திங்கள், 17 மார்ச், 2025

கடல்நுரைகள் ... 3

 கடல்நுரைகள் ... 3

------------------------------------------------------------

(18-03-2025 ல் எழுதிய

ஈரோடு தமிழன்பன் அவர்களின்

கவிதைக்கு ஒரு கவிதையின்

வாழ்த்துப்பா இது!)

-------------------------------------------------------


உதடு வரை வந்து

திரும்பிப்போன சொற்களை

இத்தனை விதமாகவும்

செப்பு வைத்து 

இப்படி விளையாட முடியுமா என்ன?

அதுவும்

இத்தனை இனியப் பிரளயமாய்!!

சொற்களின்

சொக்கப்பனை கொளுத்தி

ஆயிரம் ஆயிரம் வண்ணங்களை

காட்ட முடிந்த

நம் ஈரோடு தமிழன்பன்

அவர்களால் மட்டுமே

முடியும்!

தமிழ் ஏக்கமாய்

அவர் நெஞ்சில் அமர்ந்து

எதை உதிர்ப்பார்

எதை உயிர்ப்பார்

எதை வளைப்பார்

எதில் நுழைவார்

என்றல்லவா

உற்றுப்பார்த்து

தன உதடுகளையே

உச்சு கொட்டிக்

கொண்டிருக்கும்?

தமிழ் எனும் உள்ளம்

அவர் உள்ளக்கிடங்கில்

சுழித்து எழும்போதே

உணர்ந்து

இறும்பூது கொண்டது.

"இவன் சங்கத்தமிழ் தொகுத்தால்

ஆயிரம் யுகங்களுக்கு அல்லவா

தேன் சொட்டிக்கொண்டே இருக்கும்!

அதனால்

உதடு வரை வந்து

திரும்பும் விளையாட்டு

என்னிடம் நடக்காது.

கல் தோன்றி மண் தோன்றா

காலத்தேயும்

முன் தோன்றும்

என் சொல் தடம்

இவனுக்குத்தெரியும்!

என் எழுத்தின் ஓர்மை

இவனுக்குள்

எப்போதோ கருக்கொண்டு

உருக்கொண்டு

அதோ உலவத்ததும்புகிறது

பாருங்கள்!

அவன் நீடு நீடு வாழ்க !

இதோ பாருங்கள்

மூட்டை மூட்டைகளாக

அள்ளிக்கொண்டு வந்திருக்கிறேன்

நூற்றாண்டுகளை அவனுக்கு!

ஆம்!

அவன் நீடு நீடு வாழ்க ! "

--------------------------------------------------

சொற்கீரன்.

( ஒரு தமிழ் மாக்கடலின் 

கரையொதுங்கிய நுரைகளின் 

குரல்கள் இவை !)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக