செவ்வாய், 8 நவம்பர், 2016

உலகநாயகன் அவர்களே!

உலகநாயகன் அவர்களே!
===========================================ருத்ரா இ பரமசிவன்.

உலகநாயகன் அவர்களே..
உங்கள்
அகவை அறுபத்திரெண்டுக்கு
அக மகிழ்வோடு எங்கள் வாழ்த்துக்கள்!
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
என்று
பால் வழிந்த முகத்திலிருந்து
உங்கள் முகவுரை ஆரம்பிக்கிறது.
ஒவ்வொன்றாக பட்டியல் இடுமுன்
அந்த "பாலருவிக்குள்ளிருந்து"
தட தட வென்று
நடிப்பின் நயாகரா
பிரவாகம் எடுத்து விட்டது.
இருப்பினும்
கோவணம் கட்டிய நடையோடும்
வாயில் வெத்திலை குதப்பிய வாயோடும்
பேசும் சப்பாணியாய்
எங்கோ ஒரு உயரத்துக்கு போய்விட்டீர்கள்
பாலக்காட்டுத்தமிழா?
சிங்களத்தமிழா?
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.
ஏன்
அந்த "கடவுள் அமைத்த மேடை"பாட்டில்
"வென்ட்ரிலாகிஸ்ட் " பாணி மட்டும்
குறைச்சலா என்ன?  மகா அற்புதம்.
எல்லாவற்றையும் எழுத
மையே ஏழு சமுத்திரம் வேண்டும்!
"குணா".....
இதை உச்சரிக்கும் போது
சிக்மண்ட் ஃப்ராய்டே
மனோதத்துவ இயலுக்கு
உங்களை
ஒரு பல்கலைக்கழகம் ஆக்கிக்கொண்டிருப்பாரோ
என வியக்க வைக்கிறது.
"அசிங்கம்....அம்மா அசிங்கம் ..அப்பா அசிங்கம்..
அபிராமி உள்ள இருக்கா....
வார்த்தையெல்லாம் வெளிய இருக்கு..."
அந்த உள் உந்தலுக்கு
வெறும் சக்கையாய் துவண்டு
மனத்தின் நெருப்புச்சுவாலைகளைக்கொண்டு
சாவதானமாய் சொறிந்து கொள்வதைப்போல்
இருந்தாலும்
பார்ப்பவர்களின் ஆத்மாவை சுரண்டி வழித்து விடுகிறீர்கள்.
நாயகனிலிருந்து இன்றைய உத்தமவில்லன் வரை
நடிப்பின் மொத்த பளிங்கு வண்ணத்தை
செதில்களாக்கி சுருள சுருள‌
திருப்பி திருப்பி வைத்துக்கொண்டு
"கலைடோஸ் கோப்" பார்ப்பது போல்
உணர்ச்சிபிழம்புக்குள்
புதைந்து போகிறோம்.
இன்னும் உங்களை
"உலக நாயகன்"என்று அழைக்கும் போது
உங்கள் பிரம்மாண்டம் கண்டு
உலகத்துக்கே
வெட்கம் பிடுங்கி தின்கிறது.
ஏனெனில் அது
உங்களை விட சுருங்கி
ஒரு சின்ன குளோபாய்
அந்த மேஜையில் சுழன்று கொண்டிருக்கிறது.

=========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக