வெள்ளி, 18 நவம்பர், 2016

கம்பராமாயண குறும்பாக்கள் (2)


கம்பராமாயணக்குறும்பாக்கள் (2)
===================================================
ருத்ரா இ.பரமசிவன்




கூனி 

வால்மீகிக்கு போடத்தெரிந்த 
பிள்ளையார் சுழியே 
இவள்.

அனுமன்

நெஞ்சைப்பிளந்து
வீடியோ காட்டினான்
வால்மீகியின் கிராஃபிக்ஸ்.

விபீஷணன்.

சுவரில் ராமாயணப்படம்
மாட்ட கிடைத்த‌
ஒரு சுத்தியலும் ஆணியும்!

இலட்சுமணன்

ராமன் களைந்து போட்ட‌
சினத்தையும் சீற்றத்தையும்
இவனே உடுத்திக்கொள்வான்.

இலட்சுமணன் போட்ட கோடு.

விதியின் அர்த்தமே
மீறுவது தான்.
பாடத்துக்குள்ளும் ஒரு பாடம்.

மாரீசன்-சுபாகு 

மாயமான் ரோபோக்கள்
ராவணன் தயாரிப்பு
இதுவும் 2.0 தான்.

சத்துருக்னன்

பரதன் பாசத்தின் காட்டாறு
அவனைப்போல இவன்
வெளியே காட்டா ஆறு.



சூர்ப்பனகை

அண்ணனிடம் இதயம் பறிகொடுத்தாள்
ஆத்திரக்காரத் தம்பியிடம்
மூக்கை பறிகொடுத்தாள்.


வாலி

இவன் மார்பைத் துளைக்க‌
ஏழு மராமரங்களை ஊடுருவும்
வலிமையான அம்பே தேவை.

சுக்ரீவன்

ஆதி பங்காளிச்சண்டையை
கிஷ்கிந்தையில்
தொடக்கி வைத்தான்.

விசுவாமித்திரர்

சிறு பயல்கள் தானே என்று
ராம லட்சுமணர்களுக்கு விளையாட
"தாடகை" பொம்மையை கொடுத்தார்.

வசிட்டர்

வசிட்டனே புனைந்தான் மௌலி
என்று ராமாயணத்துக்கு சுபம்
"ஸ்லைடு" போட்ட குலகுரு.

==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக