ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தமிழ்டா!

தமிழ்டா!
==========================செங்கீரன்.

என் ஆக்ஸிஜனை
எனக்குத்தெரியாது.
ஆனால் அது தான்
தமிழ்
என்று தெரியும்.

இந்த வானம் எப்படி
விரிந்தது என்று
எனக்குத்தெரியாது.
ஆனால் தெரியும்
அது
தமிழின் ஒலி விரிப்பு.

ஏழு கடல் என்றார்களே
அது எனக்குத்தெரியாது
என் தமிழின்
ஓரெழுத்துச் சொல்
ஒன்றை உரித்துப்பார்த்தேன்
அப்பப்ப!
அதனுள்ளே
எத்தனை ஆயிரம் கடல்கள்!

என் அரைஞாண் கயிறு
ஒரு நாள்
மின்னல் கயிறாய்
கிளர்ந்தது.
இதழ்களின் மேல்விளிம்பில்
என் பூ மயிர்
என்னை புல்லரிக்க வைத்து
ஒரு பெண்ணின் முன்னே
படபடக்க வைத்தது.

அதை காதல் என்றார்கள்.
ஆனாலும் அது
இந்த பிரபஞ்சத்தின்
ப்ளாக் ஹோல் புதிர் போல‌
எனக்கு என்ன வென்று
விளங்கவே இல்லை.

"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று"
என்று ஒரு குறள் தமிழ்
என்னை
அந்த பூவின் அருவியில்
குளிப்பாட்டியது.

தமிழ் என்பதும் காதல்
காதல் என்பதும் தமிழ்.
ஒரு மின்காந்தமாய்
எத்தனை எத்தனை
ஒளியாண்டு தூரத்திலும் அவள்
விழியாண்டு எனை
மொழிபெயர்க்கும் அவளாக!

காதல் என்ற நாணயத்தை
சுண்டி எறிந்தேன்
அதன் அடுத்த பக்கமே
கொம்பு சிலிர்க்கும்
காளையை தழுவும் வீரம்
என்று கண்டேன்.

அந்த கலித்தொகைத்தமிழின்
தாழ்
தரவு
கொச்சகம்
தனிச்சொல்
சுரிதகம்
என்னும் இனிய‌
"அனாடமி"அறிந்து கொண்டேன்
இந்த‌
மெரீனாவின்
ஒவ்வொரு மணலின்
அல்ல அல்ல‌
மனதின் பொன் துளி கண்டு.
ஆம்!
இது தமிழ்டா!
"கபாலிடா நெருப்புடா"
என்று
பூட்ஸ் தேய்த்து
புளகித்துக்கொண்டாலும்
இது தமிழ்டா
என்று
உலகம் எனும் கால்பந்து
உதைத்துச் சொல்வேனடா!
எரிமலையை
உமிழ்ந்த தமிழ்டா இது!
நினைக்க நினைக்க‌
அமிழ்துடா இது!

======================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக