ஞாயிறு, 16 மார்ச், 2025

பனித்துளிக்குள்..

 


பனித்துளிக்குள்

_________________________________________


கிழக்கின் இமைவிரியும்போது

சூரியன் 

இன்று இந்த பூமி எப்படி

என்று

கொஞ்சம் நக்கிப்பார்த்த போது

குபீரென்று

ஏழு வர்ணப்பிரளயத்தில்

அந்த சுற்றுப்புறம் எல்லாம்

பசலை பூத்தது.

வானம் எனும் மங்கை

அப்போது தான் அந்த‌

குறுந்தொகையின்

ஏதோ ஒரு குறு குறுப்பான‌

வரிப்பிஞ்சுகளை

கடித்திருப்பாள் போலும்!

அது என்ன?

பனித்துளிக்குள் தான்

படுத்துக்கிடந்தது.

இரவெல்லாம்.

அதற்குமா கனவுகள்?

ஏன் அதற்குமா என்ற கேள்வி?

அந்த சன்னலை ஒட்டிய‌

படுக்கையறையில்

அப்போது தான் 

கொட்டாவி விட்டு

என்னது இது?

சனியன் பிடித்த வெயில்?

என்று சலித்துக்கொண்ட அந்த‌

இளவயது மங்கைக்கு

இஃது எல்லாம்

பல்லாயிரம் ஒளியாண்டு தூரமா?

நானும் ஒரு பெண் என்றோ

நான் ஒரு பெண்ணெ தான்

என்றோ

இன்னும் ஒரு மின்காந்த தேள் வந்து

கொட்டவில்லை.

அந்த வானவில் அவளுக்கு

ஒன்றுமில்லை.

அதென்ன சடை சடையாய் 

முருங்கைக்காய்கள்.

சாம்பார் வைத்து தின்றால்

கொள்ளை சுவை தான்.

இது தான் ஓடிக்கொண்டிருக்கும்.

உள்ளச்சிலிர்ப்புகளின்

வர்ணக்குழம்பு தோய்க்காத 

வறட்டுத்தூரிகை

கீறல்கள் தூவியவையே

அவள் தருணங்கள்.

இப்படி அவள் இன்னும்

வெளியே துலங்கவே பிடிக்காத‌

ஒரு ஓவியம்..

அல்ல அல்ல வெறும்

புகை மூட்டம்.

எப்போதும்

வெறுமைக்கு சதைப்பிடிப்பாய்

இறுகிய ஒரு மௌனம்.

அவள் அப்படித்தான்.

இதழ்கள் விரிந்து

இது தான் சிரிப்பு என்று

மொழி பெயர்த்து 

தந்ததே இல்லை.

பாறாங்கல்லாய்த்தான்

நினைத்தாள்

தலையணையை.

பஞ்சுபோல் 

பூ இலை நட்சத்திரங்கள்

என்று இருந்த போதும்

அவள் அதை எண்ணியது இல்லை.

படுத்தவுடன்

அவளும் ஒரு பாறாங்கல்.

தூங்கிப்போவாள்.

முழுத்தூக்கம்

இருட்டின் அட்டைக்களிம்பை

அப்படியே அப்பிக்கொண்டது போல்

அடர்த்தியான தூக்கம்.

இது தான் அவள்.

ஆனால்

அந்த கல்லும் ஒரு நாள் பூத்தது.

அன்று ஒரு நாள்

ஒரு குரல்

செல் ஃபோனில்

தேன் மழையாய் அவள் மீது

கொட்டியது.

.............

....................

அவள் அசையவில்லை.

ஏதோ ஒரு விளம்பரக்கம்பெனியில் 

இருந்து கொப்பளித்த‌

ஒரு குரல் தான்.

குரல் அருவி கொட்டிக்கொண்டே

இருந்தது.

ஆம்.

அவள் இன்னும் அசையவில்லை.

"ஹலோ மேடம்.

அப்புறம் ஆர்டருக்கு

கால் செய்யுங்கள்..."

அவள்

அந்த குரல்களைக்கூட‌

வாங்கிக்கொண்டாளா தெரியவில்லை.

அவளுக்கு மூச்சுத்திணறியது.

இந்த வீட்டுக்குள் எல்லாம்

ஒரு தேனாறு

நொப்பும் நுரையுமாய்...

வெள்ளம் வெள்ளம்...



(தொடரும்)

_________________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக