வியாழன், 5 ஜனவரி, 2017

சொடக்கு போடும் நேரத்தில்…



சொடக்கு போடும் நேரத்தில்…
=========================================ருத்ரா

( நவம்பர் 6   2015 ல் எழுதியது )



காலத்தின்
இந்த சந்து பொந்துகளில்
ஓடிக் களைப்பது யார்?
ஊடிக் களிப்பது யார்?
ஒரு பூகம்பம்
லட்சம் பேரை தின்று விடுகிறது.
நாஸா
பிரபஞ்சத்தின் காது குடைந்து
சங்கீதம் கேட்கிறது.
மில்லியன் ஒளியாண்டு தூரத்து
ஒரு பூமியில் கூட‌
என்னை மாதிரி
ஒரு ருத்ரா
என்னென்னவோ
எழுதிக்கொண்டிருக்கலாம்.
திடீரென்று
அப்துல் கலாம்
நம் முன் எழுந்து நிற்கலாம்.
இளம்பிஞ்சுகளின்
அரும்புக்கனவுகளில்
கூடு கட்டி கிடப்பதற்கே
வந்தேன் என்கலாம்.
நோபல் பரிசு விஞ்ஞானியின்
டி.என்.ஏ ஆர்.என்.ஏ தியரி
ஊசி மருந்தின் வழியே
புற்று நோய் நரகத்துள் புகுந்து
அதை
நாசம் பண்ணி விடலாம்.
தூக்குப்போட்டுத்தொங்கி
யாரோ ஒருவர்
இந்த உலகத்தின் மீது
காறி உமிழும் களங்கத்தை
செய்யாது தப்பித்து விடலாம்.
நம்பிக்கையின்
பசுந்தளிர் தலைநீட்டி
மன இறுக்கத்தின்
பாறாங்கல்லை
தவிடு பொடியாக்கலாம்.
காலத்தை
சொடக்கு போடும்
உங்கள்
விரலில் வழியும்
மூளையின்
பல்ஸை
பொறுத்ததே அது.
பொறுத்து பொறுத்தாகிலும்
பொருத்தமாகவே
சிந்தியுங்கள்.

=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக