வியாழன், 5 ஜனவரி, 2017

விவசாயியி...விவசாயியி!

விவசாயியி...விவசாயியி!
==========================================ருத்ரா இ பரமசிவன்

"விவசாயியி..."
ஒலிபெருக்கிக்குழாயில்
எம் ஜி ஆர் பாடிக்கொண்டிருக்கிறார்.
கதாநாயகியோடு
வயக்காட்டில்
அவர் டூயட் பாடினால் போதும்!
உழத்தேவையில்லை.
மாடு தேவையில்லை.
வயல் தேவையில்லை
திரை மயக்கத்தினால்
இந்த அவலங்கள் ஒன்றும் தீரவில்லை.
காவிரி பொய்த்ததில்லை
ஆனால் அது கன்னடக்காரர்கள்
வாய் கொப்புளிப்பதற்கு மட்டுமே
தலைக்காவிரியில்
பிரசவித்ததாக‌
மோடி சர்க்கார் வரை
முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது.
மழை போதவில்லை.
கடன்கள் விவசாயியின்
கழுத்தைச்சுற்றி
தூக்குக்கயிறுகளாக‌
சுற்றிக்கொண்டு உயிர் விழுங்குவது
மகா கொடூரம்!
கார்ப்பரேட்டுகள்
வீரிய விதைகள் வழியே
பங்கு மூலதனம் பெருக்கி
தமிழனின் வேளாண்மை என்னும்
மானத்தையே
மண்ணுக்குள் புதைக்கப்பார்க்கிறது.
மேனாட்டுக்காளைகளின்
விந்து வங்கிகளே போதும்.
எதற்கு இந்த திமில் புடைத்த‌
ஜல்லிக்கட்டுகளின்
கலித்தொகையும் புறநானூறும் உங்களுக்கு?
என்று கேட்கிறது.
தமிழ் மொழி ஏற்கனவே
அர்ச்சனைக்கும்
ஹோமங்களுக்கும்
பலி கொடுக்கப்பட்டுவிட்டது.
வட இந்திய சதுரங்கக்காய்கள் தான்
தமிழ்ப்பண்பாட்டையும்
"காய்"அடித்து விடுமோ
என்ற திகில் பரவிக்கொண்டிருக்கிற‌து.
தமிழ் தான் சி(இ)ந்து மதத்தின்
வேர் என்று புரியாமல்
வடக்கத்திய அரசியல்
நம் தமிழ்பொங்கலோடும்
நம் மாட்டு(அதாவது செல்வம் என்று பொருள்)ப்பொங்கலோடும்
சாணக்கியத்தனம் செய்து கொண்டிருக்கிறது.
மாநில ஆட்சியோ
விவசாயிகள் தற்கொலை மரணங்களை
வெறும் மாரடைப்பு
புள்ளிவிவரங்களாக்கிக் கொண்டிருக்கிறது.
பிள்ளைபோல் வளரும் கதிர்கள்
கருகுவது கண்டு
மனமுடைந்த மரணங்களை கூட‌
இயற்கை மரணங்கள் என்று
திரை போட்டு மூடிக்கொண்டிருக்கிறது.
மண்ணோடு மண்ணாய் மக்குவதற்கா
இந்த மண்ணின் மைந்தர்கள்
மண்ணில் முளைத்தார்கள்?
கிராமியபொருளாதாரம்
கிராமிய விவசாயிகளை
ஆலைவாய்க்குள் அரைபடும்
வெறும் கரும்புகளாய்த்தான் பார்க்கிறதா?
மகிழ்ச்சி நிறைந்த அந்த‌
செழித்த பொங்கல் கரும்பின் தொகைகள்
பொலிவு இழந்து
விவசாயிகளின் மரணத்தை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது போன்ற‌
சோகத்தோடு அல்லவா கொடியசைக்கிறது.
பொங்கல் பரிசாய்
அந்த ரெண்டு அடிக்கரும்பு
வெட்டு பட்டு
உழவன்களின் அவலங்களை
உருவகமாய் காட்டி நிற்கிறது.
இந்த ஊடகங்கள் வறண்ட‌
"பொங்கல் வாழ்த்துச் செய்திகளை"
தலைவர்களிடமிருந்து பரிமாறிக்கொள்ளும்போது
வரப்போகும் பஞ்சாயத்து தேர்தல்களின்
"ஜொள்" மட்டுமே தெறிக்க விடப்படும்!

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக