வெள்ளி, 4 நவம்பர், 2016

"ராமனைப்போல.."தான் அந்த அழுக்குமூட்டைக்காரனும்.


"ராமனைப்போல.."தான் அந்த அழுக்குமூட்டைக்காரனும்.
==========================================================
ருத்ரா இ பரமசிவன்


மூச்சைப்பிடித்து
விறைப்பாய்
நேராய் நின்று
கதாகாலட்சேபம்
செய்து கொண்டிருக்கிறார்
ஒருவர்.
தலைகீழாய்
ஒரு கதாகாலட்சேபம் சொல்லி
கடையை
மூடிவிட்டார் இன்னொருவர்.
தனித்தனி ரசங்களை
தனித்தனி கோப்பையில்
குடிக்கலாம்
ராமரசத்தை.
"கம்பரசம்"ப்ராண்டில்
இருந்ததே
இதில் காக்டெயில்
ஆகி யிருக்கிறது.
அபினியைத்தின்று
மென்று வந்த போதையை
கடவுள் ரசமாக்கி
பானைகளில் அடுக்கி
நாலு வர்ணம் பூசி
அதர்மத்தைக்கொண்டு
தர்மம் வளர்த்து
வால்மீகியின் காடுகளுக்குள்
வைத்தா
இந்த கள்ளச்சாராயத்தை
காய்ச்ச வேண்டும்?
ஷெர்லக் ஹோம் கதைகளைப்போல்
கொலை செய்தது
கொலை செய்யப்பட்டவனே
என்று
விழி பிதுங்க வைப்பதே இந்த‌
வித்தை.
நம்மை கொஞ்சம் கொஞ்சம்
கொலை செய்து கொள்வதே
இந்த பாராயணங்கள்.
தூய தர்க்க ஞானம்
முளைத்துவிடக்கூடாதே
என்பதற்காக கோடரி தூக்கியதே
இந்த மதப்புராணங்கள்.

நுட்பமானதை விளக்குகிறேன் என்று
எத்தனை எத்தனை
சோளக்கொல்லை பொம்மைகள்?
பக்தனும் பௌராணிகனுமாய்.
"நீயும் பொம்மை நானும் பொம்மை" என்று
அந்த இருவர்கள் மட்டும்
வேண்டுமானால்
வீணை பாலச்சந்தர் படத்தில்
வருவது போல்
டூய்ங் டூய்ங் என்று
சுருதி சேர்த்துக்கொண்டிருக்கலாம்.
ஜீவாத்மா பரமாத்மா
பம்மாத்துகளில்
உலக மானிட நேயம்
உருக்குலைந்து போகவே
இந்த "சப்தங்கள்"(வேதங்கள்)
இத்தனை சத்தங்களைகுப்பைகளை
இரைச்சல் இட்டுக்கொண்டிருக்கின்றன.
குப்பைகளை
எப்படி அழைத்தால் என்ன?
கொட்டிக்குவித்திருக்கிறார்கள் அங்கே.
ராம் லீலா மைதானமா?
ராவண லீலா மைதானமா?
வி.ஸ காண்டேகர் எழுதிய நாவல்
"க்ரவுஞ்ச வதம்".
மனித சிந்தனையின்
புரட்சி எனும்
சமுதாய பூப்பை
இந்தியக்கிரீடம்
சூட்டிக்கொண்டிருந்த‌
சமஸ்தானமும்
அந்த கிரீடமே
ஒரு வெள்ளை(ய) நூலில்
இழுத்துக்கட்டியிருந்தது
தெரியாமல்
போலீஸ்தனம் செய்து கொண்டிருந்த‌
ஒரு போலி எந்திரமும்
வேடன் அம்பாய்
வதம் செய்ததைப்பற்றிய‌
உயிர்மை நிறைந்த வரிகள்
அந்த நாவல்.
வால்மீகி எப்படி வேண்டுமானாலும்
அம்பு விட்டிருக்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளாய் சேர்ந்த‌
அந்த அழுக்கு மூட்டையை
அடித்து துவைக்க வந்தவர்கள்
கிழிந்து போகும் என்று
விட்டு விட்டர்கள்
அழுக்கையும் துணியையும்.
வியாசனும் சரி
வால்மீகியும் சரி
அந்தக்காலத்து
"மாஃபஸான்கள்"தான்.
மாசுகளோடு பார்.
அப்புறம் நீ
மனத்துக்கண் மாசிலன் ஆகிடுவாய்
என்றார்கள்.
அவர்கள் ஆத்மாக்களையே
கொல்வதற்கு
கண்டுபிடித்ததா
இந்த‌
ஜீவாத்மா பரமாத்மா
அரிதாரங்கள்.
இவை
எப்போது அரிதாரங்கள்?
எப்போது அவதாரங்கள்?
அந்த ரசத்தை மட்டும்
பிரித்துத்தந்த
கம்பரசத்தால்
ராம காவியம்
ரசாபாசமானது கண்டு
ஆத்திகர்களுக்கு
ஆத்திரம் தான்.
ஆனால்
அதையே "ஸ்லோகங்களில்"
வேறு யாராவது
ஒரு அதிவீர ராமன்
எழுதியிருந்தால்
கோவில்களில் சுண்டலோடு
பாராயணம் ஆகியிருக்குமே.
சொல்லில் என்ன‌
கல்லில் வடித்த‌
நம் "கஜுராஹோ"க்களின்
கட்டில் ரகசியங்களைத்தானே
கம்பரசம் சொன்னது.
இதிஹாசங்கள்
இனிய தென்றல் தான்.
ஆனால் அது
ஆதிக்கவெறியை மட்டுமே
சொல்லும் என்றால் அவை
நம் அறிவை நசுக்கவந்த‌
மிதிஹாசங்களே.
"ராமனைப்போல"...தான்
அவதூறுகள் சொன்ன‌
சலவைத்தொழிலாளி எனும்
அந்த அழுக்குமூட்டைக்காரனும்..
இருவருக்குள்ளும்
ஒரே வக்கிரம் தான்.
ராமனுக்கும்
ராஜ்யபாரம் எனும்
அழுக்குமூட்டைதான்
தோளில் இருந்தது.

மனிதம் எனும் ஆற்றலை
இப்படி
நீர்த்துப்போக
வைத்துக்கொண்டிருப்பதெல்லாம்
போதும் போதும்!
======================================================ருத்ரா
26.01.2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக