தோழர் நாராயணன் வாழ்க!வாழ்க!
_________________________________________________________
செங்கீரன்.
சிந்தனையின் பெருநெருப்பே !
உன்னை நினைவு கூர்வதற்கு
மட்டுமா
இந்த நாள்?
வெள்ளைக்காலர்கள் வர்க்கத்துள்ளும்
எரிமலைக்குழம்பை
தெள்ளிய கருத்தோட்டத்தின்
சந்தனமாய்
பூசி
சிலிர்க்க வைத்தவன் அல்லவா நீ!
பஞ்சப்படியும் போனசும்
மார்க்ஸ் காட்டிய வேர்வையின்
தேசப்படத்தில்
போர்முரசுகள் கொட்டாமல்
இருந்திருக்கலாம்.
ஆனால்
அதன் உரிப்பொருளும் கருப்பொருளும்
செவ்விலக்கிய திணை பற்றிய
அகவற்பாவை
கரத்தால் நரம்பெடுத்து
கருத்தால் திறம் தொடுத்து
பொங்கும் உழைப்பார் செங்கடலாய்
அலை யெடுத்து சீறவைத்தவன்
அல்லவா நீ!
காப்பீட்டு குமாஸ்தாக்கள்
என்று
பத்திரிகைக்கள் நமக்கு
புறம் காட்டவில்லை....அவை
முகம் காட்டி செவிமடுக்கச்செய்த
ஒற்றுமையின் உறுதியை
எங்களிடம் செதுக்கிய சிற்பி
அல்லவா நீ!
நாராயணன் என்ற
சிந்தனைப் பெருவெள்ளமே
உனக்கு
"திண்டுக்கல்"
வெறும் அடைமொழி அல்ல.
பொதுவுடமைச்சித்தாந்தத்தின்
வைரக்கல் பளிச்சிட்ட
செம்மைத்தலம் அல்லவா அது.
எங்களுக்கு
செறிவூட்டிய ரேடியக்கதிர்வீச்சின்
உன் சிந்தனைக்கிடங்கு அல்லவா அது.
பாரதப்போருக்கு வேண்டுமானால்
"பாம்பும் கருடனும்"
வியூக்ங்கள் கொடுக்கலாம்.
எங்களுக்கு
நீ அமைத்த வியூகங்கள் எல்லாம்
உலக வரலாற்றின் சந்து பொந்துகள் தான்.
உழைப்பாளர் உள்ளத்து
எஃகு தோட்டங்களின் பூக்களிடையே
முகிழ்த்து வரும்
இதயத்துடிப்புகள் தான்.
உன் சொற்பெருக்கின் ஆற்றுப்படை
எங்களுக்கு என்றும்
எழுச்சி மிக்க இலக்கியம் தான்.
உன்னை நினைப்பதே
எங்களுக்குள் நாங்கள் கட்டிக்கொள்ளும்
ஒரு "கல்பாக்கம்."
நீ என்றுமே வாழ்க! வாழ்க!
எங்கள் நினைவுளின்
பெட்டகமும் நீ தான்~!
புத்தகமும் நீ தான்!
____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக