"பொன்னாத்தா"
=========================================ருத்ரா இ.பரமசிவன்
எம்புட்டு உசுரு ஓம் மேலெ.
ஒனக்கு அது புரியாது.
பூப்போட்ட ஏங் கண்டாங்கி
பூதோறும் தீப்பிடிக்கும்
நான் பொசுங்க பாக்கலையா
கொண்டயிலெ செருகிவெச்சேன்
சம்பகப்பூங் கோத்தோட.
ஓ(ன்) நெனப்புக் கொத்து தான்
என்னெ இப்போ
கொத்துக்கரி போடுதய்யா.
ஓட ஓட வெரட்டி என்ன?
வருசம் தான ஓடுது
பரிசம் போட வந்துருய்யா
உரிச்சுத் திங்கி ஓ(ன்) நெனப்பு.
பேய்போல எரியுதய்யா
ஒந்நெனப்பு எனக்குள்ளெ
மூட்டை நெல்லு அவிச்சிரலாம்...அது
கோட்டை அடுப்பைய்யா
ஒல கொதிச்சு அடங்கினாலும்
அரிசியெல்லாம் வெந்தாலும்
ஊழிச்சத்தம் அடங்கல
ஊர்ப்பயலுக கண்ணுகளும்
குத்தீட்டி ஆகுதைய்யா.
வெட்டிக்கதை போதும்யா
வெரசா நீ வந்துருய்யா
வெந்த காடு தணியுமய்யா.
மின்னல் வெட்டிருச்சு
கன்னமும் பூத்திருச்சு.
கிழிஞ்சு போன விடிவானம்
வழிஞ்செடுத்த குங்குமத்த
மொகமெல்லாம் பாரய்யா.
வேர ஒருத்தவனும்
பாக்குமுன்னே மொகமேந்தி
தூக்கிவிட வந்துருய்யா.
தூக்கமெல்லாம் கரஞ்சு போயி
ராக்கோழியோட நானும்
ஓடிப்பிடிச்ச வெளயாட்டு
போதும்யா போதும்யா
உயிர கய்யிலெ புடிச்சு
கண்ணுக்குள்ள ஒன்னப்புடிச்சு
வதங்குறது தெரியலயா?
ஓம் மூச்ச புரியாக்கி
ஏம் மூச்சை அதில் கோத்து
கட்டிக்கிட்ட ஏந்தாலி இங்க
யாருக்கும் தெரியாது.
ஏம் மூச்ச வடம் புடிச்சு
தேரோட்டி தெனம் நடக்கேன்
மூச்சடங்கிப்போகுமுன்னே
வந்துரு ஏ(ன்) ராசாவே!
வட்டநிலா வரட்டியாகி
நெருப்பு வந்து திங்கும்முன்னெ
வந்துரு ஏ(ன்) ராசாவே!
தண்ணி குடிக்கையிலே
விக்கல் மேல் விக்கல் மேல்
விழுந்து தவங்கிடுவேன்.
அவந்தான் நெனய்க்கான்னு
மாயக்கா சொல்லிருவா.
மாயக்காவுக்கு மாயம் தெரியாது.
ஒன் நெனப்பு இங்கிருந்து
அங்கு விழும் அம்பாகி
ஏம் மீது கூர் பாக்கும்
மாய விக்கலிது.
மாயக்கா அரியலையே.
"என்னாத்தா பொன்னாத்தா"
இப்டி நீ கூப்பிட்ட
கமர்கட்டு கரயலயே.
உள்ளெல்லாம் இனிச்சுகிட்டு
உயிருக்குள்ள இனிக்குதய்யா
பாக்கணும் போல
சவுக்கடி தான் தெனந்தெனமும்!
சவ்வுமிட்டாய் வச்சு
செஞ்ச சவுக்குல நா(ன்)
அடிவாங்கி அடிவாங்கி
இனிப்பாய் மின்னல் வரி
உள்ளமெலாம் வடுவாச்சு.
ஓம் பொன்னாத்தா இங்கே
புண்ணாத்தா ஆயி இப்போ
புலம்புறது கேக்கலையா
காத்திருந்து காத்திருந்து
வாசப்படி புண்ணாச்சு.....பூ
வாசம் தூவி வரும்
காத்து கூட புண்ணாச்சு.
வெளக்குமாறு வெய்க்கல நான்
சாணி தேச்சு மொழுகல நான்
என்னுயிர தெளிச்சு நா(ன்)
பெருக்கி வச்ச வாசல் இது.
நெஞ்சுக்கூட்ட கோலம்போட்டு
பிஞ்சு கெடக்கிற பாவி நான்
வந்துரு ஏ(ன்) ராசாவே
வழியெல்லாம் என்னுயிரு
தாரா எளகிருக்கு
வந்துரு ஏ(ன்) ராசாவே ஒடனே
வந்துரு ஏ(ன்) ராசாவே.
=================================================
பொருள்வயின் பிரிந்த
தலைவனை எதிர்நோக்கி
தலைவியின் பசலை வரிகள்
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னே
அந்த ஓலைகளில்
பதிவிறக்கம் ஆகி
இன்றும் நம்
இதயங்களின் புழுதி பூத்த
கிராமத்துச்சங்கப்பலகையில்
ஊஞ்சல் ஆடும்
கலித்தொகையே
மேலே கண்ட ஒலித்தொகை.
==================================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக