வியாழன், 26 ஜனவரி, 2017

குடியரசு தின விழா!


"தாயின் மணிக்கொடி "........
====================================ருத்ரா இ பரமசிவன்.

68 ஆவது குடியரசு தின விழா!
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது !
உள்ளமெல்லாம் பூரிக்கின்றது.
எத்தனை மொழிகள்? எத்தனை இனங்கள்?
விடுதலை எழுச்சி எனும்
உயிருக்கும் மேலான அன்னையின்
முலைப்பாலை
அன்றே நம் அணுவுலைக்கூடம் ஆக்கினோம்.
வெள்ளை வேர்கள் இற்று வீழ்ந்தன.
நம் மூசசுக்காற்றை முடக்கிக்கொண்டிருந்த
விலங்குகள் தூளாயின.
வெள்ளை சட்டங்களுக்கு
"மூவர்ண"அட்டையை மட்டுமே
நம்மால் அணிவிக்க முடிந்தது.
உறிஞ்சும் "நான்கு வர்ண"அட்டையை
அடியில் வைத்துக்கொண்டு.
உள்ளடக்கத்தை
அப்படியே வைத்துக்கொள்ளவா
நாம் குடியரசு எனும் கூட்டு கட்டினோம்.
அஹிம்சையால் ஜெயித்து
ஹிம்சையால்  அதை தோற்கடிக்கும்
ஒரு சுதந்திரத்தையா நாம் பெற்று
ஆனந்தக் கூத்தாடுகிறோம் ?
ஜனநாயகம் என்பது எதிர்க்குரலையும்
மக்களின் மனப் பூந்தோட்டத்தில்
பதியம் இடுவது தானே ?
"வந்தேமாதரம்" என்றால்
எதிர்க்குரலின் குரல்வளையை நெறிப்பது
என்றா பொருள்?
காவல் தெய்வங்கள்
ஜனநாயகம் படுகொலை செய்யப்படும்போது
சாதுவாய் படுத்துக் கிடக்கிறது.
ஜனநாயகம் காக்கப்பட எங்காவது
ஒரு உரிமைக்குரல் கேட்டால்
உறுமிக்கொண்டு பாய்கிறது அதன் மீது
கோரைபற்கள் காட்டி.
மெரீனா கடற்கரையில் அந்த அமைதிப்புரட்சி
எத்தனை மகத்தானது?
ஏன் தமிழ்க்குரல்கள் மீது
காழ்ப்பு எனும்
இந்த அமில வீச்சு?
இறுதி நேரத்தில் ஒரு ஜலியன் வாலா பாக் ஆக்கிய
"லத்தி சார்ஜ்" எனும் மராமரங்களின் வழியே
அம்பு விட்டது யார்?
பட்டொளி வீசி நம் தாயின் மணிக்கொடி பறக்கிறது!
ஆனால் தேசிய கீதம் மட்டும்
தடி யடிகளின் தாக்குதல் ஓசைகளில்.

==================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக