ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஒரு சொட்டு கண்ணீர்




ஒரு சொட்டு கண்ணீர்






===================நசுங்கியகோடுகள்..====================ருத்ரா

தூரிகையும் வர்ணமும் பொருட்டல்ல‌
பிக்காஸோவுக்கு.
ஒற்றை மயிரிழைக்கோட்டின்
சிலிர்ப்புகள் போதும்.
நான் 
அந்த நசுங்கிய கோடுகளின் வழியே
என் கவிதைக்காடுகளுக்கு
பயணிப்பதே இது.
என் கோட்டொவியங்களில்
சுருள் வரிகளாய் இங்கே
என் கவிதை.





ஒரு சொட்டு கண்ணீர்
===============================================ருத்ரா இ.பரமசிவன்


அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக
என்னால் முடிந்தது.......


தென்னை மரங்கள் தலை சிலுப்பும்
அந்த சின்னத்தீவில்
எறும்புகளுக்கு கூட நோவும் என்று
மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட
துடைப்பம் கொண்டு கூட்டப்படும்
புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும்
அந்த பூமியில்
தமிழ் மொழி
எலும்புக்குப்பைகளாய்
எருவாகிப்போனதற்கு
என்னால் முடிந்தது .....

இங்கே காலி டப்பாக்கள்
தட்டி கொட்டி
விடுதலை கீதம் என்று
வீண் ஒலிகளை
கிளப்பிக்கொண்டு கிடக்கையில்
என்னால் முடிந்தது .....

தேர்தல் கால
பணங்காய்ச்சி மரக்காட்டுக்குள்
வாக்குறுதிகளின் மராமரங்களில்
அம்பு பட்டு அமுங்கிப்போன
குரல்வளைகளில் நெறிக்கப்பட்ட நிலையில்
என்னால் முடிந்தது .....

தமிழ்
இங்கே மரத்துப்போனது.
தமிழ்
இங்கே மரித்துப்போனது .
தமிழ்
இங்கே மக்கிப்போனது
என்ற அவலங்களினூடே
என்னால் முடிந்தது...
அந்த
ஒரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக