புதன், 26 மார்ச், 2025

அந்த கண்ணாடிக்கூண்டில்


என் மரணத்தை
அந்த கண்ணாடிக்கூண்டில்
இருந்து கொண்டு
எப்படி கவிதை எழுதுவது?
எப்படியாவது அங்கே மொய்க்கவரும்
ஈக்களிடம்
சொல்லியிருக்கிறேன்.
ரோஜா மாலைகளோடு வரும்
தேனீக்களிடமும் தான்.
நீண்ட புகைச்சுருள்களை
ஊதிவத்திகள் சுருதி கூட்ட‌
மௌனமாய்
பீத்தோவனின் 9 ஆம் நமபர்
சிம்ஃபோனி
அங்கே மிச்சம் மீதியிருந்த‌ என்
மூச்சுக்காற்றுப் பிசிறுகளோடு
பின்னலிடும்...
போதும்.
வீசியெறியும் எச்சிலைகளில்
எந்த பிரபஞ்சங்களின்
சோற்றுப்பருக்கைகள்
நட்சத்திரங்களாகும்
தெரியாது.
இருப்பினும்
நட்சத்திரங்களில் இருந்து கொண்டு
"ஜேம்ஸ் வெப்" மூலம்
இந்த உலகத்தை
தரிசிக்க ஆசை.
வேண்டுமானால் இதுவும் கூட‌
ஒரு குவாண்டம் டெலிபோர்டேஷன்
என்று எடுத்துக்கொள்வேன்...
வேறு எங்காவது
அடுத்த "குவா குவா:க்கள்
கேட்கும் வரை.
எரிந்து சாம்பலாவது வரை
அந்த பொய்மைகள்
நம்மை அடாது துரத்துகின்றன.
____________________________________________

சொற்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக