திங்கள், 24 மார்ச், 2025

"இருப்பியல்"

 "இருப்பியல்"

_______________________________________________


இருப்பு என்றால் என்ன?

உடனே

வங்கி இருப்பு என்று

கணக்கு போடுவதும் வாழ்க்கை தான்.

ஆனால்

ஆங்கிலத்தில் அடிக்கடி

அலசப்படும் இந்த சொல்

"எக்சிஸ்டென்ஷியலிசம்"

இருப்பு மட்டும் அல்ல‌

"இருப்பியல்"

மனிதம் தன் தடத்தை

நக்கிப்பார்த்துக்கொள்வது போல் தானே.

என்ன ருசி பார்ப்பதா தத்துவம்?

நாக்கால் அல்ல.

நாவால் ருசி பார்க்கும் சிந்தனைச்சூடு

சொற்களில் விறைத்து

பூமிக்குள் வேர் பிடிப்பது.

எதற்கு? ஏன்? எப்படி?

வந்தோம்

என்று கேள்விக்குவியல்களினுள்ளே

நொறுங்கல் சத்தம் கேட்கும்

எலும்பு சதை இத்யாதி

கிலுகிலுப்பைகளின் உள்ளொலியை

விரட்டி விரட்டி கேட்பது.

கடவுளிடம் கேட்டால் போயிற்று?

வேலை சுலபம்.

உற்றுக்கேளுங்கள்

வானத்து  பரமபிதா மற்றும் 

தேவகுமாரன்கள் 

உதிர்த்துக்கொள்ளும் வசனங்களை!

அவர்களுக்கும் இந்த கேள்விகள் தான்

பரிசுத்த ஆவி.

விசுவாசத்தோடு 

இதன் பதில்களை கத்தும்

தேவ ஆட்டுக்குட்டிகள் தான்

வேண்டும்.

பிரம்மம் என்றால் என்ன‌

என்று

வியர்க்க வியர்க்க 

தேடிக்கொண்டு

விலுக் விலுக் என்று

நம்மிடம் உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது

யார்?

பிரம்மன் தான்!

எல்லா மதங்களும் இப்படி

மனிதனிடம் பூப்பந்து எறிந்து

விளையாடுவது போல்

கேட்டுகொண்டிருக்கின்றன.

எதற்கு மதம்?

மதத்தின் இருப்பியல் என்ன?

மனிதனின் எல்லையற்ற‌

கணிக்கும் வேகத்தின்

குவாண்டக்கூர்மையை

அறிவியல் திரட்சியிலிருந்து

கொத்து கொத்தாக‌

தொங்கும் அந்த திராட்சபழங்கள்

நொதிக்கும் தோட்டத்தில் போய்

கேட்க வேன்டும்.

அவன் அந்த "ஃபூரியர் உருமாற்ற"

ஜபமாலையை உருட்டி உருட்டிச்சொல்லுவான்.

வாருங்கள் கேட்போம்

"இருப்பியலை"


____________________________________________________

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக