செவ்வாய், 17 ஜனவரி, 2017

எண்ண ஓட்டங்கள்.

எண்ண ஓட்டங்கள்.
=======================================ருத்ரா இ பரமசிவன்

தமிழ்நாட்டு அரசியல் வானம் மப்பும் மந்தாரமாகவும் இருக்கிறது. இளைஞர்கள் இடையே இப்போது தான் புறநானூற்றுக் கொம்புகள் முளைத்திருக்கின்றன.தமிழ் மண்ணின் சீற்றம் இது. அரிதாரம் பூசிய நம் தமிழ் நாட்டு அரசியல் வானம் ஏதோ பிச்சைக்காரர்கள் நிறைந்த பூமிக்கு
மழை பெய்ய வந்தது போல் நடக்கும் தேர்தல் வாடிக்கைகளால் கந்தலாகிக்கிடக்கிறது. பொய்மை ஆட்சிகள் எல்லாம் மரணங்களால் தான் முற்றுப்புள்ளியை அடைய வேண்டுமா? தெளிவான அரசியல் சித்தாந்தங்கள் எல்லாம் கூவத்தில் தான் கடாசப்பட வேண்டுமா? தமிழர்களின் அறிவு அரசியல் சிந்தனையே அற்ற வறண்ட பாலைவனமா?
"நெஞ்சு பொறுக்கு தில்லையே ..."என்ற பாரதியின் வரிகள் தான் நம் நெஞ்சை தைத்து துன்புறச் செய்கின்றன.

தற்போது  ஆட்சியை தக்கவைக்க  காரணமாய் உள்ளவர்கள் "ஜனநாயக மிருக பலத்தில்"(ப்ரூட்டல் மெஜாரிட்டி) நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அவர்கள் முகமெல்லாம் பணமும் அது குவிக்கும் தந்திரங்களுமே நரம்புகளாக ஓடும் முக வரிகள் நன்றாகவே அச்சடிக்கப்பட்டுள்ளன. திராவிடம் என்பது தமிழின் தொன்மை நாகரிகம்.ஆனால் அதைக்காப்பதாக அரசு கட்டில் ஏறிய உடனேயே டெண்டர் காண்ட்ராக்ட் என்று ஒரு பாதாளசுரங்கத்தில் விழுந்து அது பாழ்பட்டு போனது.இடையில் லட்சம் லட்சமாய் வாக்குகளை அள்ளும்.ஒரு திரைக்கலைஞர் வந்தார்.அந்த வாக்குகளின் ரகசியம் அந்த நடையுடைபாவனை ஒப்பனை என்று மட்டுமே கண்டு கொண்டார்.அது போலவே சமுதாயத் தீமைகளைக் களைவதாகக்கூறி பொய்ச்சவுக்கால் (சினிமாவில் சுளீர் சுளீர் என்று ஒலியெழுப்பினார்.அதன் மாயவித்தையில் படுகுழியில் விழுந்த தமிழர்கள் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை.நம் தமிழர்கள் என்ன தான் "நாம் தமிழர்"கள் என முழங்கினாலும் அந்த பொம்மைத் துப்பாக்கிகளைக் கொண்டு "கௌ பாய்"வீரர்களைப்போல நம் தமிழ்ச் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டத்தான் முடியும்.தமிழர்களே உங்களை
கட்டுமரம் போல் காப்பேன் என்ற அருமைத்தலைவரும் தற்போது ஞாபகமறதிக்கடலில் மூழ்கித்தான் கிடக்கிறார்.தமிழர் நாகரிகம் உலகம் பூராவும் சுடர்ந்து ஒளிபரப்பவேண்டும் என்ற "வினவும்"தினவும்" வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.தமிழ் மக்களோ மேலும் மேலும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை டிக்கட்டுகள் வாங்கவும் அர்த்தமே இல்லாத
கடவுளைத்தேடி யாத்திரைகள் போவதற்குமே ஈசல்களாக குவிந்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ் கற்றவனுக்கு தொழில் வாய்ப்புகள் இல்லை.சுரண்டல் கும்பல்களுக்கோ அதைப்பற்றி கவலை இல்லை.தமிழை
வளர்ப்பது என்றால் தமிழ்த்தாய்க்கு கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு சிலையெழுப்பி அந்த தொகையில்  முக்கால் வாசியை அந்த கும்பலே ஏப்பம் இடுவது தான் தமிழ்ப்பணி என்று ஆகிவிட்டது.அவாள் வந்துவிடக்கூடாது என்று திராவிடம் காப்பதற்காக இவாளே இருக்கட்டும் பணம் குவிக்கும் இந்த சுரண்டல் இஸம் கொண்டவர்களுக்கே  பொன்னாடை போர்த்தலாம் என்று கருந்துண்டுகளும் செந்துண்டுகளும் அலை மோதும் அவலங்களைக் கண்டால் தமிழன் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்க‌வேண்டியது தான். பொறியியல் அறிவியல் எல்லாம் கற்றுக்கரை தேர்ந்த அருமைத்தமிழ் இளைஞர்களே நீங்கள் மனது வைத்தால் "தமிழ் அறிவியலும் உண்டு அறிவியற் தமிழியலும் உண்டு." என இந்த உலகுக்கு உணர்த்தலாம். முகநூல்களும் இணைய தளங்களும் ஆற்றல் வாய்ந்த களங்கள் தான்.ஆயினும் அவை கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு இயங்கும் "பற்சக்கரங்களாக "தான் இருக்கின்றன.சமுதாய பிரக்ஞையே இல்லா தவர்களுக்கு அவை வெறும் குப்பைத்தொட்டிகளாகவோ அல்லது காதல் சிகரெட்டுகளை புகைத்து எறியும் வெறும் "ஆஷ் ட்ரே"களாகவோ தான் இருக்கின்றன.

அன்பார்ந்த இளைஞர்களே!
நீங்களே இந்த தமிழின் விடியல். இதன் ஒளியில் விடியும் சமுதாயத்தின் சிற்பிகளும் நீங்களே.உங்கள் அரசியல் சிந்தனைகளை தெளிவோடு செதுக்குங்கள்.

"வாழ்க தமிழ்!வளர்க தமிழர்கள்!

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக