சனி, 21 ஜனவரி, 2017

வெள்ளிய மணலிடை..

வெள்ளிய மணலிடை..
==============================================செங்கீரன்


எக்கர் ஞாழல் வெள்ளிய மணலிடை
கொடுங்கை அலவன் வரிகள் தேய்ப்ப‌
கடற்குருகும் இரைகொளீஇ அலைப்ப‌
பேழ்வாய் அன்ன பேரலை சீர்த்த‌
நெடுங்கரை ஈண்டு  இற்றைத்திங்கள்
மாக்கடல் கரையின் முதுகுமிசை ஊர்பு
மக்கள் குழுமிய காட்சிகள் தெளிந்தனம்.
காளைகள் காளைகட்கு நட்பாம் கிழமையில்
அறப்போர் ஆற்றும் அணிநலம் கண்டனம்.
பெண்டிர் குழாம் விரிமலர் வீங்கு அலைகள் என்ன‌
இன்னகையோடு கனற்குரல் விளிப்ப‌
கைக்கொள் மதலைச்சில் முகம் ஆங்கு
விடியல் வெள்ளியாய் வரிப்பூ விரித்து
சின்னகை செய்ய மற்றும் மற்றும்
தாயர் தந்தையர் பெருங்குழு திரள‌
அப்பட்டினப்பாக்கம் நீள இருந்து
அமைதியே அரும்படைக்கலன்கள் ஆக‌
வானம் கீறி முழங்கிய ஒரு சொல்
"தமிழன்டா".."தமிழன்டா,,"தமிழன்டா"
வல்லேறு அடல்செயிர்த்து கொல்லேறு ஆயினும்
அவ்வேறு தழுவலே மறம் சாலும் என‌
ஏறுடன் களியாட்டு தடுப்பார் ஆரென‌
செவ்விய அலைகளின் செம்மொழிப்போர் இது.
பல் நூறு ஆயிரம் பெருகி பெருகி
தண்புனல் கூட்டமாய் மணிசுடர்க் காட்சியின்
பொங்கல் பெருகல் மலியத்திரள் செயும்
பொன்னுமிழ்ச் சொல்லின் தண்டமிழ்ச்சேனை
பொலியக் கண்டு வியந்தனம் நன்றே!
ஆர்த்த குரலோடு கூர்த்த ஒளியில்
கைப்பொறி பெய்த விண்மீன் பெருமழை
பொழிந்தனர் கண்டோம் !அம்மம்ம !
பரிதிப்பிஞ்சுகள் பஃ றுளி யாறு அன்ன
வான் அளைந்து வண்ணம் சேர்த்தன.
தமிழே போதும் !யாதும் வேண்டேம்.
மண்திணி ஞாலமும் கைப்படும் ஆங்கே!

=================================================

மெரினா கடற்கரை கண்ணுக்கெட்டிய வரை
தெரியாமல் மறைந்தே போனது.லட்சம் லட்சமாய்
திரண்ட மாணவர் மாணவியர் மற்றும் பொதுமக்கள்
சென்னைக்கடற்கரையில் திரண்ட கூட்டமும் அந்த
அமைதியான போராட்டமும் இது வரை "வரலாற்றில்"
நிகழாத சாதனை.அந்த வெற்றியைப்பற்றிய
"சங்க நடை"ச் செய்யுட் கவிதை இது.

====================================================


2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே!

அன்புடன் ருத்ரா
(செங்கீரன்)

கருத்துரையிடுக