திங்கள், 19 ஆகஸ்ட், 2024

மனிதா...மனிதா

 மனிதா...மனிதா

___________________________________

சொற்கீரன்



மனிதா...மனிதா

இப்படி உனக்கு மகுடம் 

சூட்டப்படும் தகுதி

உன்னிடம் உள்ளதா?

பரிணாமம் என்னும்

உள்ளுறைந்த விசை

இன்னும் உன்னை உயர்த்த‌

உயர்த்த வில்லையே.

மனிதர்களோடு மனிதர்களாக‌

நீ கலந்து கொண்டதில்

ஒரு பண்டமாற்றம் எனும்

முறை

எப்படி உன்னை

மீண்டும் விலங்கு உலகத்துக்கு

தள்ளியது?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்ற வெளிச்சம்

எப்படி வெறும் லாபம் 

என்னும் கும்மிருட்டாகக்

குறுகிப்போனது.

இந்த சமுதாய வாழ்வைக்கூட‌

சூதாட்டக்களமாக ஆக்கி

பங்கு மூலதனப் பகடைகளை

நீ

உருட்டத்தொடங்கியதில்

எத்தனை எத்தனை தலைகள்

உருண்டன என்பதை

உணர்ந்தாயா?

காற்றில் ஊதிய பெருங்குமிழிகளாய்

பணங்களின் புற்று நோய்ப்

பெருக்கம் தானே

இந்த உலகத்து பசி பட்டினி

மற்றும்

வெறிமழை பெய்யும் போர்களுக்கும் கூட‌

காரணம் ஆகியிருக்கிறது.

கடவுள்கள் கூட‌

சொர்க்கம் என்று சோப்புக்குமிழிகளை

மிதக்கவிட்டார்கள்.

இருப்பவன் இல்லாதவ‌ன்

என்ற இடைவெளிக்குள்

மொத்த உலகமும் 

மனித முகவரி இன்றி 

இன்று

தொலந்து கிடப்பதை

ஓ!மனிதனே 

என்றாவது உன் சிந்தனையில்

அசை போட்டிருக்கிறாயா?

உன் கணினி அறிவு

மாபெரும் வியப்புக்குரியது தான்.

ஆனால் அதுவும் கூட‌

மனிதம் எனும் பசை அற்று

லாபம் எனும்

"வோர்ம் ஹோலுக்குள்"

காணாமல் போய்விட்டதோ?

ஓ மனிதா..

உன் விஞ்ஞானம்

அந்த "குவாண்டத்தோடு"

மோதிப்பார்ப்பதே தானே.

அந்த சோசியல் டைனாமிக்ஸில்

நீ நுழைய வேண்டியது

அந்த 

"பகுத்துண்டு ப்ல்லுயிர் ஓம்புதல்"

மட்டுமே என்பதை உணர்.

நம் விஞ்ஞானி வள்ளுவன்

சொன்ன அந்த குவாண்டம் தியரியை

என்றைக்கு சோதித்துக்காட்டுகிறாயோ

அப்போது தான் 

மனிதம் எனும் மகுடம் 

உனக்கு சூட்டப்படும்.

அது வரை வெறுமே

அந்த வெறி உமிழும் 

டைனோசார்களாக‌

அந்த ஜுராஸ்ஸிக் பார்க்கில்

உறுமிக்கொண்டிரு.


___________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக