வியாழன், 24 நவம்பர், 2016

சினிமாத்தோட்டாக்கள்


சினிமாத்தோட்டாக்கள்
================================================ருத்ரா இ.பரமசிவன்




என் இனிய தமிழ்ச் சகோதரனே!
நீ வெள்ளம் தான்.
புயல் தான்.
பிரளயம் தான்.
ஆனால்
எப்போது?
ஏதாவது ஒரு படத்தின்
ஃப்ர்ஸ்ட் லுக்
அல்லது
டீஸர் வரும்போது தான்.
சுனாமி என்று
பினாமிக்கூப்பாடுகள்போட்டுக்
குதித்துக்கொண்டிருப்பாய்!
தமிழ் நாடே!
உன் மண் எங்கே?
மலைகள் எங்கே?
மொழி தான் எங்கே?
தங்கத்தமிழனே!
சினிமாவுக்கு சிறகடிக்கும்
ஊர்க்குருவி ஆகிப்போனாய்.
கட் அவுட் வைத்தே
உன் தமிழ் தேசத்தை
கட்டிக்கொண்டதால்
அண்டைத்தீவுக்காரன்
இங்குள்ள சாணக்கியரோடு சேர்ந்து
லட்சம் தமிழன்களை
பிணங்கள் ஆக்கியபோதும்
மறத்தமிழன் நீ
மரத்துப்போன தமிழன் ஆன‌
கொடுமை என்னே!
எரியும் பிரச்னைகள்
உன் கண்முன்னாலேயே
சுடுகாட்டுத்தீ மாதிரி
எத்தனை எத்தனை?
கறுப்புபணம்
எங்கேயோ
பொந்து வைத்துக்கொண்டு
கொண்டாடிக் களிக்கிறது.
திண்டாடித் தவிப்பவர்கள்
முதுகெலும்பு அற்ற‌
நடுத்தர வர்க்கமும்
அடித்தட்டு வர்க்கமும் தான்.
தேர்தலுக்கு வரிசைகட்டி
நிற்பதில்
எந்த குறைச்சலும் இல்லை.
ஆனால்
எந்த இடத்தில் இருந்தோமோ
அதே இடத்தில் தான்
நாம் கிடக்கிறோம்
என்ற உள்ளுணர்வு நமக்கு
இன்னும் உறைக்கவே இல்லை.
இது தான்
நம் அவலங்களின் பின்னணித்திரை.
பாங்குகளில் பிதுங்கி வழிகிறோம்.
நாம் உழைத்த வியர்வையும்
சம்பளம் என்ற‌
காகித சவங்களாய்
எங்கோ கிடக்கிறது.
கறுப்பு பண இருட்டுக்குள்ளே
இருக்கும்
ஈக்களையும் கொசுக்களையும்
அடிக்கும் மருந்து இருந்தும்
அங்கே பன்னீர் தெளித்து விட்டு
இங்கே
நம் கண்ணீரே நம்மை
காவு வாங்க விட்டு
ஆட்டம் காட்டுகின்றனரே.
பொருளாதார சூழ்ச்சிகளில்
புதைந்து கிடக்கிறோம்.
அரசியல் சூழ்ச்சியில்
தமிழும் புதைந்து போனது.
இதில்
சினிமா நிழலுமா உன்னை
சிலுவையில் ஏற்றுவது?
எங்கிருந்தோ
எங்கு நோக்கியோ
தோட்டாக்கள் பாய்கின்றன.
உன்னை நோக்கியும் பாய்கின்றன
மயக்கும் ஜிகினா லோகத்து...அந்த
சினிமாவின்
சிங்காரத்தோட்டாக்கள்!
சீரழிந்தது போதும் தமிழனே!
ஊரழியும் முன்னால்
உன் உரிமையைக் காத்து எழு!
அறிவின்
விழி காட்டி
மொழியின்
விழி காத்திடு தமிழா
ஒளி காட்டிடு நீ!

===============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக