திங்கள், 31 மார்ச், 2025

கேள்வியா? விடையா?

கேள்வியா? விடையா?

___________________________________


வாழ்க்கையின் ஓரத்து

அந்திச்சிவப்பில்

எப்படி ஒரு

ஊதாப்பூ கண்சிமிட்ட‌

முடியும்?

காதலிப்பதற்கு 

பெண் வேண்டுமா என்ன?

அல்லது

ஆணின் ஆற்றல் குழைந்த‌

முறுவல் வந்து

முறுக்கேற்ற வேண்டுமா என்ன?

அந்த ஒரு மென் மரத்தில்

சரங்கோத்தாற்போல்

சிற்றிலைகளின் சங்கிலி

ஒன்று

காற்றில் ஆடும்போது

ஒரு ஊசிக்குருவி எனும்

தேன் சிட்டு

அதில் பின்னலிடும் அழகில்

தோய்ந்து தோய்ந்து

சொட்டு விடும்

தருணங்களையெல்லாம்

சேர்த்துப் பொறுக்கிக்கொண்டு

காகிதத்தில் 

நான் வரிகளை

ஊர்வலம் நடத்திய போது

வயதுகள்

அதோ வெகு தூரத்தில்

புகைந்து கொண்டு சிரித்து சித்து

அந்த "பால்கனியில்"

கைகளை ஆட்டி

வரவேற்கின்றனவா?

விடை கொடுக்கின்றனவா?

ஆம்.

பிறக்கும்போதே

கேள்வியோடு

வீறிட்டவனே!

ஆம்!

விடை கொடுக்கின்றேன்.

இதற்கான‌

கேள்வியைத்தேடு.

வானத்து மேகக்கூட்டங்களில்

அந்த "குமுக்" சிரிப்புகள்

கேட்கத்தான் செய்கின்றன?

அது "பொங்கி வரும் பெருநிலவு"

என்றான்....கவிஞன்.

அது

கேள்வியா? விடையா?


_____________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக