திங்கள், 10 மார்ச், 2025

டி எல் ஓ.

 



டி எல் ஓ.

____________________________________________


"அன்புள்ள...."


ஒரு வழியாய் துவக்கி விட்டேன்.

சொற்களை

அச்சு கோக்கும் எந்திரமா

உள்ளம்?

சமைத்து சமைத்து

பக்குவம் வந்து விட்டதா

என்று எச்சில் படுத்திய‌

தருணங்களில் 

எழுத்தின் ருசியில்

கண்ணியம் கழன்று போய் விடக்கூடாதே

என்று திடுக்கிடும் திருப்பங்களில்

முட்டி மோதிக்கொன்டு

வரி வரியாய் 

பூக்கட்டினேன் கடித மாலைக்கு.

முன் பின் அறிமுகம் இல்லாத‌

மின்னல் வெளிச்சங்களோடு

உள்ளே கசிந்த 

எண்ணக் குமிழிகளையெல்லாம்

ஏதோ சுமக்க முடியாத‌

வைரக்கிரீடங்களாக்கி

அந்த காகிதத்தில் பார்சல் கட்டுவது போல்

பாராக்காளை

பந்தி வைத்தேன்.

இந்த கடிதம் என்ன‌

அப்படி ஒரு பொல்லாத‌

இலக்கியமா என்ன?

அங்கே இங்கே படித்த‌

நாவல் புல்லரிப்புகள்.

அவள் சன்னமாய் முகம் சரித்து

எதிரே இமைப்புருசு குறு குறு வென்று

ஒரு பிக்காசோவாய்

இனிய கணப்புகளை

என் முகத்தில் ஓவியம் தீட்டி

அந்தி சிவப்பை பூசியதை

அப்படியே அங்குலம் அங்குலமாய்

நாற்று நட்டு விட்டேன் என்று

நடுக்கம் ஒரு யாழ் மீட்ட‌

எழுத்துக்களை ஓட விட்டேன்.

ஒரு வழியாய்

இப்படிக்கு 

அன்புடன் ...என்று

முடித்து

இரண்டாய் நாலாய் மடித்து

கவருக்குள் அடைத்து

அஞ்சல் பெட்டிக்குள்

உதறி விட்டேன்.

.......

...........

என்ன நடக்கும்?

எப்போது வரும்?

ஏதாவது ஒரு பார்க் பெஞ்சில்

ஒரு உசரக்கிளைக் காக்காவையே

உற்றுப்பார்த்து

அது 

கண்ணை மாற்றி மற்றிப்பார்ப்பதுபோல்

நானும் அதை லுக் விட்டு..

சரி.

அது யார் கையிலாவது கிடைத்து விட்டால்

என்ன செய்வது...

சுற்றுப்புறங்கள் எல்லாமே வெடவெடத்தது.

வியர்த்தது.

நல்லவேளை இப்போது தான்

ஞாபகம் வந்தது..

நான் தான் 

யாருக்கு 

யாரிடமிருந்து என்ற‌

முகவரியே எழுதவில்லையே!

மூளி வானத்திலிருந்தா

இடி விழப்போகிறது?


___________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக