செவ்வாய், 1 நவம்பர், 2016

நிழலாடு முன்றில்.......(நா.முத்துக்குமாரை நினைவு  கூர்தல்)


நிழலாடு முன்றில்........
============================================ருத்ரா இ பரமசிவன்
(மாகவிஞன் நா.முத்துக்குமார் பாடல்கள்)
அணிலாடு முன்றில்..எனும்
குறுந்தொகை வரிகளை
உன் நினைவின்
நெடுந்தொகையாக்கி
எழுதியிருந்தாயே!
அது இன்னும் எங்கள்
நெஞ்சின் நீள் முற்றத்தில்
நிழலாடிக்கொண்டே இருக்கிறது.

சினிமா என்பது நிழல் தான்.
நம் இதயங்கள் துடித்த‌
வெளிச்சங்களை மறைத்த நிழல்கள்.
நிழல்கள் ஓடி ஓடி ஒளிந்து
வெளிச்சங்களையும்
நம் கனவுகளாய் முலாம் பூசும்

உன் பாடலை கேட்கும் போது
இதயநாளங்களை
படிக்கட்டுகள் ஆக்கி
அது தட தட வென்று இறங்கி
எதிரில் பாழ்வெளியாய்
படுத்துக்கிடக்கும் முற்றத்தில்
கவிதை மின்னலை
ஒளிபாய்ச்சி அப்புறம்
கண்களில் இருட்டி
இனிக்கும் நிழலாய் உருவம் காட்டுகிறது.

உனது இந்த பாடல்வரிகளை
நீ இப்போது கேட்டுப்பார்.
உன் பேனா எப்படி
எழுத்துப்பிரசவத்தை
ஒரு பளிங்கு பாய்விரிப்பில்
கன்னிக்குடம் உடைத்து
சொற்களில் உயிர் தடவி நின்றது
என அதிசயிப்பாய்!
காகித சஹாராவில்
என் கற்பனை ஒட்டகம்
இப்படியா
ஒரு உலக மகா தாகத்தை
தண்ணீராய்த் தேக்கி வைத்து
குடிக்காமல்
ஊர்ந்து ஊர்ந்து அந்த‌
பெரும் ஊரைப்போய் சேர்ந்தது
என்று
உருகித் தகிப்பாய்.
உன் தாகங்கள் தீரட்டும்.
உன் வரிகளை அருந்திப்பார்.
_______________________________________________________


(படம் :அங்காடித்தெரு

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
__________________________________________
இனிமையும் இதயமும் கனவு பிசைந்த‌
வண்ணங்கள் நம்மை மறுபடியும்
ஒரு கர்ப்பப்பைக்குள்
கொண்டு சென்று விடுகின்றன.
நாய்க்குட்டி இல்லை...ஆனாலும்
அந்த குட்டியின் பிஞ்சுக்காதுகள்
வெட வெடத்து உடுக்கை அடிப்பது போல்
உள் நரம்புகளில் பண்ணிழைக்கின்றன.
பொம்மை அவள் அணைப்பில்
பெறும் சுகத்தை
எப்படி உணர்ந்து பார்ப்பது என்று
அந்த "நியூரான்"களில்  நீச்சலடித்து
அந்த சொற்களைக்கூட்டித்தந்தாய்!
அது நெருப்பு மூட்டுகிறது.
இந்த சொக்கப்பனை நெருப்பு கூட‌
ஒரு சிவப்பு நிழலாய்
கொதித்துக்குளிர்கிறது.
உன் நிழலாடு முன்றில்..
நொறுங்கிக்கிடக்கும்
இந்த நிலாப்பிறைகளை
அள்ளிக்கொண்டு போகிறேன்.
உன் நிழலுக்குள்
நான் மீண்டும் வருவேன்.

==============================================================2 கருத்துகள்: