வியாழன், 10 நவம்பர், 2016

மணிவண்ணன்


மணிவண்ணன்
========================================ருத்ரா


தமிழ் நாட்டு நடிகர்களிலேயே
இவர் ஒரு மூளை வண்ணன்
அதாவது "அறிவு ஜீவி".
சமுதாய சிந்தனைகளில்
தன்னை புடம் போட்டுக்கொண்டிருப்பவர்.
இன்று நம்மிடையே இல்லை
என்று சொல்ல இந்த வரிகளைத்தூவ வில்லை.

நம் தமிழ்மொழியின் உயிர்ப்பயணத்தில்
இவர் நமக்கு முன்னே நின்று
சென்று காட்டிய‌
ஒரு மைல் கல் என்று சொல்லவே
இச்சொற்கூட்டம்.

கோவை வாசிகளில்
எம்.ஜி.ஆர் ஒரு சேரன் என்றும்
அதனால் அவரை நாம்
கண்ணை மூடிக்கொண்டே கும்பிடுவது தான்
நம்மை தூய தமிழன் என்று
காட்டிக்கொள்ளும் ஒளி என்றும்
நம்பும் நபர்களில்
இவர் கொஞ்சம் விலகி நிற்பார்.
கலைஞர் சோழன் என்றால்
நம் ஆள் சேரன் தானே!
அப்போ கத்தியை நீட்டி
சண்டை போட்டுக்கொண்டிருக்க வேண்டியது தானே
என்ற பாழாய்போன‌
சேர சோழ காம்ப்ளெக்ஸ் வேறு.
அதையும் மீறி
மற்ற அரசியல்கள்.
இந்த எல்லைக்கற்கள்
தொல்லைக்கற்கள் எல்லாம் தாண்டி
ஒரு பன்முக கலையை
திரைப்படத்தில்
நிலை நாட்டியவர் மணிவண்ணன்.
"நிழல்கள்"படத்தில்
மார்க்சிய நிழல்விழும் பாத்திரம்.
ஆனாலும் அவர் வெறும் நிழல் இல்லை
அந்த சித்தாந்தத்தின் கசிவு ஒளி அவர்.

எத்தனையோ படங்களில்
நகைச்சுவை பாத்திரங்கள்
தாங்கியிருக்கிறார்.
அமைதிப்படையில் சத்யராஜுடன் அவர்
காட்டியிருப்பது
சிந்தனையை கிளறும்
அரசியல் கார்ட்டூன்கள் கோர்த்த மாலை.

அவர் நடித்த "சங்கமம்" அவருக்கு சிகரம்.
இந்த சிகரத்துக்கு
விருது தர
இந்த தகரங்களுக்கு தான் மனது இல்லை.
நம் தேசிய விருதுக்கமிட்டியாருக்கு
மொத்த இந்திய தேசிய மேப்பில்
தமிழ்நாடு மட்டும்
ஓட்டை விழுந்தது போல் தான் இருக்கும்.
சும்மா பெரிய மீசைவச்சு தவில் அடித்து
ரிகஷாக்களை விட்டு சண்டை போட்டதற்கா
அவருக்கு "பாரத் விருது" கொடுத்தார்கள்?
தமிழ்ப்பங்காளியை வைத்து
மூல இனத்தான் தமிழனை காவு வாங்க‌
அது வடக்கே உள்ள‌
"தந்திர புரியின்" மூணு சீட்டு ஆட்டம்.
அதன் தொடர்ச்சி
நம் மேற்கு தொடர்ச்சி மலையை விடவும்
நீளமானது தான்.
நம் பண்டைத்தமிழ் இனத்தின்
மண்டை ஓடுகள் அங்கே
கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள்.

இருந்தாலும் நம் தமிழ் இனத்தின்
இன்றைய லட்சம் கபாலங்களை
அங்கே மண்ணுக்குள்
விழ வைத்திருப்பதும்
வடக்கு சாணக்கியத்தின்
சிலந்தி வலைச்சித்திரங்கள் தான்.
மணிவண்ணன் நமக்கு
இத்தனை இருட்டையும்
மொத்தமாக துடைத்து
ஒரு வெளிச்சமாய் மிளிரத் தெரிந்தவர்.
அந்த சிந்தனை வீரனுக்கு
நடுவோம்
நம் நெஞ்சத்தில்
ஒரு நடுகல்!

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக