புதன், 9 நவம்பர், 2016

காலம் என்றொரு லாலிபாப்






காலம் என்றொரு லாலிபாப்
======================================ருத்ரா

காலம் எல்லாம் காத்திருப்பேன்
என்று
காலம் சொன்னது.
முள் மேல் தவம் இருப்பவர்களைப்போல்
தவிக்கச்செய்யும்
காத்திருப்பு எனும் வேள்விக்குள்
அந்த காலமே விழுந்து கிடக்கிறது.
மணிக்கூண்டுகளில்
சின்னமுள்ளும் பெரியமுள்ளும்
ஒட்டிக்கொண்ட இடத்திலேயே
நாட்கணக்காய் நிற்கிறது.
கண்விழிக்கும் சூரியனுக்கும்
தடுமாற்றமே. 
நடுநிசியும் உச்சிவேளையும்
உறைந்து கிடக்கிறது.

ஏன் இந்த குழப்பம்.
ஒன்றும் இல்லை.
காதலிக்காக காத்திருந்த‌
காதலனிடம்
"காலம்" ஒரு டீல் போட்டது.
ஏன் இப்படித்தவிக்கிறீர்கள்.
உங்கள் காதலை
என்னிடம் கொடுத்துப்பாருங்கள்
என்றது.
அப்படியா?
இதோ என் காதலி
இன்னும் ஐந்து நிமிடத்தில்
வந்து விடுவாள்.
நான் போய்விடுகிறேன்.
நீயே காதலி!
அடப்பாவி!
இவ்வளவு தானா இவன் காதல்.
துரோகி.
பாவம் அந்தப்பெண்!
அவள் வரட்டும்
இவன் தண்டவாளத்தை
வண்டவாளம் ஏற்றுவோம்.
காலம் காத்திருந்தது.
கத்திருந்தது ...காத்திருந்தது.
அதன்
த்ரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம்
எல்லாம் ஒடியே போய்விட்டது.
காலம் களைத்து ஓய்ந்து
மல்லாந்து படுத்து விட்டது.
அதனால்
இந்த உலகமே உறைந்துநிற்கிறது.

"டேய்!எங்கேடா போய்ட்டே
இங்கே தானே
நின்று கொண்டிருப்பாய்"

காதலி கத்தினாள்.

சற்றுத்தள்ளி இருந்த விளக்குக்கம்பத்தின்
அருகில் இருந்து
அவன் வெளிப்பட்டான்.

ஹ்ஹாய்..ஹனி
அதெப்படி சொன்னபடி
ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாயே

வா. போகலாம்.
தியேட்டரில் படம் போட்டிருப்பார்கள்.
வா.ஏறு போகலாம்.

அவன் ஸ்கூட்டியை கிளப்பினான்.
காலம் அவர்களுக்கு மட்டும்
ஒரு லாலிபாப்!

காலம் கண்விழித்து
மலங்க மலங்க விழித்தது.
நான் எந்த யுகத்தில் இருக்கிறேன்?
காலம் தன்னையே
கேட்டுக்கொண்டது?

=======================================ருத்ரா
24 ஜனவரி 2014 ல் எழுதியது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக