புதன், 18 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுப்போராட்டம்

ஜல்லிக்கட்டுப்போராட்டம்
================================ருத்ரா இ.பரமசிவன்.

அது வெறும் கொம்பும் திமிலும் வாலும்
மட்டும் தானா?
இல்லை அது இன்று சுநாமி.
அதற்குள் இருக்கும்
கலித்தொகையும் புறநானூறும்
இன்று புறப்பட்டு வந்திருக்கின்ரன.
லட்சம் லட்சமாய்.
மாணவர்கள் மாணவிகள்
கைக்குழந்தையுடன் தாய்க்குலங்கள்.
ஜல்லிக்கட்டு யாரிடமும்
சொல்லிக்கிட்டு வரவில்லை
இன்னொரு வார்தா புயலாய் இது.
முறிந்து விழுவது மரஙகள் அல்ல.
தமிழ் மாண்பை புதைத்து விடலாம்
என்று திமிர்த்த‌
தமிழ்ப்பகை தான் வீழ்ந்து போகும்.
ஐ டி ஊழியர்கள் என்றால்
டைடல் பார்க் எனும்
கண்ணாடிப்பெட்டிக்குள்
பறந்து கொண்டிருக்கும்
தட்டாம்பூச்சிகள் அல்ல‌
என்று புதிய சரித்திரம்
எழுதிக்கொண்டிருப்பவர்கள்.
கொடிகளே இல்லாத
அரசியலே இல்லாத‌
ஒரு சமுதாயச்சீற்றம் இது.
ரத்தச்சேறுகள் இல்லாமல்
மெரீனாவை ஒரு
ஜலியன் வாலா பாக் ஆக‌
உருமாற்றம் அடையச்செய்யும்
தமிழின் எழுச்சிக்கடல் இது.
செமஸ்டர்களின்
கூட்டுப்புழுக்களாய்
புத்தகங்கள் தின்னும்
இந்த கோக்கூன்கள்
எப்படி இப்படி யொரு
மின்னல் பிழம்பாய்
சன்னல் திறந்து ஒரு
பூபாளப் புயல் வீசியது?
கண்ணுக்குத் தெரியாத‌
ஒரு மொழி ஆதிக்கம்
பாம்பின் மெல்லிய நச்சுப்ப்ல்லாய்
நம்மைக் குத்திய வலியே
இந்த வங்காள விரிகுடா அலைகளோடு
அலைகளாய் எழுச்சி கொண்டன.
நடுநிசியும் நடுக்கும் குளிரும்
வெள்ளி மணற்பரப்பில்
இவர்களுக்கு சாட்சி கூறின.
பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும்
புசிக்கின்ற இக்காளைகள்
காட்டும் வீரத்தின் முன்னே
பீட்ஸாவும் பர்கரும் ருசிக்கும்
இந்த 21 ஆம் நூற்றாண்டுத்தமிழன்
தன் வீரியம் காட்டி நின்றான்.
அந்த மூக்கணாங்கயிறுகளுக்கா
இத்தனை ஆதரவு அலைகள்.
அல்ல! அல்ல!
அக்கயிறுகள் எல்லாம் விவசாயிகளின்
தூக்குகயிறுகளாய் "மார்ஃப்"ஆன‌
கொடுமையான வரட்சிசித்திரங்களை
அழித்துக்காட்டவே இந்த அலைகள்.
"ஏரினும் நான்றால் எருவிடுதல்.."
என்றான் வள்ளுவன்.
ஆனால் அந்த ஏரின் அடியில்
தன் உயிரையே எருவாக்கி
மரணித்துப்போனான் விவசாயி!
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்
இந்த சுரண்டல் பொருளாதாரத்தை
உடைக்கும் கைகளும்
பங்கெடுத்துக்கொண்டிருககின்றன.
முதல்வர் அறைக்குள்
முதல்வரை முடங்க விடாமல்
டெல்லிக்கு விமானம் ஏற வைத்த‌
ஜீன்ஸ் ..டி ஷர்ட் போட்ட‌
காளைகளின் போர் இது!
இவற்றின் வாடி வாசல்
ஓட்டுப்புழுக்கைகள் சிதறிக்கிடக்கும்
அந்த மின்னணுப்பொறி வரைக்கும்
நீண்டு செல்லட்டும்.
புதிய நோட்டுகளால்
எச்சில் படுத்தப்படாத தூயகரங்கள்
பழைய அந்த நாய்க்குடைகளை அழித்துவிட்டு
புத்தம் புதிய "வெண் கொற்றக்குடைகளை"
ஏந்திய‌ ஆட்சி நிழல் அமைக்கும் வரை
இந்த காளைகள் "ஏறு தழுவல்"தனை
அரங்கேற்றட்டும்.
வாழ்க இப்போராட்ட்ம்!
வெல்க இப்போராட்டம்!

======================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக