திங்கள், 21 நவம்பர், 2016

அகத்தியன் அருவி

picasabackground.jpg

அகத்தியன் அருவி
===================================ருத்ரா இ பரமசிவன்

நயாகாராவை
அங்கே அந்த அகத்தியனின்
பிரமாண்ட வெள்ளைத்தாடி
விரிந்து பரந்து வீழ்ந்தது பார்த்து
வியந்தேன்.
இங்கே வெள்ளிமயிர்த்தூரிகையாய்
சன்னமான அமைதி ஓவியத்தை
சலங்கை கட்டி ஆடி
தமிழ்
சிலிர்த்ததை உணர்ந்தேன்,
நினவின் அருவிகளுக்கு
ஆறு தேவையில்லை.
வாய் பிளந்து
"மலை"க்க வைக்கும்
மலைகளும் தேவையில்லை.
கொஞ்சம் சிந்தனையே போதும்.
பேசாமல்
கல்யாணி தீர்த்தத்தின்
அருகே
அந்த குத்துப்பாறையில்
உட்கார்ந்திருங்கள்.
உங்கள் நரம்பெல்லாம்
உங்கள் நாளமெல்லாம்
அருவியாய் உருகி
உங்கள் ஆத்மாவைக்கொண்டு
உங்களை குளிப்பாட்டும்.
பாபநாசம் படிக்கட்டுகள் இறங்கி
முண்டக்கண் மீன்கூட்டங்களோடு
கால் அளைந்து
மீன்களால் கிச்சு கிச்சு மூட்டப்பட்டு
கொஞ்சம் புல்லரித்தபோது
டாலர்கள் எல்லாம் வெறுமே
செத்தைகளாக‌
அந்த நீர்ச்சுழிப்பில் மிதந்து
விரட்டப்பட்டு ஓடுகின்றன.
தாமிரபரணி
வைரங்களின் பரல்களாக‌
முகத்திலும் மூக்கிலும்
தொப்பூளிலும்
இடுப்பில் கட்டிய துண்டு வழியாக‌
வருடித் தழுவி இறங்குப்பொழுது
வைரத்திரவங்களாய்
ஏழு வர்ணங்களில்
கண்ணடிக்கின்றன.
சில சமயங்களில்
அப்படியே பாறையில்
உருண்டு திரண்டு உடைந்து சிதறி
விழும்போது சூரியன் புகுந்து
ஏழுவர்ண ரத்தமாய்
பிரவாகம் செய்கிறது.
யாரோ இருவர் எங்கேயோ எப்போதோ
காதலை
இப்படி விழுந்து
ரத்தக்கலைடோஸ்கோப்பில்
கோணம் திருப்பி திருப்பி
காட்டுகிறது தெரிகிறது.
நாவல் மரங்கள்
பெண்களின் கருவிழிகளை
பழங்கள் என்ற பெயரில்
காற்றில் ஆட்டி ஆட்டி
அசைக்கின்றன.
நீர்த்திவலைகளின் ஊடே
அந்த கருப்பாயிகளின்
கண்டாங்கிச்சேலைகள்
கொசுவங்களை சொடக்கும்போது
உலகம் தலைகீழ்.
"எலே ..இந்தா ரெண்டு இட்டிலி"
கரண்டைக்கால் ஆழத்தில்
வெண்பட்டு விரிப்பில் படுத்துக்கொண்டு
ஆற்றில் குளித்துக்கொண்டே
கையில் அம்மா பாசத்தோடு இடுவதை
வாங்கித்தின்று கொண்டு..
தாமிரபரணியின் ருசி
என் அம்மா அரைத்த ஈராய்ங்கத்தொவையலுடன்
இழைந்து கொண்டு விடும்.
மருதமரக்கொப்புகளும்
வளைந்து குனிந்து
ஆற்றுக்கன்னத்தை உரசி
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்.
அந்த அமுத எச்சில்களும்
எங்களைக் கழுவிக்கொண்டு ஓடும்போது
நரம்புக்குள் கூச்சம் யாழ் மீட்டும்.
பெரிய குரங்கு நடுத்தரக்குரங்கு
குட்டிக்குரங்கு குட்டியிலும் குட்டிக்குரங்குகள் என்று
கொத்து கொத்துகளாய்
படிக்கட்டுகளிலும்
மரக்கிளைகளிலும்
மாணிக்கக் குடிமக்களாய்
ஏதோ ஓட்டு போடும் பரபரப்பில்
அவை "ஒட்டுப்பொறுக்கி"களாய்
அங்கும் இங்கும் தாவுவது
கண்கொள்ளாக்காட்சி தான்.
வைரமும் முத்தும் பவளமும்
சிதறிக்கிடப்பதாய்
அந்த பொறி கடலை வகையறாக்கள்
அங்கே இறைந்து கிடப்பதாய்
அவை தேடி தேடி வரும்.
நிமிடத்தில்
அவையாவும்
அவற்றின் வாய்க்குள்
தாடைகள் புடைக்க பத்திரமாய்
சேமிக்கப்பட்டு விடும்.
எங்கள் அந்தக்காலத்து
நர்ஸரி ரைம் களான‌
"பாவநாசத்துக் கொரங்கு
படியை விட்டு எறங்கு'
குத்தாலத்துக் கொரங்கு
கொப்பை விட்டு எறங்கு"
என்ற வரிகள் எல்லாம்
எங்கள் செல்லச்சிணுங்கல்
சண்டைகளிலும் அரங்கேறும்.
அகத்தியன் அருவி
அகத்தில் "குணில் பாய்" முரசின்
ஒலிகளாக‌
அந்த முரட்டுப்பாறைகளில்
மஞ்சள் உரைத்து
நீரில் மஞ்சள் நிழல்களை
கரையவிட்டு குளிக்கும்
மங்கையர் தருணங்களை
மெகாத் தொடர்களாக்கி
நெளிந்து நீண்டு ஓடிக்கொண்டே இருக்கின்ற‌ன.

===============================================ருத்ராகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக