வேடந்தாங்கல்
==========================================ருத்ரா
ஒன்று
நைந்த சிறகை ஆட்டி
அழகு பார்த்துக்கொண்டது.
இன்னொன்று
அலகை ஆற அமர கூர் தீட்டி
தினவை தீர்த்துக்கொண்டது.
ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அப்படி பார்த்ததே போதும் என்று
தாகம் தீர்த்துக்கொண்டது.
ஒன்று சிற்றலகு பிளந்து
உள்ளே செந்தளிர் போல் நா அசைய
இனிய ஒலியை
ஜாங்கிரி ஜாங்கிரியாய்
பிழிந்து
காடு கரையெல்லாம் இனிப்பு..
இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை
சிலுப்பி
எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய்
கொத்தி கொத்தி துளையிட்டது
வெறும் காற்றுப்படலத்தை.
ஒன்று
நேர்குத்தாக
தலைகீழாய் பாய்ந்து
அதை கவ்வியே தீருவது
தண்ணீர்ப்பிழம்பின்
மணிவயிற்றைக்கீறி
சிசேரியன் ஆவது போல்
சளக் என்ற சத்தத்தை
அங்கே எதிரொலித்தது.
ஒன்று அசையாமல் கிடந்தது.
அவ்வளவு தான்
அதைப்பார்த்து
மற்றொன்று கா கா ..வென்று
கீறல் விழுந்த கர்ர் சத்தத்தை
காற்றெல்லாம் தெளிக்க
அதன் சுற்றம் எல்லாம்
கருஞ்சிறகுக் காடாய் அங்கே குழுமி விட்டது
கருப்புச்சட்டைக்காரர்கள்
திடீரென்று அணிதிரள்வது போல்.
தாய்ப்பறவைகள் எல்லாம்
இன்னும்
தன் பொன் முட்டைக்குள்ளிருக்கும்
பொன் குஞ்சுகளோடு
இந்தப் பிரபஞ்சத்துக்கே
ஒரு பொன் விடியலை
கிழித்துக்காட்டும் பெருமிதத்தை
அரங்கேற்றி பாசாங்கு செய்தன.
ஊசி அலகு கொண்டு
பன்னீர்ப்பூக்குள்ளும்
தேன் சுவைக்க
சிறகை வினாடிக்கு
ஆயிரம் அதிர்வுகளாய்
துடித்துத்தீர்த்தது
சிட்டு ஒன்று.
"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
சிறகொடிந்த
அலகொடிந்த
ஒலி இழந்த
ஒளி இழந்த
அந்த பறவைகளின் "வேடந்தாங்கல்" அது.
பாசம் தாங்கியதெல்லாம் போய்
வெறும்
பஞ்சடைத்த
வைக்கோல் கூளமடைத்த
பறவைகளாய்
வேடங்கள் தாங்கிய இடம் அது.
அடைய கூடும் இல்லை.
பறக்க வானமும் இல்லை.
கால்களும் இல்லை.சிறகுகளும் இல்லை.
என்ற எல்லைக்கோடு
அங்கு ஆடிக்கொண்டே இருக்கிறது
"ஓலைக்கிளிகள்"போல.
அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக