புதன், 16 நவம்பர், 2016

ஒரு குட்டிக்கதை

ஒரு குட்டிக்கதை
==================================ருத்ரா

ஒரு பூதம்
நின்று கொண்டிருக்கிறது.
அதன் காலில்
மனிதன் நிற்கிறான்
எறும்பு போல.
அல்லது சின்ன பூச்சி போல.
உன்னை அழிக்கப்போகிறேன்.
என்று
மனிதன் உரக்கக்கத்தினான்.
அதன் காதுகளில் விழவில்லை.
ஆர்ய பட்டா ராக்கெட் எல்லாம்
ரொம்ப உயரத்துக்கு விட்டும்
அதன் காதுகளில்
இவன் சொன்னது விழவேயில்லை.
இன்னும் என்னென்னவோ ராக்கெட்டுகள்
விட்டான்.
"உன்னை அழிக்கப்போகிறேன்"
இவன் சொல்லிக்கொண்டே இருந்தான்
அதற்கு கேட்கவேயில்லை.
ஆனாலும் அந்த பூச்சி
ஏதோ தன் ஒல்லி மீசையை
இப்படி அப்படி ஆட்டுவதைப்பார்த்து
அந்த பூதம் சிரித்தது.
திடீரென்று அது எதற்கோ குனிந்தது.
அப்போது தான் காதில் விழுந்தது.
தன்னை அழிக்கப்போவதாக‌
அந்த மனிதப்பூச்சி கூறிய குரலைக் கேட்டது.
இப்போது அது மேலும் இடிச்சிரிப்பு செய்தது.
"பலே!
என் கால் நிழலில் இருந்து கொண்டு
என்னையே அழிக்கப்போகிறாயா?
மேலும் சிரித்தது
சரி! ஒன்று செய்!
என் உயிர் இதோ எதிரே உள்ள கடல் தான்.
லாபம் பேராசை எனும் வெறி அலைகள்
நிறைந்த இந்த பொருளாதாரம் தான்
அந்த கடல்.
உன்னிடம் ஒரு சிறிய ஸ்பூன் ஒன்று தருகிறேன்
இதை வைத்து
இந்த கடல் நீரையெல்லாம்
வெளியே இறைத்து விடு.
அப்போதே நான் அழிந்து போவேன்.
சரி ..இந்த ஸ்பூனை வைத்துக்கொண்டு
அந்த கடலோடு விளையாடு ..போ.
மனிதபூச்சியும்
அந்த ஸ்பூனை வைத்து
கடலோடு இறைத்து இறைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறது.
ஆம்!
"நோட்டுகள் செல்லாது"
எனும் அந்த விளையாட்டு தான் அது!
இப்போதும்
பூதம் இடிக்குரலில்
சிரித்துக்கொண்டு நிற்கிறது

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக