வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

வயநாடு

 வயநாடு

___________________________________


இயற்கைச்சீற்றம்.

பேரிடர்.

இதெல்லாம் இந்த‌

மண்சரிவுகளின் 

மலை பூராவும் குடல் சரிந்து

கிடக்கும் காட்சிகளின்

மொழி பெயர்ப்புகளா?

மேக வெடிப்பு எனும்

புதிய வானிலைச்சொற்களின்

சிப் கிழிந்து

இந்திய மக்களின்

மனசாட்சிகளையெல்லாம்

பிறாண்டி ரத்தம் சொட்டச்செய்து

கொண்டிருக்கிறது.

அரசியலின் கோரமும் ஆபாசமுமாய் 

மானிட நேயம் 

இங்கே

கருப்பை சிதைந்து 

கூழாகிக்கிடக்கிறது.

கடவுள் தேசம் என்று

தமுக்கு 

கொட்டிக்கொண்டிருந்தவர்கள்

கடவுளே

கை வேறு கால் வேறாய்

உடல் சிதற

சவக்கிடங்காய் காட்சி தரும்

நிலை கண்டும் கூட‌

"இவர்களுக்கு நன்றாய் வேண்டும்"

என்று பல்லை நற நறக்கும்

அரக்கத்தனமும் இங்கே

அரங்கேறுவதை பார்க்கும் போது

அந்த மலை இடுக்கெல்லாம்

ரத்தக்கண்ணீர் தான்.

ஜனநாயகம் வெறும் கூக்குரல் அல்ல.

கோடி கோடி மக்களின்

உள்ளங்களிலிருந்து

உதவும் கரங்களின்

ஊற்றுகள் சுரக்கட்டும்.

துயர் துடைப்போம் வாருங்கள்.


______________________________________________

செங்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக