திங்கள், 14 நவம்பர், 2016

இது நம் நாடு

இது நம் நாடு
==================================ருத்ரா

இது நம் நாடு.
நம் வீடு.
நாமே தான் கையில்
கோலேந்தி ஆளுகின்றோம்.

நாலு பேர் பஸ்ஸை எரித்தார்கள்.
நானூறு பேர் திரண்டார்கள்.
நாலு கோடி பேர்
முகநூலில் முகாரிகள் அரங்கேற்றினார்கள்.
நாலு லட்சம் கோடி ரூபாய்களை
சிலபேர்
தங்கள் "டிஃபன்"செலவுக்காக‌
ஏதோ ஒரு மர்ம வங்கியில்
போட்டு வைத்திருக்கிறார்கள்.
அதனால்
மற்றவர்கள் எல்லாம்
சாப்பிட ஒன்றும் இல்லாமல்
எலும்புக்கூடுகளாக‌
தெருவில் கிடக்கிறார்கள்.

பெண்கள்
உடை உடுத்திக்கொண்டு
நகை போட்டுக்கொண்டோ போடாமலோ
தெருவில் போக முடியவில்லை.
காந்தி அடிகள் சொன்ன‌
அந்த ரோடுகள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை
நீளமாய்த்தான் இருக்கின்றன.
பத்திரிகைகள்
மைக்குப்பதில்
ரத்தக்கண்ணீரைத் தோய்த்து தோய்த்து
எழுதுகிறார்கள்.
நீதிமன்றங்களும்
மரச்சுத்தியலால்
மேஜையை தட்டி தட்டி
நம் கீதைகளை
தூசி தட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.
இது
நம் நாடு.
இந்த தூசிகளும் நம் நாடுதான்.
செல்லாது
என்று சொல்லப்பட்ட
அந்த காந்தித்தாத்தா படம் போட்ட
காகிதங்களும் சேர்ந்துதான்
நம் நாடு!

=====================================================


================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக