வெள்ளி, 28 மார்ச், 2025

அது என்ன ஓவியம்?

 

மனம் 

ஒரு தெளிவு அடைந்த உருவகமாய்

பளிங்கு வானம்.

எதன் தீர்வு இது?

சமன்பாடுகள் சிதறலாய் உள்ளன.

மேகங்கள் அடைந்து 

நூல்கண்டு அவிழ்ந்து கிடந்தாற்போல்

திட்டு திட்டுகளாய்

இத்தனை அடைசல்கள் 

எங்கிருந்து வந்தன?

பல விதமாய் தரவுகள்

டிஜிடல் சுழிகளும்

வணிக்கூச்சல்களும்

அதனுள் தன் நச்சு நாக்குகளை

நீட்டி நீட்டி

தருண‌ங்களை விழுங்கிக்கொள்ளத்

துடிக்கும்

அரசியல் வக்கிரங்களும்

தூசிப்படலங்களாய் எழுகின்றன.

கடவுளும் மனிதனும்

வைக்கம் பஷீர் சிறுகளைகளில்

மின்னல் தெறிக்க வைக்கும் 

ஒலித்துடிப்புகளில்

மிழற்றும் ஆடும் 

அதை அரவணைத்துக்கிடக்கும்

மர நிழல்களுமாய்

விரவிய மனிதம் குழையும்

காட்சிகள் போல தெரியும் 

இலக்கியங்கள் எங்கே போயின‌

இப்போது?

மதம் எனும் கண்ணுக்குத்தெரியாத‌

அந்த கொடு வாள்

பலி கேட்டு கேட்டு

மின்னிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றுச் சான்றுகள் எல்லாம்

மூடத்தனத்துச்

சிதையில் அடுக்கப்பட்டு

தீ மூட்டப்பட்டு விட்டது.

மக்களுக்கு 

ஒரு மூட்டம் தான் தெரிகிறது.

அவர்களின் உரிமைகள் எனும்

அரண்கள் 

ஒவ்வொன்றாய்

அழிக்கப்பட்டு வரும் ஓர்மை கூட‌

இல்லாமல்

ஒரு இருட்டுப்பொதிவில்

மூட்டை கட்டப்பட்டுக்கொண்டு

இருப்பதும் கூட‌

உணர்வில் இல்லை.

எல்லாம் வரும்போது வரட்டும்

பார்க்கலாம்..

அல்லது

பார்த்துக்கொள்ளலாம்!

அச்சம் கீற்றுகளாய்

தீட்டிக்கொண்டிருக்கிறது.

அது என்ன ஓவியம்?

"கடைசி இரவுச் சாப்பாடா?"

நிகழ்ச்சி துலங்கவில்லை.

சட்டங்கள் மட்டும் தெரிகின்றன.

அது முறிந்து விழும் ஒலிகளோடு!


________________________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக