ஒரு புன்னகை.
___________________________________
சொற்கீரன்
சமுதாயத்தின் புயல்கள் கூட
குழந்தையின்
புன்னகைப் பூக்களைத் தான்
மிக மிக வேகமாகத்
தூவுகின்றன.
புரட்சிகளின்
ரத்தவெள்ளமும்
உயிர்ப்பலிகளுமா
குழந்தையின் சிரிப்பு?
சிரிப்பு என்றால்
மிக மிகக் குறைந்த
நரம்புகளின் கீற்று விரிப்புகளே
போதுமே?
இந்த சீற்றமும் ஆவேசமும் கூட
ஆயிரம் நரம்புகளைக் கொண்ட
ஒரு பேரியாழ்
இசைக்கும் போர்ப்பரணி அல்லவா.
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
. . . . . . . . . . ; ; ;
அந்த சீற்றத்தின் பின்னே
ஒரு மொத்த மனசாட்சியின்
புன்னகையும் புதைந்து கிடக்கிறது.
அட!மனிதா!உனக்கு வெட்கமாயில்லை?
உன் உடன் வாழும்
கோடிக்கணக்கான மக்களின்
உணவுகளையெல்லாம்
நீ ஒருவனே புசிப்பதை
சற்று எண்ணிப்பார்!
ஒரு சமுதாய ஓர்மை உன்னிடம்
இருக்குமானால்
நீ நாணி தலைகுனிந்து கொள்வாய்!
அப்போது
ஒரு குழந்தைச்சிரிப்பை போலவே
ஒரு மின்னலின் புன்னகை
உன் மீது பாய்ந்திருக்கும்.
இந்த யுகங்களையெல்லாம்
விழுங்கித் தீர்த்த
ஒரு பழமை என்பது கூட
கூர் தீட்டிய பொதுமையின்
சிந்தனையால்
கோரமுகம் கிழிக்கும் ஒரு
புதிய முகம் ஆகும்.
மறுபடியும் ஒரு சிலிர்ப்பான
புது யுகத்தை பிறப்பிக்கும்
அந்த குழந்தை ஒரு புன்னகையுடன்!
நம் பாதைகள்
இந்த வலிகளின்
இந்த மரணங்களின்
இந்த கொடுந்துயரங்களின்
இந்த ஒடுக்குமுறைகளின்
செங்கோல்களையெல்லாம்
முறித்துப்போட்டு விட்டுத்தான்
ஆயிரம் ஆயிரம் சூரிய மகரந்தங்களை
ஒரு சின்ன புன்னகைச்சுழிப்பில்
பூத்து வெடிக்கிறது.
வெடிக்கும்போது வெடிக்கட்டும்.
அண்டங்கள் அப்படித்தான்
"தொலைநோக்கி"களில்
புன்னகை காட்டுகின்றன.
____________________________________________________
04.03.2025 ல் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
தந்த கவிதை
தந்த கவிதை இது.
________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக