சனி, 12 நவம்பர், 2016

மேல் முறையீடு

மேல் முறையீடு
==================================ருத்ரா

மேக மண்டலத்தில்
தங்க நாற்காலியில் இருந்த கடவுள்
திடீரென்று தவறி
பூமியில் விழுந்து விட்டார்.
கடவுள் மனிதனாகி விட்டார்.
மனிதனுக்குரிய‌
பூமியின் சட்ட திட்டங்களே தான்
கடவுளுக்கும்.
அவர் மேலே உள்ள
நாற்காலிக்கு செல்லவேண்டும்.
"நான் என்ன செய்ய வேண்டும்?"
மேல் நோக்கி
உரத்து குரல் எழுப்பினார்.
"நான் அங்கு இல்லையே
இப்போது யார் ஆட்சி செய்வது?"
உரத்து முழங்கினார்.
"இந்த நாற்காலி போதும்"
பதில் உடனே எதிரொலித்தது.
எத்தனை யுகங்கள்
கடந்திருக்கின்றன?
திரேதா யுகம் துவாபர யுகம்
அது இது என்று
எத்தனை கடந்திருக்கின்றன?
இப்போது தான் உணர்கிறார்.
அது எதிரொலி அல்ல.
அவர் முகத்தில் விழுந்த அறை.
"நான் மேலே வர என்ன செய்ய வேண்டும்?"
மீண்டும்
அவர் தொண்டை கிழிந்தது.
டி.வி யில் ஓக்லஹாமா பகுதியில்
சுழன்று சுழன்று அடித்த‌
"டோர்னாடோ" காட்டப்படுகிறது.
அந்த சுழல் சிப்பத்தில்
பிரமாண்ட கட்டிடங்கள் கார்கள்
கொழுத்த மடியுடன் காராம்பசுக்கள்
எல்லாம் தூசு துரும்பு போல்...
குலை நடுங்குகிறது.
"என்ன செய்வது?
ம்ம்ம்"
கடவுள் கர்ஜித்தார்.
"மேல் முறையீடு"...
குரல் கீழே வந்து விழுந்தது.
இது என்ன?
எந்த வசனத்திலும் இல்லையே!
எந்த வேதத்திலும் இல்லையே!
கடவுளுக்கு
யார் இதை புரிய வைப்பது?
மேக மண்டலத்திற்கும் மேலே ஒரு மண்டலமா?
எங்கோ
செவ்வாய்க்கோளில் பட்டா போட்டு ப்ளாட் போட்டு
வீடு கட்ட பதிவு செய்திருக்கும்
ஒரு அமெரிக்க கோடீஸ்வரரை அணுகினார்.
அவர் உதட்டைப்பிதுக்கினார்.
அருகே ஒரு மாம்பலத்துக்காரர்.
அமெரிக்க சரவணா பவனுக்கு காபி சாப்பிட வந்தவர்.
எப்படியோ கஷ்டப்பட்டு உச்சரித்து
"மேல் முறையீடு"பற்றி கடவுள் உசாவினார்.
"பக பக பக.."வென்ற சிரிப்புடன்
மாம்பலத்துக்காரர் போகச்சொன்ன இடம்...
"பெங்களூரு"

========================================================
2 ஜூன் 2015 ல் எழுதியது






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக