ஞாயிறு, 1 ஜனவரி, 2017

விஜயசேதுபதிக்கு ஒரு மகுடம்.

விஜயசேதுபதிக்கு ஒரு மகுடம்.
=================================ருத்ரா இ பரமசிவன்

குறும்படங்களையெல்லாம்
கோர்த்த மாலையை
கழுத்தில் அணிந்து கொண்டவராய்
வலம் வந்த கோடம்பாக்கத்து
இந்த குறுநிலமன்னர்
நடிப்பில் ஒரு "சாம்ராட்"!
தர்மதுரை படத்தின்
100வது நாள் வெற்றியை
கொண்டாடுகிறார்.
2016 யே உருக்கி வார்த்து
ஒரு பொன் மகுடம் சூட்டியது போல்
இந்த 2017
அவரை அணிந்து மகிழ்கிறது.
அவர் ஏற்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும்
வாழ்கையின் மூலையில்
நூலாம்படை படர்ந்த வரிகளை
"நோபல் இலக்கிய" வரிகள் போல்
பிழிந்து
காமிரவுக்குள் ஊற்றியது.
அதிலும் மீசை மழித்துக்கொண்டு
நானும் ரவுடி தான்
என்று அவர் மல்லுக்கு நின்றது
திரைபட நிழல் பூச்சில்
ஒரு காமெடித்தூரிகையைக்கொண்டு
தீற்றிய காவியம் ஆகும்.
கண்ணுக்குத் தெரியாத
ஒரு கரப்பான் பூச்சியின்
மீசை வந்து வந்து வருடி
கிச்சு கிச்சு மூட்டியது போல் இருந்தது.
பெரிய நடிகர்களின்
"வெள்ளி விழாக்கள்" எத்தனை வைத்தாலும்
இவரது நூறாவது நாள் சாதனையின்
தராசுத்தட்டை சமமாக்க இயலாது!
எத்தனை படங்கள்
இவர் தந்தாலும்
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"
என்பதே முதல் அற்புதம்.
"தலைப்பே"
ஆழம் நிறைந்த கவிதை.
வைரமுத்துக்களுக்கு
ரத்னக்கம்பளம் விரிக்கும்
சிந்தனைகள் நிமிண்டிய வரிகள்.
படம் முழுவதும்
மூளையின்
செரிப்ரம் செரிப்பல்லம் மற்றும்
மெடுல்லா ஆப்லாங்காட்டா" வுக்குள்
பயணித்துக்கொண்டிருந்த போதும்
கீறல் விழுந்த ரிக்கார்டிங் பாத்திரம் ஏற்று
அவர் பேசும்போது
அந்த காமெடிக்குள்ளும்
கதை கண்ணீர் முட்டி நிற்கிறது.
இவருக்கு என்ன புகழ்ப்பெயர் சூட்டுவது.
திலகங்களில் பொட்டு வைப்பது
சுவரில் மோர்க்காரி அடையாளத்துக்கு
புள்ளிகள் வைப்பது போலாகி விடும்.
இவர் பெயரே
இயல்பாய் இவர்க்கு கிடைத்த பட்டம்.
எல்லா பாத்திரங்களின் சமுத்திரமுமே
இதில் அலைதளும்புவது
நமக்கு கேட்கிறது.
அலை விரிக்கட்டும் இந்த‌
கலை சமுத்திரம் எனும்
"விஜயசேதுபதி"

======================================ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக