌
பொமரேனியன்களாய்
உலாவந்து கொண்டிருக்கின்றன.
ரியல் எஸ்டேட்டின்
அர்த்தமே
பூதாகாரமான பொய்மைப்பணங்கள் தான்.
இதைத்தான்
பொருளாதார மேதை "ரிக்கார்டோ"
"குவாஸி ரெண்ட்"
எனும் போலி சந்தை மதிப்புகள்
என்கிறார்.
மணல் துளிகூட‌
கோடிகள் தரும் பொன் துளிகள்.
ஸ்டீலும் சிமிண்டும் செங்கலும்
தங்கமலைச்சுரங்கங்கள்.
பதினைந்து ரூபாய் தோசை
அறுபது ரூபாய் எழுபது ரூபாய்க்கு
போகிறதென்றால் அது எப்படி?
மக்களின் பேராசை வெள்ளம்
பண மழையாய்
எல்லா அடிப்படை மதிப்புகளையும்
அடித்துக்கொண்டு போகிறது.
அந்த "கீன்ஷியன் ரெவெலியூஷனை"
அரங்கேற்றி வைக்கிறது.
காற்றும் தண்ணீரும்
கரன்சி உடுத்துக்கொண்டு
காபரே டான்ஸ் ஆடுவதில்
காந்தியப்பொருளாதாரம்
சவப்பெட்டியில் கிடக்கிறது.
யாருக்கு யார் நியாயம் பேசுவது?
ஒருவர் நியாயம் மற்றவர் அநியாயம்.
கொட்டிக்கவிழ்த்த‌
வாக்குச்சீட்டுகளில்
கறுப்பு ஆசைகளுக்கு
கங்கணம் கட்டிவைத்த‌
இலவசங்களே...
எண்ணப்பட்டு
நாற்காலி ஏறிக்கொள்கின்றன.
கையை ஒடித்து காலை ஒடித்து
கண்ணக்குருடாக்கி
ஒரு "பிச்சை" உலகத்தை
படைக்கும் பிரம்மாக்கள் கூட‌
இந்த தேர்தல் சாணக்கியர்களிடம்
பிச்சை வாங்க வேண்டும்.
அத்தனை துல்லியம்!அத்தனை கணக்கு!
இந்த இலவசங்களே
இன்றைய ஜனநாயகத்தின்
இதயங்கள் ஆகிப்போனது.
உலக மேப்பில் தென்படுகிற‌
குட்டித்தீவுகளைக்கூட‌
விலைக்கு வாங்கி
வீட்டின் தூணில்
ஆட்டுக்குட்டிகளைப்போல் கட்டிவைத்து
அழகு பார்க்கிற‌
அரசியல் சூத்திரதாரிகள்
கோடிகளையே கோடிக்கணக்கில்
கோணிப்பைகளில்
புண்ணாக்கு மூட்டைகளாய்க்கட்டிப்போட்டு
புண்ணாக்குகின்றனர்
நம் சுதந்திரத்தையும் சோசலிசத்தையும்.!நம் மூவர்ணத்தின்
நடுவில் உள்ள‌
அந்த வெள்ளையைக் கொண்டு தான்
கருப்புப்பணத்துக்கு
வெள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்களோ?

============================================================
2 நவம்பர் 2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக