புதன், 23 நவம்பர், 2016

முதியோர் இல்லம் (3)
முதியோர் இல்லம் (3)
================================ருத்ரா இ பரமசிவன்.

பாசச்சித்திரங்களின்
தூரி"கை" ஒடிந்தன.
துடித்துச்சுமந்த‌
மணிப்பை சிதைய‌
தூக்கிச்சுமந்த இடுப்பும்
துவண்டு கழண்டு
மண்ணில் சுருள‌
தாய் இப்போது வெறும்
தசைகளின் மூட்டை.
தந்தை
அங்கே ஒரு மூலையில்
எலும்புக்குவியல்.
பிள்ளைகளும் பெண்களும்
எங்கோ
அவர்களின்
கூடுகள் நிறைந்த குஞ்சுகளுடன்.
ஒரு பிள்ளை அமெரிக்காவில்.
ஒரு பிள்ளை
அருகே அமிஞ்சிக்கரையில்.
தூரம்
குறுக்கே வரவில்லை.
இருப்பினும்
இங்கே
பூமித்தாய் பிளவு கொண்டாள்.
பிறப்பெனும் மின்னல் பற்றி
தாயின் நெஞ்சுக்கூட்டுள்
சிறுபொறி!
பத்து மாசத்துள்
எத்தனை யுகங்கள்
அடைந்து கிடந்தன.
திரேதா யுகங்களும்
துவாபரா யுகங்களும்
சுருண்ட‌
கருப்பைக்குள்
கடவுள் கூட‌
ஒரு குழந்தை தான்.
அந்த தொப்பூள் கொடியின் நீளம்
மில்லியன் மில்லியன் ஒளியாண்டுகள்.
....................
..........................
கோடி பிறப்புக்குள்
கோடி இறப்புகள்.
இந்த பிறவிப்பெருங்கடலின்
நீள் கரையில்
பெற்றவர் எங்கோ
பிறந்தவர் எங்கோ
வெறும் அமாவாசைப்பிண்டம்
கரைத்தா
எனக்கு ஊட்ட வந்தாய் மகனே!
அதற்கும்
உன் அரைநாள் லீவை
ஏன் கரைத்தாய் மகனே!
என்கேஷ்மென்ட் குறையாதோ?
வானத்தில்
கேள்வி மேகமாய் திரண்டது.
மிச்ச சொச்சங்களாய்
இந்த "ஜன்மா"க்களுக்கும்
"கர்மா"க்களுக்கும்
அதோ ஆகாசத்தில்
கதவுகள் இல்லாத
பூட்டுகள் இல்லாத ஒர்
முதியோர் இல்லம்.

===================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக