என் சங்கநடைச்செய்யுட் கவிதைக்கு நான் எழுதிய பொழிப்புரை இது.
சிரல் வாய் உற்ற கயல் செத்து..
================================================ருத்ரா இ பரமசிவன்
பொங்குளை புரவியின் ஆடுநனி குடுமி
காலிடை நுண்வெளி நுவல்வன போன்ம்
உன் சொல் ஈண்டு என்னுள் ஒளிக்கும்.
அலவன் உழுவரி வெள்மணல் வீழ்க்கும்
வள்ளிக்கொடி அன்ன அணி நிலத்தாங்கே
நின் மயக்குறு கிளவி அஃதே காட்டும்.
முள்ளிடை இலவம் செந்தீ மூசும்
குவி இணர்க்காட்டின் நெடுஞ்சுரம் இறந்து
யாது பொருள் ஈட்டினை.யாது வீடு காட்டினை.
நீலச்செஞ்சிறை குண்டு நிழல் ஆர்ப்ப
சிரல் வாய் உற்ற கயல் செத்து
நடுக்குறும் நள்ளிடை துஞ்சல் நீத்து
துடிஅதிர் எதிர தொலைக்கும் நெஞ்சின்
அளியள் ஆகி நோதல் ஆற்றேன்,
நின் கதழ்பரி கடுமா விரைந்தே வருக!
===============================================
பொழிப்புரை:
தலைவி பொருள்வயின் பிரிந்த தலைவனை விரைந்து திரும்பும்படி
நெஞ்சம் உருகி சொல்கிறாள்
________________________________________________________________
குதிரையின் பிடரி பொங்குவதைப் போல் விரிந்து விரிந்து
ஆடுகின்ற அழகில் அதன் கொண்டைப்பூவும் காற்றின் நுண்ணிய
இடைவெளிக்குள் கூட புகுந்து அதனிடம் பேசிக்கொண்டிருக்கும்.
அது போலவே உன் சொற்கள் என்னுள் ஒளிந்து கொண்டு களிப்பு நல்கும்
கடற்கரையில் வெட்ட வெளியென பரவியிருக்கும் மணற்படுகையில் நண்டுகள் தன் கொடுக்கினால் எழுதும் வரிகள் அழகிய நிலப்பரப்பில்
வள்ளிக்கிழங்கின் கொடிபோல் வீழ்ந்து பரவும் வேர்களாய் உன் மயக்கம் தரும் சொற்களும் அப்படியே (என் நரம்புகளுக்குள்)படரும்.
முள நிறைந்த இலவமரத்துக்கிளையில் அதன் (சிவப்புப்)பூங்கொத்துகள்
செந்நிறத்தீயைப்போல் மொய்த்திருக்கும்.அந்த நெடிய காட்டுவழியை நீ
கடந்து சென்று என்ன பொருள் கொண்டுவரப்போகிறாய்? அறம் பொருள்
இன்பம் ஆகிய மூன்றும் கடந்த அந்த வீடு பேறு நிலையை எவ்வாறு காட்டப்போகிறாய்?
நீலமும் சிவப்புமாய் சிறகு கொண்டு ஆற்று நீரின் ஆழமான பரப்பில் விழும்
நிழலில் ஆரவாரம் செய்துகொண்டிருக்கும் மீன்கொத்தியின் அந்த கூரிய சிறிய அயிரை மீன்போன்ற அலகாக நான் இந்த நடுக்கம் கொண்ட நள்ளிரவில் தூக்கம் பிடிக்காமல் துயர் உறுகின்றேன்.என் நெஞ்சோ
உடுக்கையின் அதிர்வுகள் போல துடித்து துடித்து தொலைந்து போகுமோ?
இத்துன்பம் ஆற்றாதவளாக மிகவும் வேதனை அடைகின்றேன்.விரைவாய் தன் காலடிகளை தரை பதித்து ஓடும் வேகம் கொண்ட குதிரையை செலுத்துகின்றவனே காலம் தாழ்த்தாது உடனே திரும்பி வா!
===============================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக