வியாழன், 27 மார்ச், 2025

"எமக்குத்தொழில் கவிதை"

 

"எமக்குத்தொழில் கவிதை"

_______________________________


"எமக்குத்தொழில் கவிதை"

என்று இறுமாப்போடு 

சொல்ல முடியுமா என்ன?

கூர்ந்து நோக்கினேன்

அவன் கூர்மையான மீசையை.

முப்புரிநூலைக்கூட‌

இப்படி முறுக்கிக்கொண்டு

நிற்க முடியுமா என்ன?

முப்புரியாவது?

நாப்புரியாவது?

பிள்ளையாரைத் தாங்கிக்கொண்டு

இருக்கிற பெருச்சாளி முகத்து

மீசையைப்பாருங்கள்!

"கணபதி ராயன்...அவன்

காலைப்பிடித்திடுவோம்"

என்று பாடுபவனும் அவனே!

வாடா எமனே!

உன்னை என் காலால் எட்டி

மிதிக்கிறேன் என்று

கர்ஜித்தவனும் அவனே!

எதையாவது

எப்படியாவது

எழுதிக்கொண்டே இருப்பது தான்

அந்த எழுத்து மின்சாரமா?

வேதத்தை

ஒலி என்று போற்றுவதா?

அர்த்தம் சொல்கிறேன் என்று

அனர்த்தங்களை

கொட்டிக்கவிழ்த்துக்கொண்டே

இருக்கும்

இரைச்சல் பிண்டம் என்பதா?

எல்லாம் ஆழமாய் 

சொல்லிக்கொண்டே வந்தவர்கள்

மக்களை கூறு போட்டு

குதறுவதே பிரம்மம்

என்றால்

எப்படி கன்னத்தில் தட்டி

கும்பிட்டுக்கொண்டே இருக்க முடியும்?

ஊழா!

தூ...அதை அந்தப்பக்கம்

காறி உமிழ்

என்னும் வரிகளில்

எத்தனை அணுகுண்டுகள்

வெடிக்கின்றன‌

"அறியாமையின் மீது?"

குறள் வரிகளில்

குமுறல்கள் எத்தனை? எத்தனை?

கவிதைகள் 

திடீர் திடீர் என்று..

அந்த ஒடிசல் நாணற்புல்லையும் கூட‌

வாள் நிமிர்த்தி

அந்த வானத்தையும் 

கொஞ்சம் உரசித்தான் பார்ப்போமே

எங்கள் விடியலை

இப்போதே காட்டு என்று..

நரம்பு நாளங்களில்

கொஞ்சம் அக்கினி ஓடைகளையும்

நெளிய விட வேண்டும்!


______________________________________________‍

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக