சொல்!
-----------------------------------------------------------------------------------------
தொல்காப்பியமும்
நன்னூலும்
தண்டியலங்காரங்களும்
எழுத்தும் சொல்லும்
முளை காட்ட உழுது தந்தவை
இன்னும் இந்த மண்ணில்
மகசூல் காட்டவில்லையே
என்ற நீண்ட நெடும் ஏக்கத்தின்
பெயரே
இங்கு தமிழுக்கு ஒரு பெயர்.
இலக்கணம் சொன்னால்
அந்த முரட்டுக்கம்பு வேலிகளுக்குள்
ஒரு ரோஜாவை பூக்க வைத்து
அதற்கும் காக்காய் குருவிகள்
வரக்கூடாது என்று
கவண்கல் எறிகிறாய்.
வேண்டாம்
வரிகளை
எப்படியோ முறித்து வளைத்து
அடுக்கி
அதற்குள் ஒரு கவிதைக்கு
அடுப்பு மூட்டு என்றால்
உன் பதிப்புகளுக்காக
பழைய பேப்பர் கடைக்காரன் வந்து
வாசலில் நிற்கிறான்.
சூடும் இல்லை சுரத்தும் இல்லை.
சொல்லுக்குள் எழுந்து நிற்பது
உயிர்த்த குருத்தெலும்புகள் இன்றி
உடைசல்களாய்
சில்லு தெறித்துக்கிடக்கின்றன.
இருப்பினும்
அங்கே பாருங்கள்.
சன்னல் கம்பிகளில்
நெற்றி தேய்த்து
விழி பிதுக்கி
காத்துக்கிடக்கிறான்
ஒரு மயில் பீலிக்கு .
எழுதி எழுதிக்குவிக்கவா?
இல்லை
வந்த பின்
எழுதி எழுதி என்னைக்
கிழித்துக்கொள்ளவா?
மின்னலே!
எது தான் அந்த சொல்?
சொல்.!
-------------------------------------------------------------------
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக