யாழ்நிலம் இன்று பாழ்நிலம்
======================================
பல்லூழ் நீட்டிய பல்மலை அடுக்கமும்
பேரியாழ் அன்ன ஒலி உதிர் அருவியும்
கானும் கல்லும் புள் பரவி உகுக்கும்
யாழ்நிலம் இன்று பாழ்நிலம் ஆனது
அந்தோ!இன்று!அளியேம் யாமே!
நாளை கதிர்க்கும் புத்தொளி ஆங்கு
செந்தமிழ்ப்பாலின் செந்தணல் ஊட்டும்.
முள்ளிவாய்க்கால் முற்றம் தன்னில்
முகம் காட்டிய அற்றைத்திங்கள்
குருதியில் தோய்ந்து கண்ணீர் உகுக்கும்.
கொடு நிழல் தழீஇ கொல் பகை உறுத்து
நிணநீர் வாய்க்கால் நீள ஓடி
நிவந்த காலை அரசம் சினைக்கீழ்
புத்தன் இருந்த கொழு நிழல் ஒழுகி
ஒளி மழை பெய்தே மன்றம் வீழ்க்கும்.
ஆர்க்கும் அன்பொலி கேட்டே மயங்கும்.
புத்தம் சரணம் கச்சாமி
பிறழ்ந்தது கேண்மின் பிறழ்ந்தது கேண்மின்
ரத்தம் சரணம் கச்சாமி என
பிறழ்ந்தது கேண்மின் பிறழ்ந்தது கேண்மின்.
.தமிழின் குருதி உறிஞ்சிய சிங்களம்
கறைப்பட்டே போனது காண்!
மனம் ஒடிந்த புத்தனுமே
அத்தருவின் கிளையில் வீசிய கயிற்றில்
தூங்கினான் ஊசல் நிழல் ஆடி .
முழுவெண்ணிலவும் முகம் புதைக்க
மஞ்சு பொதி மண்டலம் மறைந்ததுவே!
==============================================ருத்ரா இ பரமசிவன்.
(சங்க நடை த் தமிழ் செய்யுட் கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக