திங்கள், 17 மார்ச், 2025

கடல்நுரைகளும் கூழாங்கற்களும்

BY ERODU THAMIZHANPAN ...22.03.25


வண்ணங்கள்
தேர்ந்தெடுத்த வண்ணத்தின்பெயரில்
எந்தப்பூ பூத்திருக்கும்?
அது பூத்திருக்கும்
இடத்தில்
வாழ்வின் புன்னகை
வரவேற்பு அறையைத்
திறந்து வைக்குமோ?
வளைவுகள்
தேர்ந்தெடுத்த வளைவு எந்த
எழுத்திலே குடியிருக்கும்?
அது குடியிருக்கும்
இடத்தில்
ஓவியத் தமிழுறவெல்லாம்
ஒன்றாகக் குடியிருக்குமோ?
காவிய விடிவிருக்குமோ?
வாக்குறுதி
இல்லாத வாழ்க்கையிலே
இதயம்
எதில்நம்பிக்கை வைக்கும்?
அது நம்பிக்கை வைக்கும்
இடத்தில்
உறுதிகள் திறந்த கதவுகள்இருக்குமோ?
உள்ளே மாலைகள் ஏந்திய
வெற்றிகள் காத்திருக்குமோ?
நதிகள்
நாக்கில் பாட்டுகள் இருக்கும்
நடக்கும் அவற்றின் பாதத்தில்
ஆயிரம் புண்கள் இருக்கும்! புண்கள்
இடத்தில்
கடல்மார்பின் துடிப்புகள் இருக்குமோ?
காதல் வென்ற தால் தில்லானா
ஆடித் திருவிழா நடத்துமோ?
22-03-2025 காலை 5_50
தலைப்பு _காத்திருக்கும் வெற்றிகள்



_______________________________________________________________________________
BY ERODU THAMIZHANBAN..........20.03.2025




அதிகார இசை மையத்தில்
அடிபட்டுத் திரும்பிய
பாடல்
யார்மடியில் வந்துவிழும்?
யார் குரலில் அழுது புலம்பும்?
இசைத்தேர்
இரக்கமின்றி அதைக் கீழே
இறக்கிவிட்ட கவலை எப்போது
குறையும்?
குடியுரிமை
மறுத்து நாடுகடத்திவிட்ட
ஏழுசுரங்களும்
மனம் இரங்கவே இரங்காவா?
சபாவுக்கு வெளியே
சமோசா விற்பவன் உதடுகள்கூட
ஒதுங்குவதற்கு இடம் தரமாட்டாவா?
இருசொட்டுக் கண்ணீர்விட
ஒரு குழந்தை கையில் உள்ள குட்டிப்
பொம்மையையேனும் அனுமதிப்பார்களா?
செரிமான
மாத்திரைப் பைகளில் வயதானவர்கள்கூடக் கருணையோடு
இடம்தந்து
வைத்துக்கொள்ள மாட்டார்களா?
ஆர்மோனியப் பெட்டிச்
சுதிக்கட்டைகள் -பாடல்கள் உடன்கட்டை ஏறப் போட்ட
நெருப்பு
மேடைகளா?
மழலைப் பாட்டுக்கும்
மறுப்புச்சொல்லாத புன்னகைக்
கூடுகளா?
அரங்கங்களில்
அடிபட்டுத் திரும்பும் பாட்டு,
கண்ணீர் துடைக்கும்
தெம்மாங்கைத் தேடிப் போகிறது
தோற்ற நினைவுகளைப்
புதைத்துவிட்டு
ஏற்றப்பாட்டின் தோள்களை
அணைக்கத் தாவுகிறது
துக்கம் துடைக்கும்
தாலாட்டின் தாய்மைக் கதவை மெல்லத்
தட்டப்போகிறது
உள்ளத் துயருக்கு
ஒத்தடம் கொடுக்கும் ஒப்பாரிகளோடு
கைகோத்து
உட்காரப்போகிறது.
20-03-2025 முன்னிரவு 7-27
தலைப்பு
இசையின் அதிகார மையம்

எல்லா உணர்ச்சிகளும்
1







BY ERODU THAMIZHANBAN.
__________________________________________________________________

கவிதை சொல்கிறேன்
கேள்!
பூக்களிடம் காம்புகள் சொல்லாத
பூமியின் கவிதைகள்
என்னிடம் இருப்பில் இன்னும் உள்ளன
சொல்லவா?
மழைசொல்லாத வானம் பற்றிய
அந்தப்புரக் கவிதைகள்
என்னகத்தில் இன்னும் உள்ளன
சொல்லவா?
கவிதை சொல்கிறேன்
கேள்!
வேர்கள் வெளியிடா விழுதின்
கவிதைக்காடுகள் என்னிடம் உள்ளன
ஆழம் எழுதாத
கடலின் கவிதைகள் என்னிடம் உள்ளன
சொல்லவா?
மலைகள் புனையா உயரம் குறித்த
கவிதைகள் என் கைவசம் உள்ளன
சொல்லவா?
கவிதை சொல்கிறேன்
கேள்!
காற்றுத் தொட்டிராத திசைகளைத் திறக்கும்
கவிதைகள் என்னிடம் உள்ளன
சொல்லவா?
கொழுந்து நெருப்புக் குலங்கள்அறியா
மூலத்தணலின் கவிதைகள்உள்ளன
சொல்லவா?
கவிதை சொல்கிறேன்
கேள்!
உறக்க அணுக்கள் கோக்க முடியாத,
கனவின் அண்டங்கள் கோத்துக்கொடுத்த
கவிதைகள் என்னிடம் உள்ளன
சொல்லவா?
இறப்பை நீக்கிய
பிறப்பின் கருப்பை எழுதும் இரத்தக்
கவிதைகள் என்னிடம் உள்ளன
சொல்லவா?
19-03-2025 முன்னிரவு 7-25
தலைப்பு
கவிதை சொல்லவா?
22

கடல்நுரைகள் ... 4

சொல்!

-----------------------------------------------------------------------------------------

தொல்காப்பியமும் 

நன்னூலும் 

தண்டியலங்காரங்களும் 

எழுத்தும் சொல்லும் 

முளை காட்ட உழுது தந்தவை 

இன்னும் இந்த மண்ணில் 

மகசூல் காட்டவில்லையே 

என்ற நீண்ட நெடும் ஏக்கத்தின் 

பெயரே 

இங்கு தமிழுக்கு ஒரு பெயர்.

இலக்கணம் சொன்னால் 

அந்த முரட்டுக்கம்பு வேலிகளுக்குள் 

ஒரு ரோஜாவை பூக்க வைத்து 

அதற்கும் காக்காய் குருவிகள் 

வரக்கூடாது என்று 

கவண்கல் எறிகிறாய்.

வேண்டாம் 

வரிகளை 

எப்படியோ முறித்து வளைத்து 

அடுக்கி 

அதற்குள் ஒரு கவிதைக்கு 

அடுப்பு மூட்டு என்றால் 

உன் பதிப்புகளுக்காக 

பழைய பேப்பர் கடைக்காரன் வந்து 

வாசலில் நிற்கிறான்.

சூடும் இல்லை சுரத்தும் இல்லை.

சொல்லுக்குள் எழுந்து நிற்பது 

உயிர்த்த குருத்தெலும்புகள் இன்றி 

உடைசல்களாய் 

சில்லு தெறித்துக்கிடக்கின்றன.

இருப்பினும் 

அங்கே பாருங்கள்.

சன்னல் கம்பிகளில் 

நெற்றி தேய்த்து 

விழி பிதுக்கி 

காத்துக்கிடக்கிறான் 

ஒரு மயில் பீலிக்கு .

எழுதி எழுதிக்குவிக்கவா?

இல்லை 

வந்த பின் 

எழுதி எழுதி என்னைக் 

கிழித்துக்கொள்ளவா?

மின்னலே!

எது தான் அந்த சொல்?

சொல்.!

------------------------------------------------------------------- 

சொற்கீரன்.

















________________________________________________________________________________________


கடல்நுரைகள் ... 3

------------------------------------------------------------

(18-03-2025 ல் எழுதிய

ஈரோடு தமிழன்பன் அவர்களின்

கவிதைக்கு ஒரு கவிதையின்

வாழ்த்துப்பா இது!)

-------------------------------------------------------


உதடு வரை வந்து

திரும்பிப்போன சொற்களை

இத்தனை விதமாகவும்

உப்புக்கண்டம்

போட முடியுமா என்ன?

சொற்களின்

சொக்கப்பனை கொளுத்தி

ஆயிரம் ஆயிரம் வண்ணங்களை

காட்ட முடிந்த

நம் ஈரோடு தமிழன்பன்

அவர்களால் மட்டுமே

முடியும்!

தமிழ் ஏக்கமாய்

அவர் நெஞ்சில் அமர்ந்து

எதை உதிர்ப்பார்

எதை உயிர்ப்பார்

எதை வளைப்பார்

எதில் நுழைவார்

என்றல்லவா

உற்றுப்பார்த்து

தன உதடுகளையே

உச்சு கொட்டிக்

கொண்டிருக்கும்?

தமிழ் எனும் உள்ளம்

அவர் உள்ளக்கிடங்கில்

சுழித்து எழும்போதே

உணர்ந்து

இறும்பூது கொண்டது.

"இவன் சங்கத்தமிழ் தொகுத்தால்

ஆயிரம் யுகங்களுக்கு அல்லவா

தேன் சொட்டிக்கொண்டே இருக்கும்!

அதனால்

உதடு வரை வந்து

திரும்பும் விளையாட்டு

என்னிடம் நடக்காது.

கல் தோன்றி மண் தோன்றா

காலத்தேயும்

முன் தோன்றும்

என் சொல் தடம்

இவனுக்குத்தெரியும்!

என் எழுத்தின் ஓர்மை

இவனுக்குள்

எப்போதோ கருக்கொண்டு

உருக்கொண்டு

அதோ உலவத்ததும்புகிறது

பாருங்கள்!

அவன் நீடு நீடு வாழ்க !

இதோ பாருங்கள்

மூட்டை மூட்டைகளாக

அள்ளிக்கொண்டு வந்திருக்கிறேன்

நூற்றாண்டுகளை அவனுக்கு!

ஆம்!

அவன் நீடு நீடு வாழ்க ! "

--------------------------------------------------

சொற்கீரன்.

( ஒரு தமிழ் மாக்கடலின் 

கரையொதுங்கிய நுரைகளின் 

குரல்கள் இவை !)
















___________________________________________________________________________________



உதடுவரை

வந்த சொற்கள் திரும்பிப்போனதால்

யாருக்குக் கிடைக்கவேண்டிய அன்பு
கண்ணீர் விட்டது?
யாருக்குக் கிடைக்கவேண்டிய
தீர்ப்பு தீக்குளித்தது?
யார் வீட்டு வாசலில் துக்கவிசாரிப்புகள்
வாசல் நாற்காலிகளில் மவுனத்தை
உட்காரவைத்தன?
உதடுவரை
வந்த சொற்கள் திரும்பிப் போனதால்
யார் பதவி
தப்பித்துத் தோழர்களோடு
மதுக் கோப்பையில்
கொண்டாட்டக் கொடிஉயர்த்தியது?
யார் கண்களில்
முகவரி மறந்த கனவுகள் பகலிலேயே
முற்றுகை யிட்டன?
உதடுவரை
வந்தசொற்கள் திரும்பிப் போனதால்
நோய் வயிற்றில் இருந்த எத்தனை
உண்மைகள் செத்துப்பிறந்தன?
எத்தனை பொய்கள்
வாய்மை முத்திரையோடு நாட்டில்
வலம்வரத்தொங்கின?
உதடுவரை
வந்த சொற்கள் திரும்பிப் போனதால்
எத்தனை நிலாக்களை
இருட்டு விழுங்கியது?
எத்தனை அகல்களில் கண்ணீர்
எரிந்தது?
18-03-2025 காலை மணி-7
தலைப்பு- உதடுவரை வந்தசொற்கள்








கடல் நுரைகள் -3"

______________________________________________________________

சொற்கிரன் 


கடல் கடந்தான் கடந்தான் 
தமிழன் 
தடம் தெரிந்தானா? 
இல்லையா?

இது தான் இன்னும் 
இங்கே கேள்வி..

சங்கும் முத்தும் 
குளித்து எடுத்தவன்.
சங்கம் வளர்க்கத் 
தெரியலையா?

முதல் இடை கடை 
என்கிறார்.
மொழியின் வணிகம் 
எங்கே போனது?

அகமும் புறமும் நன்றே.
கலித்தொகையும்  நன்றே 
பத்துப்பாட்டெல்லாம்  இருந்தும் 
ஆரியமும் ஏன் தான் இங்கே?

புல்லும் புள்ளும் பாடும்.
கடலும் நுரையும் பேசும்.
காதலில் ஒளிந்த காட்சியில் 
மனிதன் எங்கே ஒளிந்தான்?

கரையான் தின்னவா தந்தான் ?
வாழ்ந்த தீயின் எழுத்துக்கள் 
எந்த நீரில் கரைந்தனவோ?
ஊழ் என்று உதிர்ந்தானோ?

முதலில்  வந்தவன் என்று 
பானைக்கீரலும்  எலும்புக்கூடும் 
பாடம் நடத்திய போதும் இவன் 
பாடம் ஏதும் கற்கலையே!

அவன் எழுத்தும் சொல்லும் 
எத்தனை எத்தனை சொல்லியும் 
மந்திரப்பிண்டம்  புரியலையே  
மக்கிப்போகவோ வந்துதித்தான்?




































Erode Tamilanban

1மநே 
சொல்ல நினைத்ததைச்
சொன்னானா? சொல்லாமலே போனானா?
தெரியவில்லையே!
பாடநினைத்ததைப்
பாடி முடித்தானா? பாதியிலே
முடிந்தானா?
தெரியவில்லையே!
சினக்கவேண்டியவை
சினந்தானா?அணைந்த கொள்ளி
ஆனானா?
தெரியவில்லையே!
கடக்க வகுத்ததைக்
கடந்தானா? நடுவில் உடைந்து
கிடந்தானா?
தெரியவில்லையே!
வெற்றி இலக்கினைத்
தொட்டானா?தொடாமல் நடுவில்
கைவிட்டானா?
தெரியவில்லையே!
உதட்டுக் குதூகலம்
ஒருநாள் ஒதுங்க விட்டானா?
உதறினானா ?
தெரியவில்லையே!
கருணைத்துளிகள்
கண்களில் தங்க விட்டானா?
துரத்தினானா?
தெரியவில்லையே!
17-03-2025காலை7-55
தலைப்பு-தெரியவில்லையே!

13

______________________________________________________________

கடல்நுரைகள்--2

______________________________________

சொற்கீரன்.

------------------------------------------

12.03.25-ல் 

ஈரோடு தமிழன்பன் அவர்கள் 

எழுதிய கவிதையில் ஒரு 

கவிதை.

------------------------------------------------


ஆப்பிள் துண்டுகளுக்குப் 

பக்கத்தில் 

அறுத்த கத்தியும் 

ஐந்தாறு ஈக்களுமே 

கண்டு பழக்கம் .

அந்த மொய்த்தலின் 

மென் துடிப்புகளில் 

நோய்கள் என்று 

அஞ்சிக்கிடப்பதுமே 

எங்கள் இலக்கியம்.

அந்த தட்டெல்லாம் 

ஆக்ஸ்  போர்டு 

எழுத்துக்களும் 

அண்டத்து 

வியப்புகளும்  வேர்வைகளுமாய் 

கணிதத்துண்டுகளின் 

கற்கண்டு பாளங்கள்.

விளங்காத விவிலியமும் 

வேதங்களும் 

சைத்தான்களையும் 

சாஸ்திரங்களையும் 

கோழை வடித்து சீழ்த்துக் 

கிடந்தன.

மனிதனைக் காட்டும்  

மனிதனுக்கு ஒளி காட்டும் 

என்று 

உற்றுநோக்கினால் 

கீற்றுகள் போட்டு 

வைத்திருந்தன அங்கே!.

ரத்தமாய்....சதைகளாய்..

சொட்டு சொட்டாய் 

அச்சம் வடித்து 

அறிவின்மையின் இருள் 

சிப்பம் சிப்பமாய் 

கிழிந்து தொங்கி....

போதும்.

ஆப்பிள் என்றால் 

இங்கே 

காதில் கண்ணில் 

ஜொள் விட்டு 

கரன்சிக்கடலை 

கடைவது தான்.

இந்த "கடை"யனுக்கு 

எப்போது 

"கடைத்தேற்றம் ?"


------------------------------------------------------------








ஃபீடு பதிவுகள்


அறுத்து வைத்த
ஆப்பிளின் துண்டுகளில்
பள்ளிப் பாடநூல்களின்
பரிந்துரைகள் இருந்தன
எனினும்
ஏழையர் கைகளுக்கு எட்டாத
தூரத்தில் இருந்தன
மருத்துவர்கள்
ஒவ்வொரு துண்டுக்குள் இருந்தும்
முகமலர்ச்சியோடு நலவாழ்வு பற்றிக்
குறிப்புகள் கொடுத்தனர்
குறிப்புகள் கிடைக்காதவர்கள்
கஞ்சித்தொட்டி அடியில் ஒடுங்கிப்
படுத்துக் கிடந்தனர்
மானுடத் தொடக்கமே
தன் சுவையில்தான் தொட்டில்
கட்டியதென்று ஆப்பிள்
வேதநூல்
பக்கத்தைத் திறந்தபோது
குடிசைகளின் கூரைகள்
ஓலைகளை இழந்து அம்மணமாகிவிட்டன .
ஆப்பிள் கீற்றுகளில்
புன்னகை உதடுகள் இருந்தன
நிலாவின் பிறைகள் இருந்தன
நாட்டிய பாவனை விரல்கள் இருந்தன
இல்லாத மக்களுக்கு
எதுவும் இல்லாமல் இருந்தது
தடுக்கப்பட்ட கனி
என்றுசொல்லப்பட்ட ஆப்பிளை
ஏதேன் இதுதேன் என்றது.
ஏதேன் ஆப்பிள்
தாக்குப்பிடித்துக் காத்திருந்து
நியூட்டனை அழைத்துப்
புவியீர்ப்புப்பாடம் நடத்தியது.
சாத்தான் நீட்டிய
உணவுத்தட்டில் ஆதாம் ஏவாள்
எலும்புகளோடு
ஆப்பிள் விதைகள் கிடந்தனவாம்
வேறு என்னென்ன கிடந்தனவோ
கிடைத்தனவோ
தொல்பொருள் ஆய்வு இன்னும்
தொடர்ந்து நடக்கிறது.....
12-03-2025 இரவு 9-5
தலைப்பு ஆப்பிள் நடத்திய பாடம்


ஈரோடு தமிழன்பன்

08.03.25 ல் எழுதிய கவிதை





உலகம்
திறந்துதான் கிடக்கிறது
ஒவ்வொரு நாளிடமும்
ஒவ்வோர் ஆளிடமும் நீ தான்
சாவி கேட்டுக்கொண்டிருக்கிறாய்.
ரோஜா
பூத்துக் கிடக்கிறது தோட்டத்தில்
வழியெல்லாம் விரல்கள்
உதிர்ந்து கிடக்குமோ என்று
நீதான் அஞ்சி
நடுங்கிக்கொண்டிருக்கிறாய்.
இருட்டை
ஏன் பிழைசொல்லவேண்டும்
விடியலைக்கொணரக்
கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக்கொண்டதற்காக.
நீயாக விடியலை
வடித்தெடுக்கும்வரை அதன்மேல்
பிழைபோட்டுப் பிழையேன்செய்வாய்?
செய்த தவறுகளைத்
திருத்தப் பார்!அவற்றைச் சிறுமைப்படுத்த
நீயே பெரிய தவறுகளை அழைத்துவந்து சீட்டுக்கட்டைப்
பிரித்துப்போட்டுப்
பியாணிப்பொட்டலம்
பிரிக்கிறாய்! நியாயமா?
சூரியநாட்டுக் குடியுரிமை
பெற்றவன்
மின்மினிப்பூச்சிகள் பின்னாலா
சுற்றிக்கொண்டிருப்பான்?
இருளிலும்
எம்மோடுமின்னலாம் வா
என்றழைக்கும் வானத்து உடுக்குலத்துக்கு
ஒப்பிப் பதில் கொடுக்காமல்
ஒளி மரித்துப்போன
அகல்விளக்கின் திரியோடு
என்ன உடன்படிக்கை போடுகிறாய்!
தலைப்பு
பிழைபோட்டுப் பிழைசெய்கிறாய்
8-3-25 காலை 5-45
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக