வெள்ளி, 13 ஜனவரி, 2017

காளை...காளை ..முரட்டுக்காளை..


காளை...காளை ..முரட்டுக்காளை..
================================================ருத்ரா இ பரமசிவன்

காளைகள் அணி திரண்டனர்
காளைக்காக!

சூபர் ஸ்டாரோடு அந்த‌
பாட்டுக்கு
விசில் அடித்துவிட்டு
விழுந்து கிடக்கவா
ஓ தமிழா
நீ தோன்றினாய்!
உன் தோற்றமே
உலக நாகரிகத்தின்
மலர்ச்சி அடையாளம்.

மண்ணின் மணம்
கம்பியூட்டரில் இல்லை.
கார்பரேட்களின்
கல்லாப்பெட்டிகளிலும் இல்லை.
மக்களின் வெறும்
வியர்வை நாற்றம் அல்ல அது!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
துளிர்த்த வேர்வை...
மண்ணின் அமுதப்பிழம்பு!

மாட்டில்
மண் மேட்டில்
செடியில் கொடியில்
வயற்காட்டில்
பூவில் புழுவில்
உள்ள மெமரி சிப் களில்
மனிதனின் நிழலே
தமிழாய் அச்சாகி இருக்கிறது.

இயற்கையின் சீற்றம்
மனித சங்கிலி வடிவில்!
மானிடம்
மரத்துப் போன
பணங்காட்டு நரிகள்
ஒரு இனத்தின் மீது தொடுக்கும்
தந்திரமான அரசியல் போர் இது.
இதை முறியடிப்பதே
நமது இப்போதைய
தலைமுறைகளின்
"தலையாலங்கானத்துபோர்"

அடிமை சங்கிலிகள்
இற்று விழுந்து வெற்றி பெற்றதை
நம் "குடியரசு தின விழா"வாய்
கொண்டாட இருக்கிறோம்.
ஆனால் இந்த "ஜல்லிக்கட்டு"க்கு
ஏற்பட்ட தோல்வியை தான்
அந்த அலங்கார வண்டிகளின் அணிவகுப்புக்கு
தமிழ் நாட்டின் சார்பாக
அனுப்பப்போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மனித சங்கிலிப்போரில்
நாம் கோர்த்துக்கொண்டிருப்பது கைகள் அல்ல.
எரிமலை லாவாவை பொங்கல் இடும்
நம் தமிழ் இதயங்களே ஆகும்.

மக்களுக்காக வந்த சட்டம்
எப்படி மக்களின் மீது
பாறாங்கல்லாய் விழுந்து நசுக்க
அனுமதித்தார்கள்?

தமிழன் உளுத்துப்போனவன்
தமிழன் இற்றுப்போனவன்
என்று
வடவர்கள் சதுரங்கம் ஆடுகிறார்கள்.
தமிழா!
உனக்கு மதமும் கடவுளும்
தமிழ் தான்!தமிழே தான்!
தமிழின்றி வேறு இல்லை.
உன் மீது பூசப்பட்ட
மதச்சாயங்களும் சாதி வர்ணங்களும்
உடைத்து நொறுக்கப்படவே
இந்த "காளைகள் சீற்றம்"
இங்கே உருவகம் ஆகியிருக்கின்றன!

பொங்கல் திருநாளே
நம் தமிழ்ப்புத்தாண்டு!
ஒரு சொல் கூட "தமிழில்" இல்லாத
அந்த "அறுபது வருஷ" நுகத்தடியில் தான்
தமிழன் இன்னும்
விழி பிதுங்கி
மொழி குளறி கிடக்கவேண்டுமா?

சிந்தி தமிழா!சிந்தி!
அன்று சிந்து வெளியில் தமிழன்
சிந்திய மொழிகளே
இந்திய மொழிகள்.
உன் வரலாற்று ஏடுகளை
கிழிக்க முனையும் வெறியாளர்களை
வெற்றி கொள்ள‌
வீரம் கொண்டு நீ
"பொங்கலே"
நம் தமிழின் இனிய பொங்கல்.
என் இனிய தமிழ் மக்களே!
உங்களுக்கு என்
இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

=======================================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக