திங்கள், 21 நவம்பர், 2016

அர்த்தம் தேடி.....(2) 

அர்த்தம் தேடி.....(2) 
=======================================ருத்ரா 

இந்த பளபளப்பான 
கண்ணாடிக்கட்டிடங்களில் 
உலகத்துக்குள்ளேயிருந்தே 
இன்னொரு 
உலகம் 
கணினியின் 
அலைவிரிப்பு எனும் 
துணி விரிப்பில் 
கன்னிக்குடம் உடைத்துக்கொண்டிருக்கிறது. 
பிஞ்சு விரலாய் வருடும் போதே 
பிரளயமாய் வருகிறது. 
முயல் கண்ணில் 
சிறு முறுவல் காட்டும்போதே 
கோரம் காட்டும் 
ஒரு "ஏலியனையும்" 
அடைகாத்து 
முதுகில் கட்டிக்கொண்டிருக்கிறது. 
அன்பு என்று 
ஒலிக்கத் துவங்குவதற்குள் 
அம்புப்படுக்கையை 
வயதுகள் அரித்த 
இந்த பீஷ்மர்களுக்கு 
விரிக்கத்துவங்கி விட்டது. 
ஐன்ஸ்ட்டீனும் 
எட்வர்டு விட்டனும் தந்த 
அழகிய கணிதத்தைக்கூட 
பங்கு மூலதன பகடைக்காய்களாக 
பரிணாமப்படுத்த முடியுமா 
என்று கூர் வேகம் காட்டும் 
ஒரு பாம்புச்சட்டையில் 
தோலுரித்து 
உயிர் விழுங்கிக்கொண்டிருக்கிறது. 
வாழ்ந்து காட்டுவதை விட 
வாழ்ந்து குவிப்பதே 
நமக்கு வேண்டிய "அல்காரிதம்" 
என்று வேட்டையாடுவதற்கு மட்டுமே 
இங்கு 
விசைப்பலகையும் 
விரல்களும். 
ஆழ்ந்த கல்வியின் 
அழகிய வீணை 
அதோ 
அந்த சரஸ்வதி காலண்டரில் 
அழகாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.

====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக