திங்கள், 31 அக்டோபர், 2016

அங்கே ஓர் இடம் வேண்டும்.
அங்கே ஓர் இடம் வேண்டும்.
===========================================கல்லிடைப்பரணன்.
(26 செப்டம்பர் 2015 ல் எழுதியது.)


தமிழை ஒலித்தால்
காதுகளில் கம்பளிப்பூச்சிகள்.
தமிழ் பேசினால்
கசப்பு தான்.
தமிழ் எண்ணினால்
சோறில்லை.
தமிழ் எழுதினால்
இடமில்லை.
தமிழில் கவிதை
கொலவெரி தான்.
தமிழை மொழியென்றால்
நாடு கடத்து.
தமிழ் இனமென்றால்
தமிழனே
தமிழனுக்கு கல்லறை.
அது ஏன்?
தமிழ் வரலாறு
புழுக்களின் வரலாறு.
தமிழ் ஆத்திகம்
தமிழும் நாத்திகம்.
தமிழில் ஆங்கிலம்
தமிழே ஆங்கிலம்.
இனிக்கிறது என்று
தமிழில் தான்
இவன் பெயர் சொன்னான்
வடமொழியில்.

கல் தோன்றி மண் தோன்றுமுன்
வந்தவன் என்று
நைந்து கிடக்கிறான்
கல் குவாரியிலும்
மண் குவாரியிலும்.

உலகம் தமிழில்
ஒரு நாள்
இமை உயர்த்தும் என்று
நம்புவோம்.

அந்த‌
"ஞாயிறு" தோன்றும் வரை
திங்கள் முதல்
சனி வரை
இந்த
பஞ்சாங்கத்தில்
படுத்துக்கிடப்போம்.

உறுமுவது மட்டுமே
உரிமைகள் ஆகும்
என்று ஒரு மாயப்போதையில்
உருண்டு கிடப்போம்.

தமிழை
உருவாக்கும் முன்னே
தமிழை
கருவறுக்கவோ
இங்கு
இத்தனைக்கூச்சல்?
உலகம் எல்லாம்
கப்பல் விட்டவன்
ஒரு தீவில்
பிணங்களாய் குவிந்தான்.

அது ஒரு தாகம் என‌
கவிதைகள் சொன்னான்.
தமிழில் கூட
குண்டுகள் உமிழ்ந்து
தமிழ் உயிர்களை யே
குடித்திடும் கொடுமை
எப்படி வந்தது?
மூவேந்தர் என்று
வில்லும் அம்பும்
ரத்தம் தின்றபின்...தமிழ்ச்
சத்தம் மட்டுமே
இங்கு மிச்சம்.
இலங்கையின்
அரசஇலை நிழல் கூட‌
சொல்லும்
தமிழர் பிணங்கள்
மண்ணுக்குள்
மக்கிப்போனதை.
அன்பின் சத்தம்
சரணம் கச்சாமி
என்ற குரலில்
கசாப்புகள் மட்டும்
எதிரொலித்த‌
மர்மம் என்ன?
திகில் தான் என்ன?

ஐ.நா என்றார்கள்
ஆயிரம் ஈக்கள் மொய்த்த தென்ன?
ஈழத்தமிழ் உயிர்கள்
கொத்தோடு குலையோடு
கொல்லப்பட்டதை
செவி மடுக்க‌
டாலர் வியாபாரங்கள்
தயார் இல்லை.
போர் நெறிமீறி
மனிதம் கொன்று
தமிழைப்புதைத்த‌
அநீதிக்கு அங்கு
தராசுகள் இல்லை.
தமிழக சட்டமன்றம்
குரல் கொடுத்த போதும்
அசோகச் சக்கரத்து தூண்
நெடுங்கல்லாய் விறைத்து நின்று
இலங்கையின் இன்னா நெறிக்கே
கவரிகள் வீசுவது
என்ன நியாயம்?
என்ன நீதி?
இறையாண்மை போற்றுவோம் என்ற
போர்வையில்
தமிழைப்பிய்த்து தின்னும்
இலங்கை இனப்பசிக்கு
இரையாண்மை காப்பதையா
இந்திய ஜனநாயம் என்பது?

"தண் தமிழ் வேலி தமிழ் நாட்டக மெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ....."

பரிபாடலில் எட்டாம் பாட்டு இது.
புலவனின் முகம் தெரியவில்லை.
முகவரியும் இல்லை.
பாடலும் முழுமையில்லை.

இடிந்த கோட்டையின்
உருவகமாய்
தமிழின் புலம்பல் வரிகள்
கேளா இடமில்லை.

எங்கே தமிழ்? எது தான் தமிழ்?
அங்கே எனக்கு
ஓர் இடம் வேண்டும்!

=======================================
கல்லிடைப்பரணன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக