புதன், 5 மார்ச், 2025

நீ.

 

நீ.

________________________________


வறுமையினும் 

கொடிது கொடிது

சிந்தனை வெறுமை.

நிகழ்வுகள் சக்கரம்

தேய்ந்து தெய்ந்து

புண்ணாகிப்போனது 

தடம் யாவும்.

வலியும் துயருமே

மிச்சம்! மிச்சம்!

பழங்கருத்துக்கள் 

ஊசிபோனதில்

கிழக்கின் விடியலில்

எப்போதும்

நாற்றம் நாற்றம் 

நாற்றமே தான்.

புதிய தேவன் 

என்று வருவான் என‌

ஜபக்கூடங்களில்

தினம் தினமும்

முணு முணுப்புகளின்

சங்கீதம்.

அன்றே எல்லாம்

சொல்லிவிட்டது.

அந்த வேதம்

நாலுமே

நம் தர்மம்.

சாதிகள் பிளந்து

சாத்திரம் சொன்ன‌

வழி தான் நமக்கு 

"கதி மோட்சம்" என‌

புழுக்களாய் நெளிந்து

அழிவது ஒன்றே

நமக்கு வழி எனும்

முட்டுச்சந்தா

நம் கோவில்?

கடவுள் என்று

நம் கையில் கொடுத்த‌

மரப்பாச்சியா

நம் தீர்வு?

மந்திரம் என்று

தந்திரம் செய்து

மடக்கி வைப்பதா

நமை என்றும்?

அறிவின் ஒளியை

அவித்து வைத்து

ஆத்மா என்றும்

பூதம் என்றும்

நிழல்கள் காட்டி

மறைப்பதனாலே

மறைந்திடுமா

சிந்தனை எனும்

உயிரோட்டம்?

சிந்தனை யில்லா

வாழ்க்கையிலே

பிண‌மாய் வீழ்ந்து

அழுகிடவா

மானிடம் என்றொரு

விசை ஆனாய்?

அண்ட வெளியும்

உன் விரலில்

அசைவது நீயும்

அறிவாயோ?

வாழ்வே என்றும்

மாயம் தான் என‌

பூச்சி காட்டும்

புல்லர்கள்

புறமுதுகிட்டு

ஓடிடவே

அறிவியல் 

வெளிச்சம்

அலை வீசும்.

செவ்வாய்க் கோளும்

சனிக்கோளும்

நம் வீட்டுத்திண்ணைக்

கூடங்கள்.

புதிது புதிதாய்

பூமிகள் கண்டு

வியக்க வைக்கும்

விஞ்ஞானம்

நம்மிடம் உண்டு

அறிவாய் நீ!

பக்திச்சூடம் 

கொளுத்தி நீயும்

கரைந்தது போதும்

விழித்தெழு நீ!

விரைந்தே வீழும்

மத மூட்டம்!

விரைவாய்

எழுவாய் 

மனிதா நீ!


________________________________

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக